world

img

மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் இதுவரை 510 பேர் பலி

மியான்மரில் அமல்படுத்தப்பட்டுள்ள ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 510 பேர் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் உலக நாடுகளிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 
மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்தி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து ஜனநாயகத்தை  மீட்டெடுக்க அந்நாட்டு மக்கள் முன்னெடுத்து வரும்  தன்னெழுச்சி போராட்டங்கள் ராணுவத்தினரின் அடக்குமுறையால் நசுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரே நாளில் 114 பேர் கொல்லப்பட்டனர். 
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 1ந்தேதியில் இருந்து போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய பல்வேறு தாக்குதல்களில்  சுமார் 510 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  மியான்மர் ராணுவத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
மியான்மரின் வடக்கு கரேன் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்கள், ஒரு குழுவாக ஆயுதம் ஏந்தி, ராணுவத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மியான்மர் ராணுவம், கரேன் மாவட்டத்தில் பழங்குடியின மக்களை குறிவைத்து, விமானங்கள் வாயிலாக வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து, கரேன் பழங்குடியின மக்கள் அண்டை நாடான தாய்லாந்துக்குள் அடைக்கலம் புகுந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் மியான்மர் ராணுவம் அடக்கு முறையை கைவிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன
 

;