world

img

30 நாடுகளில் பரவிய உருமாறிய லாம்ப்டா கொரோனா - தீவிரமாகக் கண்காணிக்கும் பட்டியலில் சேர்ப்பு

தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான பெரு நாட்டில் தற்போது புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. லாம்ப்டா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உருமாறிய கொரோனா லத்தீன் அமெரிக்க நாடுகள் உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 

இந்த லாம்ப்டா வைரஸ், இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா வகையை விட மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதாக மலேசியா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், லாம்ப்டா கொரோனாவால் உயிரிழப்புகள் பல மடங்கு அதிகரிப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.  இது கொரோனா அடுத்த அலையை ஏற்படுத்தக் கூடும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். 

அண்மையில் உலக சுகாதார நிறுவனம், லாம்ப்டா வகை கொரோனா வைரசை VARIANT OF INTEREST பிரிவில் சேர்த்திருக்கிறது. அதாவது தீவிரமாகக் கண்காணிக்க வேண்டிய வைரஸ் என இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த வைரஸ் குறித்த ஆய்வுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.   

பெரு நாட்டில் கடந்த இரண்டு மாதங்களில் உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளில் 82% லாம்ப்டா கொரோனா வகையால் ஏற்பட்டவை. மற்றொரு தென் அமெரிக்க நாடான சிலியில் 31% பேருக்கு லாம்ப்டா கொரோனா ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டில் இதுவரை ஆறு பேருக்கு மட்டுமே லாம்ப்டா கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இது எந்தளவு தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும், தடுப்பூசிகளின் செயல்பாடு உள்ளிட்டவற்றை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

லாம்ப்டா மாறுபாடு இந்தியாவில் இன்னும் கண்டறியப்படவில்லை, ஆசியாவில் இதுவரை அறிக்கை செய்த ஒரே நாடு இஸ்ரேல் தான். இருப்பினும், இந்தியாவுக்கு அடிக்கடி பயணம் செய்யும் பல ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் இங்கிலாந்து போன்றவை மாறுபாட்டைக் கண்டறிந்துள்ளன.

 

;