world

img

பிரேசில் ஜனாதிபதித் தேர்தல் : பிரச்சாரம் தொடங்கியது

பிரேசிலியா, ஆகஸ்டு 17- அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தல்களுக்கான பிரச்சாரம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியதாக பிரேசிலின் உச்சதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ஆளுநர்கள், 513 கீழவை உறுப்பினர்களும், 27 செனட் அவை உறுப்பினர்களும் தேர்வு செய்யப்படவுள்ளனர். ஆளுநர்கள் தேர்தலில் 185 வேட்பாளர்களும், செனட் அவைத் தேர்தலில் 192 வேட்பாளர்களும் களத்தில் இருக்கிறார்கள். ஜனாதிபதித் தேர்தலில் 12 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். தற்போதைய ஜனாதிபதி ஜெய்ர் போல்சானாரோ, முன்னாள் ஜனாதிபதியும், இடதுசாரிக் கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவருமான லூலா டி சில்வா, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சோபியா மான்சனோ உள்ளிட்டோர் அந்தப் பட்டியலில் அடங்குவார்கள். பிரதானப் போட்டி லூலாவுக்கும், போல்சானாராவுக்கும் இடையில்தான் இருக்கும் என்று  கடந்த ஓராண்டாகவே எடுக்கப்பட்டு வரும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஐபெக் என்ற நிறுவனம் தற்போது கடைசியாக எடுத்த கணிப்பில் லூலாவுக்கு ஆதரவாக 52 விழுக்காடு பதிவாகியுள்ளது. அவருக்கு அடுத்த இடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் போல்சானாரோ 37 விழுக்காடு வாக்குகளைப் பெறுகிறார்.

இந்தக் கணிப்புகளை வைத்துப் பார்த்தால், இரண்டாவது சுற்றுக்கான தேவை இல்லாமல், முதல் சுற்றிலேயே லூலாவுக்குப் போதுமான வாக்குகள் கிடைத்துவிடும் என்று தெரிகிறது. அதிகாரப்பூர்வமாக தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், “நமது நாட்டை மீண்டும் கட்டியமைப்பதற்கான முதல் படியே, இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதேயாகும். பிரேசில் ஒரு அற்புதமான தேசமாகும். அதனால்தான் இந்நாட்டு மக்களிடம் நம்பிக்கை வைத்துள்ளேன். நீங்கள் வைத்துள்ள தொடர்புகள் மூலமும், இந்த நாட்டின் தெருக்களிலும் நம்பிக்கைக்கான செய்தியை அனுப்புங்கள். அது நமது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும்” என்று டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில் லூலா டி சில்வா தெரிவித்துள்ளார். கருத்துக் கணிப்புகளைப் பொறுத்தவரை, அனைத்துமே இறுதிப்பட்டியல் தயாராவதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டவையாகும்.  சில வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். தற்போது போட்டியில் உள்ள 12 பேர் என்று வருகிறபோது, லூலாவுக்குத் தெளிவான வெற்றி கிடைக்கும் என்று சில ஆய்வு நிறுவனங்கள் தங்கள் கணிப்புகளில் தெரிவித்துள்ளன. 12 பேர் கொண்ட பட்டியல் வெளியானபிறகு, சில ஆய்வு நிறுவனங்கள் மக்களிடம் கருத்துக் கேட்டு வருகின்றன. அதன் முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

;