world

img

ஆப்கனிலிருந்து 6.35 லட்சம் மக்கள் புலம்பெயர்வு

 ஐ.நா.சபை தகவல்

நியூயார்க்,செப்.21- ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர்  இந்த ஆண்டில் மட்டும் ஆப்கனிலிருந்து 6.35 லட்சம் மக்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டதாக ஐ.நா.சபை தகவல் தெரிவித்துள்ளது. ஐ.நா.வின் மனிதநேய விவகாரங்களுக்கான கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆப்கானிஸ்தானில் 2021 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வன்முறை, சண்டை, வறுமை ஆகியவற்றால் இதுவரை 6.35 லட்சம் மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துவிட்டனர். அதிலும் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் தலிபான் தீவிரவாதிகளுக்கும், தலிபான் எதிர்ப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டபின் காபூல் நகரிலிருந்து மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறியுள்ளனர். இதில் காபூலில் இருந்து வெளியேறிய மக்களில் 1,300 பேருக்கு ஐ.நா. சார்பில் உதவி வழங்கப்பட்டுள்ளது.

குனார் மாகாணத்தில் இருந்து புலம்பெயர்ந்த மக்களில் 9,300 பேருக்கு ஐ.நா. சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.இது தவிர உலக உணவுத் திட்டமும் ரேசன் பொருட்களை அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி வரை வழங்க உள்ளது. மைதான் வார்தாக் மாகாணத்தைச் சேர்ந்த 63 ஆயிரம் மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. புலம்பெயர்ந்து செல்லும் மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட உதவிகள் வழங்குவதோடு அவர்களின் உடல்நலன் சார்ந்த உதவிகளும் அளிக்கப்படும். மருத்துவப் பரிசோதனை, கொரோனா பரிசோதனை, தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றுக்கும் அதிகமான முன்னுரிமை வழங்கப்படும். பாதக்ஸான் மாகாணத்தில் உள்ள யாவான், ராகிஸ்தான் மாவட்டங்களில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சின்னம்மை தொற்று ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்கவும் ஐ.நா.சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;