world

img

சூடானில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்: துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலி

சூடானில் ஆட்சியை கவிழ்த்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
சூடானில் கடந்த 2019ஆம் ஆண்டு நீண்ட காலமாக சூடானை ஆட்சி செய்து வந்த ஒமர் அல் பஷீர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின், குடிமை அரசியல் தலைவர்கள் மற்றும் ராணுவ தலைவர்கள், சிக்கலான அதிகாரப் பகிர்வு உடன்படிக்கையின் கீழ் அந்நாட்டை நிர்வகித்து வருகின்றனர்.சூடானை, ஜனநாயகத்தை நோக்கி நகர்த்தும் வகையில் அந்த உடன்படிக்கை வடிவமைக்கப்பட்டது, ஆனால் கடந்த காலங்களில் பல முறை ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது சூடானில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தலைநகர் கார்தூம் உள்ளிட்ட பல பகுதிகளில்  சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்ற ராணுவ ஆட்சி வேண்டாம் என்று முழக்கமிட்டனர். அப்போது ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் , சுமார் 140 பேர் காயம் அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
சூடானில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலால் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இணைய சேவையும் தொலைபேசி சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் மத்திய வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ராணுவம் நடத்தும் மருத்துவமனைகளில், மருத்துவர்கள் அவசர தேவைகளைத் தவிர மற்ற பணிகளை மேற்கொள்ள மறுப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெயர் குறிப்பிடப்படாத இடங்களில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இதில் சூடானின் பிரதமர் அப்தெல்லா ஹம்தோக், அவரது மனைவி, அவரது கேபினெட் உறுப்பினர்கள், மற்ற அரசியல் தலைவர்கள் அடக்கம். அவர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் என அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை, ஆப்பிரிக்க யூனியன் ஆகிய நாடுகள் மற்றும் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.


 

;