world

img

வெள்ளத்தில் மிதக்கும் சீனாவின் ஹெனான் மாகாணம் - 12 பேர் பலி

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஹெனான் மாகாணத்தின் தலைநகர் ஜென்சூ கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்குச் சராசரியாக 60 சென்டி மீட்டர் மட்டுமே மழை பெய்யும் நிலையில், நேற்று ஒரு நாள் மட்டும் ஒரு மணி நேரத்தில் 20 சென்டி மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது.

இதனால் ஜென்சூ நகரமே வெள்ளக் காடானது. மஞ்சள் ஆறு மற்றும் ஹைஹே நதிகளின் துணை நதிகளின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டி ஓடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்த ஓடுவதால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. சுரங்க ரயில் பாதைக்குள் நீர்புகுந்த நிலையில், இடுப்பளவு நீரில் மக்கள் தத்தளித்த நிலையில் மீட்புப் படையினர் அவர்களைப் பத்திரமாக மீட்டனர். இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் போக்குவரத்து முற்றிலும் சீர்குலைந்துள்ளது. ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் ஒன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் ஹெனான் மாகாண அரசு தெரிவித்துள்ளது.

 

;