world

img

ஒரே சீனாதான்! அமெரிக்காவிற்கு சீனா எச்சரிக்கை

பெய்ஜிங், மே 12- இந்த பூமியில் ஒரே சீனாதான் என்றும், அந்தக் கொள்கையில் இருந்து தடம் புரள வேண்டாம் என்றும் அமெரிக்க அரசுக்கு சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவான் பற்றிய விபரக்குறிப்பு அமெரிக்கா அரசின் இணையதளத்தில் இடம் பெற்றிருக்கிறது. அதில், தைவான் விடுதலைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும், தைவான் சீனாவின் ஒரு அங்கம் என்ற சீன அரசின் நிலைபாட்டை அங்கீகரிக்கிறோம் என்றும் எழுதப்பட்டிருந்தது. தற்போது அந்த இரண்டு வரிகளும் நீக்கப்பட்டுள்ளன. இதைக் கடுமையாகக் கண்டித்துள்ள சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான சு பெங்லியான், “இதை வைத்துக் கொண்டு தைவான் பகுதியில் உள்ள சிலர் அமெரிக்க ஆதரவைப் பெற முயற்சிக்கிறார்கள். இது போன்ற முயற்சிகள், தைவான் சீனாவின் ஒரு அங்கம் என்பதை மாற்றி விட முடியாது” என்று எச்சரித்துள்ளார். ஆயுதம் விற்க முயற்சி சீனாவுடன் மோதல் போக்கை அதிகரிக்குமாறு தைவானை அமெரிக்கா ஊக்குவித்து வருகிறது.

சீனா படையெடுத்தால் அதை எதிர்கொள்ளும் வகையில் புதிய ஆயுதங்கள் தேவை என்றும், அவற்றைத் தன்னிடமிருந்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அழுத்தம் தந்து வருகிறார்கள். ஏற்கனவே நவீன ஆயுதங்கள் என்ற பெயரில் கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்கள் தைவானில் குவிக்கப்பட்டுள்ளன. ஆனால், சீனப் படையெடுப்பை எதிர்கொள்ள இந்த ஆயுதங்கள் பொருத்தமானதல்ல என்று  அமெரிக்கா கூறி வருகிறது. மோதல் போக்கை அதிகரித்துத் தனது ஆயுத விற்பனையை அதிகரிப்பதே அமெரிக்காவின் திட்டமாக உள்ளது. நீர்மூழ்கிக் கப்பல்களை சுட்டு வீழ்த்த ஹெலிகாப்டர்கள் அவசியம் என்று சொல்லி ஏராளமான ஹெலிகாப்டர்களை தைவான் தலையில் அமெரிக்கா கட்டியிருந்தது. தற்போது சீனாவுடன் மோதினால் அந்த ஹெலிகாப்டர்களை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்கள். தைவானும் புதிய ஆயுதங்களை வாங்குவதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளது.

ஆசியன் உறவு

சீனாவுக்கும், ஆசியன்(தென் கிழக்கு ஆசிய நாடுகள்) அமைப்புக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படுத்துவது அமெரிக்காதான் என்று கருத்துக் கணிப்பொன்றில் தெரிய வந்துள்ளது. சீன ஊடகம் ஒன்று நடத்திய கணிப்பில் பெரும்பாலான மக்கள் ஆசியன் அமைப்பு நாடுகளுடனான உறவை மேம்படுத்த விடாமல் அமெரிக்கா பார்த்துக் கொள்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.