world

img

கியூபா தீ விபத்து: மீட்புப் பணியில் ராணுவம் மற்றும் தொழிலாளர்கள்

கியூபாவின் மடான்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக கியூப ராணுவம், தீயணைப்புப் படையினர் மற்றும் தொழிலாளர்கள் தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பாக திடீரென்று வெடிக்கும் சத்தம் கேட்டு மடான்சாஸ் மக்கள் பெரும் திகில் அடைந்தனர். அவர்களது அச்சத்தை அதிகப்படுத்தும் வகையில் பெருந்தீ பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. தொழிற்சாலையில் இருந்த ஹைட்ரோ கார்பன் பெருந்தொட்டிகள்தான் வெடித்தன. இரண்டாவது தொட்டியில் இருந்து வெளியான தீப்பிழம்புகள் மூன்றாவது தொட்டியிலும் நெருப்புப் பற்ற வைத்தன. முதல் இரண்டு தொட்டிகளில் இருந்து எரிபொருள் தீப்பிடித்தவாறு வெளியில் வந்ததால் பெருந்தீ மூண்டது.

முதல் மூன்று நாட்களும் மேற்கொண்ட முயற்சிகள் ஓரளவு பலனளித்தாலும் தீ கட்டுக்குள் வரவில்லை. மேலும் பரவுவதற்கான வாய்ப்புகள் இருந்துகொண்டே இருந்தது. இந்நிலையில்தான் ராணுவத்தினர் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் இறங்கினர். மடான்சாஸ் விரிகுடாவில் இருந்து நீரை எடுத்துக் கொண்டு, அடர்ந்த தீப்பிழம்புகளுக்கு மேல் பறந்தவாறு அந்த நீரைப் பாய்ச்சும் வேலையில் கியூப ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டன. பெரும் குழப்பமாக இருந்த நிலைமையை ராணுவத்தின் இந்தப் பணி ஒரு தெளிவைக் கொடுக்க வைத்திருக்கிறது.

ராணுவத்தினரின் இந்தப் பணியை கியூபாவின் ஜனாதிபதி மிகுவேல் டியாஸ் கானல் பெரிதும் பாராட்டியுள்ளார். இது பற்றிக் குறிப்பிட்ட அவர், "இந்த நேரத்தில் கியூபா புரட்சிகர  ராணுவத்தின் ஹெலிகாப்டர் விமானிகள் பாராட்டுதலுக்குரிய பணியைச் செய்திருக்கிறார்கள். மிகவும் வெப்பத்துடனும், பெரும் புகையால் ஏற்பட்ட அடர்த்தியான கருமையுடனும் காணப்பட்ட பகுதி மீது பறந்து தங்கள் சூரத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களின் அர்ப்பணிப்பு நிறைந்த பணி அபாரமானது" என்று தெரிவித்துள்ளார்.

இவ்வளவு பெருந்தீ ஏற்பட்ட நிலையிலும், அந்தத் தொழிற்சாலையில் இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளால் ஒருவர் மட்டுமே உயிரிழந்தார். 125 பேர் காயமடைந்தனர். அவர்களில் 24 பேர் இன்னும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் ஐந்து பேர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர். மிகவும் கவனமாகக் கவனிக்கப்பட வேண்டியவர்கள் என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ள 17 பேருக்கு சிறப்பு சிகிச்சை தரப்பட்டு வருகிறது. தீயணைக்கும் பணியில் கியூபாவின் அரசுடன், மெக்சிகோ மற்றும் வெனிசுலாவில் இருந்தும் தீயணைப்புப் படை வீரர்கள் இயங்குகிறார்கள்.

;