world

img

கோக்க கோலாவை ஒதுக்கி வையுங்கள்..!  தண்ணீரை குடியுங்கள் ! -  கிறிஸ்டியானோ ரொனால்டோ அதிரடி


பிரபல கால்பந்தாட்ட வீரரும் போர்ச்சுகல் அணியின் கேப்டனுமான கிறிஸ்டியானோ ரொனால்டோ  பத்திரிகையாளர் சந்திப்பின் போது மேசையில் இருந்து கோக்க கோலாவை ஒதுக்கி வைத்து விட்டு தண்ணீரை தன் முன் வைத்தார். இது உலகளவில் சமூக ஊடகங்களில் வைரலானது. இதனால் பங்கு வர்த்தகத்தில்  கோக்க கோலாவிற்கு  இந்திய மதிப்பில் 29,337 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.


ஐரோப்பிய ஒன்றிய கால்பந்து சங்கத்தின் உலக புகழ் பெற்ற யூரோ கோப்பை கால்பந்து போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று  நடந்த போர்ச்சுகல் மற்றும் அங்கேரிக்கு எதிரான போட்டியில் 3-0 என்ற கணக்கில் போர்ச்சுகல் அணி வெற்றி பெற்றது. அதன் பின்னர் போர்ச்சுக்கல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரது மேசை மீது இரண்டு கொக்க கோலா பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தது. அதனை மேசையின் முன்னிருந்து அகற்றினார். பின்னர் அந்த இடத்தில் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்தார். பின்னர் அந்த தண்ணீர் பாட்டிலை தூக்கி காண்பித்து அதனை தனது அருகில் வைத்து கொண்டார்.


 இதன் மூலம் கோக்க கோலாவை ஒதுக்கி வையுங்கள். தண்ணீரை குடியுங்கள் என அவர் அறிவுறுத்தியது சமூக ஊடகங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து கோக்க கோலாவின் மதிப்பு பங்கு சந்தையில் கடகடவென சரிய துவங்கியது.  கோக்க கோலா தான் ஐரோப்பிய ஒன்றிய கால்பந்து சங்கம் நடத்தும் யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்ஸ்சர் ஆகும். ஆனாலும் மிக தைரியமாக அதனை அகற்றியது உலக கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.


இந்நிலையில்  பங்குச்சந்தை திறந்தபோது கோக்க கோலாவின் ஒரு பங்கின் மதிப்பு 56.10 டாலர்களை நெருங்கியது. இந்த நிகழ்வு நடந்த 30 நிமிடங்களில் அது 55.22 டாலர்களாக குறைந்தது. இதனால் இந்திய மதிப்பில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் அந்நிறுவனத்திற்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. 


கிறிஸ்டினோ ரொனால்டோ ஏற்கனவே கொக்க கோலா உள்ளிட்ட குளிர்பானங்களுக்கு எதிரான தனது நிலையை பல்வேறு முக்கிய தருணங்களில் குறிப்பிட்டு வந்திருக்கிறார். மேலும் ஜங்க் புட் போன்ற நொறுக்கு தீனிகளுக்கு எதிராகவும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பேசி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

;