world

img

தீக்கதிர் உலகச்செய்திகள்..

காபூல்

நகைச்சுவைக் கலைஞர் கொலை

ஆப்கானிஸ்தானில் பிரபல நகைச்சுவை திரைக்கலைஞர் நாசர் முகமது சில நாட்களுக்கு முன்பு கொல்லப்பட்டார். உலக அரங்கில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் படுகொலைக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். அவர் தங்களுக்கு எதிராக செயல்பட்டதால் கொலை செய்தோம் என்று தலிபான் அமைப்புகூறியுள்ளது. அவரை சிறைபிடித்தபோது தப்பிச் செல்ல முயன்றார்; எனவே அவரை சுட்டுக் கொன்றோம் என்று கூறியுள்ளனர். முன்னதாக இந்தப் பிரச்சனை எழுந்த போதுஅவர் கொல்லப்பட்டதற்கு நாங்கள் காரணமல்ல என்று தலிபான்கள் கூறியிருந்தனர்.

                       ********** 

வெலிங்டன்

‘பாலினம் மாறுவது ஆபத்து’

மாற்றுப் பாலினத்தவர்கள் தங்களை பாலின ரீதியாக மறுமாற்றம் செய்துகொள்ளும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவர்களது உயிருக்கே ஆபத்தாக முடிகிறது என்று நியூசிலாந்து அரசு கூறியுள்ளது. அந்நாட்டில் இத்தகைய மாறுதலுக்கான பல்வேறு வகையான சிகிச்சை முறைகளுக்கு தடைவிதித்து சட்டமசோதா முன்மொழியப்பட்டுள்ளது. எந்தவொரு மனிதனின் பாலின அடையாளத்தை தவறான நம்பிக்கையின் அடிப்படையில் மாற்றிக்கொள்ள முயற்சிப்பது ஆபத்தானதாகும் என்று அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் கிரிஸ் பபோய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

                       ********** 
துபாய்

நான்காவது அலை

மத்திய கிழக்கிலுள்ள 22 நாடுகளில் 15ல் தற்போது டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது மத்திய கிழக்கு நாடுகளில் நான்காவது அலை தொற்று பரவலுக்கு காரணமாகியுள்ளது என்றும் கடந்த நான்கு வார காலத்தில் 3,10,000 பேருக்கு புதிதாக தொற்று பாதித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் 3500 மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. 

                       ********** 

மாஸ்கோ

விண்வெளியில் விபத்து

விண்வெளியில் நிலைநிறுத்தப் பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையம்(ஐஎஸ்எஸ்), அதனுடன் புதிதாக இணைந்து கொள்வதற்காக ரஷ்யாவால் அனுப்பப்பட்ட நவ்கா எனும் ஆராய்ச்சி கலன்,இணையும்போது லேசான தீ விபத்து நேரிட்டதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. சர்வதேச விண்வெளி நிலையமே 45 டிகிரி அளவிற்கு தன்நிலையிலிருந்து திரும்பிவிட்டது. இந்நிலையில் அமெரிக்காவின் விண்வெளிஆராய்ச்சி மையமான நாசா உடனடியாக செயல்பட்டு, சர்வதேச விண்வெளி நிலையத்தை மீண்டும் அதன் இயல்பு நிலைக்கு கொண்டுவந்து நிலைநிறுத்தியது. இந்த சம்பவத்தால் அங்கு உள்ள விண்வெளி வீரர்களுக்கு எந்த ஆபத்தும் நேரவில்லை என்று நாசா தெரிவித்துள்ளது.

                       ********** 

சிட்னி

ராணுவத்தின் பிடியில்...

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மாநகரம் சிட்னி. அங்கு கொரோனா வைரஸ் கட்டுப்பட்டிருந்த நிலையில் மீண்டும்சமீப நாட்களாக பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. வியாழனன்று 239 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. ஏற்கெனவே அங்கு கடந்த ஜுன் மாத இறுதியிலிருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் அரசுநிர்வாகத்தால் மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் சிட்னி மாநகர மக்களை ஊரடங்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பொருட்டு நகரின் பல பகுதிகளில் முதல் முறையாக ராணுவத்தை இறக்கியுள்ள ஆஸ்திரேலிய அரசு.

                       ********** 

ரியாத்

எல்லைகள் திறப்பு

கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களும் போட்டுக்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தனது எல்லைகளைத் திறந்துவிடுவது என சவூதி அரேபியா முடிவு செய்துள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் ஆகஸ்ட் 1 முதல் சவூதி அரேபியாவிற்குள் வரலாம். பெருந்தொற்று காரணமாக கடந்த 17 மாத காலமாக வெளிநாட்டுப் பயணிகளுக்கு சவூதிஅரேபியா மறுத்திருந்தது.  பைசர் , மாடர்னா,ஆஸ்ட்ராஜெனெகா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய - சவூதியால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி செலுத்தியவர்கள் தனிமைப்படுத்தல் இல்லாமல் சவூதிக்குள் வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்
கார்ல் லெவின் மறைவு
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்தவர் கார்ல் லெவின். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் மிக நீண்டகாலம் பணியாற்றிய மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். அமெரிக்க அரசு இராக் மீதானயுத்தத்தைத் துவக்கிய போது அந்த அவையிலேயே மிகக்கடுமையாக எதிர்த்த ஒரே நபர் இவர்தான். அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் மோசடிகளை எதிர்ப்பதே தனது லட்சியம் என்று தன்னைத்தானே அறிவித்துக் கொண்டவர் கார்ல் லெவின். தனது 87வது வயதில் வெள்ளியன்று அவர் காலமானார். 

                       ********** 

பிரேசிலியா

அச்சுறுத்தும் காலநிலை

காலநிலை மாற்றம் பல நாடுகளில் புதிய புதிய பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது. பிரேசிலில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல்முறையாக பல இடங்களில் பனிமழை பொழிந்து வருகிறது. இதைப் பார்க்கும் 60வயதிக்கும் மேற்பட்ட குடிமக்கள் தங்களது வாழ்நாளிலேயே இப்படியொரு பனிப்பொழிவை பார்த்ததில்லை என்று கூறுகிறார்கள். பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ, ரியோ பிராண்டே உள்ளிட்ட பல இடங்களில் திடீரென கடந்த சில நாட்களாக தட்பவெட்ப நிலை கடுமையாக வீழ்ச்சியடைந்து ஒரே இரவில் பனிபடர்ந்த நகரங்களாக மாறியுள்ளன. இது அந்நாட்டு மக்களுக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

                       ********** 

மணிலா

அமெரிக்க  ‘அடிமை’

பிலிப்பைன்ஸில் நீண்டகாலமாக அமெரிக்கப் படைகள் முகாமிட்டுள்ளன. ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிக முக்கிய ராணுவ தளமாக பிலிப்பைன்ஸ் இருந்து வருகிறது. எனினும் அதற்கு அந்நாட்டு மக்களிடையே தொடர்ந்து எதிர்ப்பும்நிலவி வருகிறது. இந்நிலையில் பிலிப்பைன்ஸ் அரசுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேராணுவ தளத்தை மூடுவது குறித்து சமீபகாலமாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்டர்டே அமெரிக்காவுடனான ராணுவ உறவை மீண்டும் புதுப்பித்துக் கொண்டுள்ளார். தங்களது நாட்டில் அமெரிக்கப் படைகள் தொடர்ந்து நீடிக்கும் என்று அறிவித்துள்ள அவர்,அதற்கான ஒப்பந்தத்தையும் புதுப்பித்துள்ளார்.

                       ********** 

வாஷிங்டன்

விசா விதிகள் தளர்வு

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றத்துறையின் சார்பில், வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கான எச்-1பி விசாக்களை வழங்குவதற்கான சில விதிகளுடன் கூடிய நடைமுறைகளை மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் இந்தியாவைச் சேர்ந்த தகவல்தொழில்நுட்ப வல்லுநர்கள் பல்லாயிரக் கணக்கானோர் பலன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்-1பி விசாக்களை வழங்குவதில் சமீபகாலத்தில் சில கடுமையான விதிகளை அமெரிக்கா அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

;