world

img

தீக்கதிர் உலகச்செய்திகள்...

வெளியேற்றம்

மாஸ்கோ:

ரஷ்யாவுக்கும் செக் குடியரசுக்கும் இடையே ராஜீயரீதியான பதற்றம் ஏற்பட்டுள்ளது. 2014ல் செக் குடியரசுநாட்டில் நடந்த ஆயுதக்கிடங்கின் வெடிப்பில் ரஷ்யாவுக்குதொடர்பு உள்ளது என செக் அரசு குற்றம்சாட்டியது. அதற்கு ஆதரவாக லித்வேனியா, லாத்வியா, எஸ்தோனியா, ஸ்லோவேகியா  உள்ளிட்ட ஏழுநாடுகள் ரஷ்ய தூதர்களை வெளியேற்றின. இதற்குப் பதிலடியாக இந்நாடுகளின்தூதர்களை மாஸ்கோவி லிருந்து ரஷ்யாவும் வெளி யேற்றியது.

                                **************

சூழ்ச்சி வலை

சிட்னி:

ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ராணுவ சூழ்ச்சித் திட்டங்களுக்கு உதவும் விதத்தில் தனது ராணுவ தளங்களை வலுப்படுத்துவதற்காக ஆஸ்திரேலிய அரசு 580மில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன், அமெரிக்காவுடனான போர்ப் பயிற்சிகளை மேலும் வலுப்படுத்தவும் முடிவு செய்துள்ளார். இவை அனைத்தும் சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் நகர்வு களுக்கு உதவும் விதத்தில் மேற்கொள்ளப்படுவதாக சீனத் தரப்பு விமர்சித்துள்ளது.

                                **************

இதுதான் வழி

லண்டன்:

கொரோனா தடுப்பூசி யின்  ஒரு டோஸ் செலுத்தினாலே, அதன் பரவலை சரிபாதியாக குறைக்க முடியும் என்று கண்டறியப் பட்டுள்ளதாக இங்கிலாந்து பொது சுகாதார ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தடுப்பூசி செலுத்திய 14 நாட்களுக்குப் பிறகு, கொரோனா பரவலை தடுப்பதற்கான பாதுகாப்பு வளையமாக அது மாறுகிறது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 

                                **************

14000 ஊழியர்கள்

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனம் மிகப்பெரும் நட்டத்தில் சிக்கியுள்ளது. இதிலிருந்து அந்த நிறுவனத்தை மீட்க, எல்லா அரசுகளையும் போலவே தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்புவது என்று இம்ரான்கான் அரசு முடிவு செய்துள்ளது. 14 ஆயிரம் ஊழியர்களின் வேலை பறிக்கப்படு கிறது.

                                **************

ஈரான் கோரிக்கை

டெஹ்ரான்:

அமெரிக்கா - ஈரான் இடையிலான அணுசக்தி உடன்பாட்டை மீண்டும் அமலுக்கு கொண்டுவருவது தொடர்பாக மறைமுகமான பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளன. இந்நிலையில் இரு நாடுகளிடையே அந்தந்த சிறைகளில் இருக்கும் அவரவர் நாட்டவரை பொது மன்னிப்பு அளித்து, மனிதநேய அடிப்படையில் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை ஈரான் மீண்டும் எழுப்பியுள்ளது. 

                                **************

மீண்டும் பணியில்

லண்டன்:

பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத், தமது கணவரின் மறைவைத் தொடர்ந்து சில நாட்கள் விடுப்பில் இருந்தார். மீண்டும் அவர் தனது பொது அலுவலகப் பணிகளை துவக்கியிருப்பதாக பிரிட்டிஷ் அரண்மனை வட்டாரம் தெரிவிக்கிறது. மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப்,கடந்த ஏப்ரல் 9 அன்று தமது 99வயதில் காலமானார். 

                                **************

இரண்டு டோஸ்

மாஸ்கோ:

ரஷ்யாவில் 77லட்சம் மக்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறார்கள். 1.21கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும், 77 லட்சம் பேருக்கு இரண்டு டோஸ் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது.

;