world

ராணுவக் குற்றங்கள் அதிகரிப்பு

வாஷிங்டன், ஆக.11- மியான்மரில் அந்நாட்டின் ராணுவம் செய்து வரும் குற்றங்களுக்குப் பெரும் அளவில் ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு அம்பலப்படுத்துகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியைத் தூக்கி எறிந்துவிட்டு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மியான்மர் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டது.  பொது மக்கள் மீது பல்வேறு சட்டவிரோத அத்துமீறல்கள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. குறைந்தபட்ச உரிமைகளைக் கூட மறுக்கும் சூழல் ஏற்பட்டிருப்பதாக பொதுமக்களிடம் கருத்து எழுந்தது.  இதனால் மியான்மரில் உள்ள நிலைமை பற்றி ஆய்வு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் தனது குழுவுக்கு ஆணையிட்டது. மியான்மருக்கான ஐ.நா. சுயேச்சை விசாரணை அமைப்பை 2018 ஆம் ஆண்டிலேயே உருவாக்கியிருந்தார்கள். அந்த அமைப்பின் மூலம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 12 மாதங்களில், குற்றங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் பெரும் அளவில் அதிகரித்து விட்டன.  பிப்ரவரி 2021ல் இருந்தே மியான்மரின் பொது மக்கள் மீது திட்டமிட்ட வகையில், அதுவும் பரந்த அளவிலான குற்றங்கள் நடந்துள்ளன என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்படி, ராணுவத்தால் பெண்கள் மற்றும் குழந்தைகள் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளன. சித்ரவதைக்கு ஆளாகியுள்ளன. எந்தவித விசாரணையும் இல்லாமல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளன.  பாலியல் ரீதியான கொடுமைகளும் குழந்தைகள் மேல் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஆயுதப்படை வீரர்கள் இந்தக் குற்றங்களை செய்திருப்பதற்கான சான்றுகள் ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வுக்குழுவிடம் சிக்கியிருக்கிறது.  பேட்டிகள், அறிக்கைகள், ஆவணங்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான தகவல்களை ஆய்வுக்குழு சேகரித்திருக்கிறது. மியான்மர் மண்ணில் பெரும் கொடுமைகள் நிகழ்ந்திருப்பதை அவை உறுதிப்படுத்துகின்றன என்று ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

;