world

img

பத்திரிகையாளர் பி.சாய்நாத்துக்கு ஜப்பான் நாட்டின் உயரிய பரிசு....

பலகும்மி சாய்நாத்,

இந்தியா/இதழியல்,பத்திரிகையாளர் (பாரியின் நிறுவனர் மற்றும் ஆசிரியர்),

மே 13, 1957-ல் பிறந்தவர் (வயது 64).

இலட்சியப்பூர்வமான பத்திரிகையாளரான திரு.பலகும்மி சாய்நாத் வறுமையில் இருக்கும் இந்தியாவின் விவசாயக் கிராமங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். கிராமப்புற மக்களின் குரல்களை கேட்கிறார். அம்மக்களின் வாழ்க்கை யதார்த்தத்தை படம் பிடித்துக் காட்டுகிறார். கிராமத்து வாழ்க்கைக் கதைகளை செய்திகளாக்குகிறார். கொந்தளிப்பான மாற்றங்களுக்கு ஆசியா உள்ளாகிக் கொண்டிருக்கும் சூழலில், திரு.சாய்நாத் புதிய அறிதலை தேடி குடிமைச் சமூகத்தின் ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறார். இந்த காரணத்தினால், ஃபுகுவோகா பரிசின் உயரிய பரிசு பெறுவதற்கு மிகச் சரியானவராக அவர் இருக்கிறார்.

விருதுக்கான தகுதியுரை
உறுதிமிக்க பத்திரிகையாளரான திரு.பலகும்மி சாய்நாத், உலகமயமாக்கல் கொண்டு வந்திருக்கும் துரித மாற்றங்களுக்கு மத்தியில் வறுமை மிகுந்த இந்தியக் கிராமங்களில் காணும் வாழ்க்கைச்சூழல்களை செய்திகளாக்கித் தருகிறார். ‘கிராமப்புற இந்தியாவை பற்றிய மக்களுக்கான தகவல் பெட்டகம்’ என்ற அர்த்தம் தொனிக்கும் ‘People’s Archive of Rural India (PARI)’-ஐ 2014 ஆம் ஆண்டில் இணைய ஊடகமாக தொடங்கியதிலிருந்து, கிராம சமூகங்களின் பலதரப்பட்ட கலாச்சாரங்களை சேகரித்து பல்வேறு மொழிகளில் பரப்பும் முன்மாதிரியான வேலையை அவர் செய்து வருகிறார்.

சென்னையில் பிறந்தவர். குடும்பத்தின் பூர்வீகம் ஆந்திரா. அவரின் தாத்தா இந்தியாவின் நான்காவது ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி ஆவார். ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து ஃபுகுவோகா பரிசின் கல்வியாளர் பரிசை 1997 ஆம் ஆண்டு வென்ற, மிகச்சிறந்த வரலாற்றாய்வாளரான பேராசிரியர் ரொமிலா தாப்பரிடம் வரலாறு பயின்றவர்.பத்திரிகைத்துறையில் சேர்ந்து யுனைடெட் நியூஸ் ஆஃப் (யுஎன்ஐ) இந்தியாவில் பணிபுரிந்து பிறகு, ப்ளிட்ஸ் (Blitz) என்ற அரசியல் பத்திரிகையின் துணை ஆசிரியராக செயலாற்றினார். 1990களில் இந்திய சோசலிசம் என்றழைக்கப்பட்ட கலப்பு பொருளாதாரக் கொள்கையை சீர்திருத்தி, நவ தாராளவாத சந்தைப் பொருளாதாரமாக இந்தியா மாற்றியபோது சுயாதீன பத்திரிகையாளராக ‘‘ஏழை இந்தியாவின் முகம்’’ என்கிற தலைப்பில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் தொடர் எழுதினார். அவரின் பிரதான பதிப்பான ‘ஒரு நல்ல வறட்சியை எல்லாரும் நேசிக்கிறார்கள்’ (Everybody loves a good drought 1996) என்ற புத்தகம் இந்த தொடரின் 84 கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்து உலகப் புகழ் பெற்றது. 

ஐரோப்பிய ஆணையத்தின் லொரென்சோ நடாலி பரிசை இதழியலுக்காக 1995 ஆம் ஆண்டிலும் சர்வதேச மன்னிப்பு சபையின் உலக மனித உரிமை இதழியல் பரிசை 2000 ஆவது ஆண்டிலும், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் போயெர்மா பரிசை 2001 ஆம் ஆண்டிலும் ரமோன் மக்சேசே விருதை ஆசிய இதழியலுக்கு சிறந்த பங்களிப்பு அளித்தமைக்காக 2007 ஆம் ஆண்டிலும் அவர் பெற்றார்.வேலைப் போக்கு அற்புதமாக இருந்தபோதிலும் திரு.சாய்நாத்தின் அறிவை நோக்கிய தேடல் மட்டும் மாறவேயில்லை. கிராமங்கள்தோறும் தொடர்ந்து நடையாய் நடந்து மக்களிடம் பேசி யதார்த்தத்தை புகைப்படங்களாக்கி வறுமை மற்றும் இயற்கை பேரிடரின் யதார்த்த சூழல்களை வெளிப்படுத்துகிறார். 2004 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை ‘இந்து’ நாளிதழில் அவர் கிராமப்புறச் செய்திகளுக்கு பொறுப்பாசிரியராக பணியாற்றினார். “A Tribe of His Own: The Journalism of P. Sainath” (2002) மற்றும் “Nero’s Guests” (2009) ஆகிய ஆவணப்படங்கள் அவர் வேலை பார்க்கும் முறையை வெளிக்காட்டின. இப்படங்கள் சர்வதேச கவனத்தையும் பெற்றன. கிராமப்புற சீர்திருத்தத்தில் உறுதி கொண்டவரென்பதால் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள் ஆகியவற்றின் ஆலோசகராகவும் இருந்திருக்கிறார்.

திரு.பி.சாய்நாத்துக்கு ஜப்பான் நாட்டிலும் அனுபவம் உண்டு. 2003 ஆம் ஆண்டில் ஜப்பான் அறக்கட்டளை மற்றும் சர்வதேச ஜப்பான் சபை ஆகிய அமைப்புகளால் நடத்தப்பட்ட ஆசிய தலைமைத்துவ பயிற்சிப் பணி திட்டத்தின் கீழ், 2003 ஆம் ஆண்டில் அவர் பயிற்சிப் பணிக்காக வந்தார். பலரை சந்தித்தார். கியோடோ, ஒசாகா மற்றும் ஹிரோஷிமா போன்ற பல இடங்களுக்குச் சென்றார். அவரின் முக்கியமான புகைப்படங்களை கொண்டு நடத்திய கண்காட்சிகளில் பெரும் புகழ் ஈட்டினார். 2019 ஆம் ஆண்டில் மீண்டும் அவர் ஜப்பானுக்கு வந்தபோது, கிழக்கு ஜப்பானில் பூகம்பம் தாக்கிய இடங்களுக்குச் சென்று தகவல் சேகரித்தார். தற்கால கிராமப்புறப் பிரச்சனைகளை பற்றிய உணர்வெழுச்சி உரைகளை நிகழ்த்தினார்.

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல பல்கலைக்கழகங்களில் இளைய தலைமுறையினருக்கு சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் கிராமச் சமூகம் பற்றி அவர் வகுப்புகள் எடுக்கிறார். கடந்த வருடத்திலிருந்து பெருந்தொற்று மற்றும் வறுமை ஆகியவற்றால் இரு மடங்கு பாதிப்புகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் கிராமப்புறத்தின் செய்திகளை தருவதில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள மக்களை ஊக்குவிக்கிறார். கொந்தளிப்பான நிலையில், தலைகீழ் மாற்றத்துக்கு ஆசியா உள்ளாகிக் கொண்டிருக்கும் சூழலிலும், அறிவை நோக்கிய தேடல் மற்றும் குடிமைச் சமூக ஒத்துழைப்பு ஆகியவற்றுக்காக தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் திரு.பலகும்மி சாய்நாத், ஃபுகுவோகா பரிசின் உயரிய பரிசை பெறுவதற்கு மிக சரியான தேர்வு ஆகிறார்.

நன்றி : பாரி (PARI) தமிழ் இதழ் 

செய்திக்குறிப்பு:   ஜப்பான் நாட்டின் சர்வதேச விருதான ஃபுகுவோகா கிராண்ட் பரிசு 2021-ஐ பெற்றிருக்கும் பி.சாய்நாத் பற்றிய பாரி பத்திரிகை வெளியிட்டிருக்கும்

;