world

img

காணாமல் போன நாடும், அதன் தபால் தலைகளும்

அருண் குமார் நரசிம்மன்

 இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன்னர் சில மாகாணங்கள் தனி நாடுகளாக இருந்து அவர்கள் தங்கள் நாட்டின் பயன்பாட்டிற்கு தபால்தலைகளை வெளியிட்டு அஞ்சல் சேவையை செய்து வந்துள்ளன.  ஆனால் பிற்காலத்தில் ஏதோ சில காரணங்களால் அந்த மாகாணம் அல்லது நாடு மற்றொரு நாட்டுடன் சேர்ந்திருக்கும். இப்படிப்பட்ட மாகாணங்களையும் நாடு களையும் “இல்லாத நாடு” அல்லது “மறைந்த நாடு” என்று தபால் தலை சேகரிப்பவர்கள் கூறுவார்கள்.  அந்த வரிசையில் பண்டைய இந்தியா வின் பஹவல்பூர் தன் தபால் தலையை அச்சிட்டு அஞ்சல் சேவைக்கு பயன்படுத்தி வந்தது. இந்த நாட்டின் அஞ்சல் சேவை பற்றியும் அந்த மாகாணத்தின் சரித்திரம் பற்றியும் பார்ப்போம். பஹவல்பூர் சுதந்திரத்திற்கு முன் இருந்த ஒருங்கிணைந்த இந்தியாவின் ஒரு மன்னர் ஆளும் மாகாணம், அது பஞ்சாப் மாநிலங்களின் ஒரு பகுதியாக இருந்து வந்தது. இந்த மாகாணம் நவாப் முகமது பஹவல் கான் அப்பாஸி என்ற மன்னரால் 1802இல் ஆப்கானிஸ்தானின் கடைசி சாம்ராஜ்யமான துர்ரானி சாம்ராஜ்யம் பிரியத்துவங்கியபோது உருவாக்கப்பட்டது. நவாப் முகமது பஹவல் கான் அப்பாஸிக்கு பின் வந்த அவரின் வாரிசான நவாப் முகமது பஹவல் கான் அப்பாஸி III பிப்ரவரி 22, 1833இல் பிரிட்டிஷாருடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார்.

இந்த ஒப்பந்தத்திதின் மூலம் நவாப் இந்த மாகா ணத்தின் உள் விவகாரங்களை கவனிப்பார், பிரிட்டிஷார்கள் இந்த மாகாணத்தின் வெளி விவகாரங்களை கவனித்துக்கொள்வார்கள்.  பஹவல்பூர் பிரிட்டிஷார்களுடன் ஒப்பந்தம் செய்திருந்தாலும் அந்த மாகாணம் ஆங்கிலேயர்களின் உடைமை யாக மாறாமல் இந்தியாவின் ஒரு நிலப் பிரபுத்துவ மாகாணமாவே இருந்துவந்தது. 1947ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் பிரிவின்போது நிலப்பிரபுத்துவ மாகாண மன்னர்கள் அவர்கள் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ சேர வாய்ப் பளிக்கப்பட்டது.  பஹவல்பூரை இந்தியாவுடன் சேர இந்திய அரசு பல சலுகைகளை அந்த மாகாணத்தின் அரசர் நவாப் சாதிக் முகமதுகான் V க்கு அறிவித்தது. ஆனால் அந்த மன்னரும் அந்த மாகாணமும் இஸ்லாமியத்தை பின்பற்றிவந்ததாலும் பாகிஸ்தானின் முதல் தலைவரான காயித்-இ-ஆசாமுடன் நவாப் நெருங்கிய நட்பு கொண்டிருந்ததாலும் பஹவல்பூரை பாகிஸ்தானில் ஒரு மாநிலமாக சேர்த்தார். இதற்கான ஒப்பந்தம் அக்டோபர் 5, 1947இல் செய்யப்பட்டது இதன் மூலம் பஹவல்பூர் பாகிஸ்தானில் இணைந்த முதல் மாநிலமாக ஆனது. 1955ஆம் ஆண்டில், நவாப் சாதிக் முஹமது மேற்கு பாகிஸ்தானின் மாகா ணத்தில் பஹவல்பூரை சேர்ந்தார், இதனால் நவாபின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பஹவல்பூர் 1945 வரை பிரிட்டிஷ் இந்தியா வின் தபால்தலைகளைப் பயன்படுத்தியது. ஜனவரி 1, 1945 முதல் தன் அதிகாரப்பூர்வ தபால் தலைகளை வெளியிடத் தொடங்கியது. அவர்களின் முதல் தபால் தலைகள் உருது மொழியில் மட்டுமே பொறிக்கப்பட்டிருந்தன.

பஹவல்பூர் முதன் முதலில் 6 தபால் தலைகளை வெளியிட்டது.  அதில் அந்த மாகாணத்தின் அழகான சித்திரக் காட்சிகள் அச்சிடப்பட்டு அவற்றின் மேல் “சர்க்காரி” என்று பொறிக்கப்பட்டிருந்த தின் மூலம் அது அதிகாரப்பூர்வமான தபால் தலை என்ற அந்தஸ்தை பெற்றது. பின்னர் 1945 ஆம் ஆண்டில், வெளியிடப் பட்ட மூன்று தபால்தலை வடிவமைப்புகள் கருப்பு நிறத்திலும் கருப்பு நிறத்தில் “சர்க்காரி” என்று மேலெழுத்தும் பொறிக்கப் பட்டு இருந்தன.  இந்தியா-பாகிஸ்தான் பிரிவிற்கு முன் பஹவல்பூர் 16 அதிகாரப்பூர்வ தபால் தலைகளை 1945 மற்றும் 1946 ஆண்டுகளில் வெளியிட்டது. இது மட்டுமல்லாது இந்தியா வின் ஜார்ஜ் மன்னர் முகம் பொறிக்கப்பட்ட 16 தபால்தலைகளில் பஹவல்பூர் என்று பொறித்து அதில் நட்சத்திரமும் பிறையும் அச்சிடப்பட்டு பயன்படுத்துவந்ததாக கூறப்பட்டாலும் அதன் உண்மைத் தன்மை குறித்து நிபுணர்களிடையே சர்ச்சையாக இருந்துவந்துள்ளது. பஹவல்பூர் பாகிஸ்தானில் சேர முடிவு செய்த பின்னர், அது டிசம்பர் 1,1947 முதல் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய தபால் தலைகளை வெளியிடத் துவங்கியது. பஹவல் பூர் மன்னர் தபால்தலை சேகரிப்பவராக இருந்ததால் அனைத்து பஹவல்பூர் தபால் தலைகளும் உயர் தரமானவையாகவும் நேர்த்தியாகவும் பொறிக்கப்பட்டு மிகவும் அழகாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தபால்தலைகளை வடிவமைப்பிலும் நவாப் மன்னர் உதவினார் என்று அறியப்படுகிறது. ஆயினும் பஹவல்பூர் தபால்தலைகள் அந்த மாகாணத்திற்கு உள்ளே மட்டுமே அஞ்சல் அனுப்புவதற்கு பயன்படுத்தப்பட முடிந்தது.

;