உலகின் 3-வது பெரிய வைரம் போட்ஸ்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
போட்ஸ்வானா நாட்டில் கடந்த 1-ம் தேதி அரசு துணையுடன் இயங்கும் டப்ஸ்வானா என்ற நிறுவனம் உலகின் 3வது மிகப்பெரிய வைரத்தை கண்டுபிடித்தது. இந்த வைரம் 73 மில்லி மீட்டர் நீளம், 52 மில்லி மீட்டர் அகலம், 27 மில்லி மீட்டர் தடிமனும் கொண்டுள்ளது.
1098 காரட் கொண்ட இந்த வைரத்தை போட்ஸ்வானா அதிபர் மோக்விட்சி கையில் வைத்திருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றின் பாதிப்புகள் முடிவடைந்த பின்னர் உலகின் 3வது பெரிய இந்த வைரத்தை ஏலம் விட போட்ஸ்வானா அரசு திட்டமிட்டுள்ளது. அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொரோனாவுக்கு பிந்தைய நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 1905-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க நாட்டில் 3,106 காரட் அளவு கொண்ட உலகின் மிகப்பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இரண்டாவது மிகப்பெரிய வைரம் போட்ஸ்வானா நாட்டில் 2017-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 1,109 காரட் அளவு ஆகும்.