world

img

ஓங்கி ஒலிக்க வேண்டிய குரல்....

அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன்பு ஜனாதிபதி ஜோபைடன் பேசியது விவாதமாகி இருக்கிறது. தடுப்பூசி முழுமையாக செலுத்தியவர்கள் முகக் கவசம் களைந்து முகத்தில் புன்னகையோடு மற்றவர்களை வரவேற்கலாம். இன்னும் முழுமையாக தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசியுள்ளார். முகக்கவசம் தொடர்பாக இவ்வளவு தூரம் அவர் அவசரப்பட வேண்டியதில்லை என்று கருத்துகள் வந்துள்ளன.

அவ்வளவு நம்பிக்கையோடு அவர் பேசுவதற்கு காரணம் அந்த நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டுள்ளது என்பது தான். தடுப்பூசி போட்டதால் அங்கு தொற்று பரவும் வீதம் குறைந்துள்ளது. தினசரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. உயிரிழப்பும் குறைந்துள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் நோயால் மரணித்தவர்களின் எண்ணிக்கை ஆகிய இரண்டிலும் அமெரிக்காவை முந்தும் தகுதி உலகில் மோடி தலைமையிலான இந்தியாவிற்கு மட்டுமே உள்ளது என்று கிண்டலாக விமர்சிக்கப்படுகிறது.அந்த நையாண்டிக்குப் பின்னுள்ள துன்பமும் துயரமும் கையறு நிலையும் எதிரி நாட்டுக்கும் கூட வந்து விடக்கூடாது என்பதே நமது கவலை.

வெறும் 4.4 சதவீதம் மட்டுமே!
அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் 12 கோடிப் பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அந்நாட்டின்  மொத்த மக்கள் தொகையில் அது கிட்டத்தட்ட 37 சதவீதம் ஆகும். இந்தியாவில் அதுவே 4 கோடி மக்களுக்கு மட்டுமே முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது. மொத்த மக்கள் தொகையில் அது கிட்டத்தட்ட 4 சதவீதம் மட்டுமே ஆகும்.உலக அளவிலேயே இதுவரையில் 150 கோடி டோஸ்கள் தான் போடப்பட்டுள்ளன. அதிலும் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் கிட்டத்தட்ட 35 கோடி பேர் மட்டுமே. இது உலகின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 4.4% மட்டுமே ஆகும். ஆக உலக அளவில் பேசுவதாக இருந்தாலும் உள்ளூர் அளவில் பேசுவதாக இருந்தாலும் நாம் இப்போது தான் தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கி இருக்கிறோம்.

இந்தியாவில் தடுப்பூசி பணிகள் தொடங்கி இத்தனை மாதங்கள் கடந்தும் இதுவரை நாம் எட்டியுள்ள மக்கள் வெறும் 4% மட்டுமே. மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரம்மாண்ட அறிவிப்பு வெளிவந்து இவ்வளவு நாட்கள் ஆகியும் கூட இன்னும் பல மாநிலங்களில் அந்தப் பணி தொடங்கப்படவில்லை. பொதுவாக எல்லா விசயங்களிலும் மையப்படுத்தப்பட்ட அணுகுமுறையைக் கையாளும் மத்திய அரசு, வலுக்கட்டாயமாக மாநில உரிமைகளைப் பறித்து அடியில் போட்டு உட்கார்ந்து கொண்டு அதிகாரம் செய்யும் மத்திய மோடி அரசு, இந்த சுகாதாரப் பேரிடர் காலத்தில் மட்டும் மாநிலங்களின் தலையில் கட்டிவிட்டு ஒளிந்து கொண்டிருக்கிறது.

எடுத்ததற்கெல்லாம் ஒரே மொழி, ஒரே தேசம், ஒரே மதம் என்று பாட்டுப்பாடும் மத்திய அரசு, தடுப்பூசியைப் பொருத்தவரை ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்து நாட்டின் அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்குவது என்கிற தனது பொறுப்பில் இருந்து தப்பி ஓடியது மட்டும் அல்லாமல்; தனக்குப் போக மற்றவர்களுக்கு எந்த விலைக்கும் விற்றுக் கொள் என்று தடுப்பூசி விலை நிர்ணய உரிமையை தனியார் நிறுவனங்களுக்கே வழங்கி விட்டு விலகி நின்று வேடிக்கை பார்க்கிறது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இன்னும் தடுப்பூசி போட்டு முடிக்கவில்லை. போட முடியவில்லை. தடுப்பூசி இருப்பில்லை. உற்பத்தி போதுமான அளவில் இல்லை. 18-45 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி குறித்து சரியான பதில் இல்லை. காரணம் ஒட்டுமொத்த இந்திய மக்களின் உயிரும் சீரம் நிறுவனம், பாரத் பயோ டெக் ஆகிய  இரண்டே இரண்டு நிறுவனங்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் 2 டோஸ் தடுப்பூசி தயாரிக்க வருடக் கணக்கில் ஆகும். அதற்குள் ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்களுக்கு ஆறு மாதம், ஒரு வருடம் கடந்து விடலாம். வைரஸ் மேலும் மேலும் மாற்றம் அடையலாம் என்ற ஆபத்தும் உள்ளது. எனவே ஒட்டுமொத்த மக்களின் எதிர்காலமும் கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. 

எனவே இந்த பேரிடர் காலத்தில் நாம் முன்னுரிமை கொடுத்தும் முக்கியமாகவும் பேச வேண்டியது, நாட்டில் உள்ள அனைத்து பொதுத் துறை நிறுவனங்களையும் பயன்படுத்த வேண்டும்; அரசே பொதுத் துறை நிறுவனங்கள் மூலமாக தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும் என்பதுதான்.  இதற்கான குரல் தேசமெங்கும் ஒலிக்க வேண்டும்.

கட்டுரையாளர் : தேனி சுந்தர், மாநிலச் செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

;