world

img

ஈரான் செய்தி இணையதளங்களை அமெரிக்கா முடக்கியது....

வாஷிங்டன்:
ஈரான் நாட்டின் செய்தி இணையதளங்களை அமெரிக்கா முடக்கியுள்ளது.  ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான சீனா,பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகியவற்றுடனும், ஜெர்மனியுடனும் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஈரான் ஏற்படுத்தியது. வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என்று வர்ணிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், அமெரிக்க நலன்களுக்கு எதிரானது என்று அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்த டிரம்ப் கூறினார்.மேலும் அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாகவும் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதித்தது. இதனால் ஈரான் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர், ஈரான் நாட்டின் செய்தி இணையதளங்களை அமெரிக்கா அதிரடியாக முடக்கியுள்ளது. தவறான தகவல்களைப் பரப்புவதாகக்கூறி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.இதனால் அந்த இணையதளங்களை அமெரிக்காவில் யாரும் பார்க்க முடியவில்லை. அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்த இணைய தளங்களில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு எப்.பி.ஐ. மற்றும் வர்த்தக துறையின் முத்திரைகளும் பதிக்கப்பட்டுள்ளன.

மேலும் ஈரான் அரசுக்கு சொந்தமான பிரஸ் டி.வி., மற்றும் ஏமனின் ஈரான் கூட்டாளியான ஹவுதி இயக்கத்தினரின் அல் மசிரா டி.வி.யும் தடை செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து  அமெரிக்க அரசின் நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் இஸ்லாமிய ரேடியோ மற்றும் டெலிவிஷன் யூனியன் நடத்துகிற 33 இணைய தளங்களும், ஈராக்கில் ஈரான் ஆதரவு பெற்ற கட்டைப் ஹிஸ்புல்லா இணையதளங்களும் அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டுள்ளன. ஈரான் இஸ்லாமிய ரேடியோ மற்றும் டெலிவிஷன் யூனியன் பயன்படுத்தும் களங்கள் ஒரு அமெரிக்க நிறுவனத்துக்கு சொந்தமானவை. இதற்காக அமெரிக்க கருவூலத்துறையின் வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு அலுவலகத்தில் இருந்து ஈரான் இஸ்லாமிய ரேடியோ மற்றும் டெலிவிஷன் யூனியன் உரிமம் பெறவில்லை.  மேலும் கட்டைப் ஹிஸ்புல்லா அமைப்பு, அமெரிக்காவால் பயங்கரவாத இயக்கமாக கருதி தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பும் உரிமம் பெறவில்லை. எனவே இந்த இணையதளங்கள் செவ்வாய்க்கிழமை மதியம் முதல் முடக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;