world

img

அமெரிக்க அரசியலமைப்பை முடக்க டிரம்ப் சூழ்ச்சி.... வலதுசாரி பாசிச சக்திகளை தூண்டிவிடுகிறார்....

வாஷிங்டன்:
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கான முறைப்படியான வாக்கு எண்ணிக்கையை இறுதி செய்வதற்காக அமெரிக்க நாடாளுமன்றம் புதனன்று கூட இருந்த நிலையில் அதை தடுத்து நிறுத்துவதற்காக பெரும் முயற்சிகளில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஈடுபட்டார். 

எப்படியேனும் ஜோ பைடனுக்கு ஆதரவான தேர்தல் முடிவுகளை வெளியிட முடியாமல் தனது தலைமையிலான ஒரு சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான அனைத்து இழி முயற்சிகளிலும் டிரம்ப் ஈடு
பட்டுள்ளார். அவரது குடியரசுக் கட்சியின்நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு பகிரங்க தகராறில் ஈடுபட்டனர். தற்சமயம் அமெரிக்க செனட் சபையின் தலைவராக உள்ள துணை ஜனாதிபதியும் டிரம்ப்பின் ஏவலாளிகளில் ஒருவரான மைக் பென்ஸ், ஜனநாயகக் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை தேர்வு பெறவில்லை என்று அறிவிப்பதற்கு அதிகாரம் பெற்றிருக்கிறார் என டிரம்ப் பகிரங்கமாக கூறியிருக்கிறார். 

முன்னதாக திங்களன்று ஜார்ஜியாவில் பேசிய டொனால்டு டிரம்ப் “அவர்கள் (ஜோபைடன் கட்சியினர்) வெள்ளை மாளிகைக்கு வர முடியாது. அங்கு அதிகாரத்தில் அமரமுடியாது. ஒரு கை பார்த்து விடுவோம் என்ற முடிவில்தான் இருக்கிறேன்” என அராஜகமாக கூறினார். அதிதீவிர வலதுசாரி எதேச்சதிகார வெறிகொண்ட டிரம்ப்க்கு ஆதரவாக அமெரிக்காவில் செயல்பட்டு வரும் நவீன பாசிச சக்திகள் அனைத்தும் இப்போது கைகோர்க்கத் துவங்கியுள்ளன. பிரவுடு பாய்ஸ் என்ற அமைப்பு உள்ளிட்ட நவீனபாசிச சக்திகள், டிரம்ப்க்கு ஆதரவாக அமெரிக்க நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்த நாசகர சக்திகளுக்கு டிரம்ப் பகிரங்கமாக ஆதரவு அளித்துள்ளார். புதனன்று காலை அவர்கள் முன்புநேரில் வந்து உரையாற்றவும் செய்தார். 

பென்டகனுக்கு உத்தரவு 
வலதுசாரி கைக்கூலிகளை தூண்டிவிடுவது மட்டுமல்ல, ஆட்சி கைவிட்டுச் செல்லும் நிலையில் திடீரென ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார். ஏற்கெனவே பாரசிக வளைகுடா பகுதியில் போர் வெறியுடன் அமெரிக்க ராணுவத்தினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், வெள்ளை மாளிகையில் புதிய அரசு அமரும் என்ற சூழலில் பாரசிக வளைகுடாவிலிருந்து அமெரிக்க போர்க் கப்பலான யுஎஸ்எஸ் நிமிட்ஸ் எனும் கப்பல், தனது முகாமுக்கு திரும்பிட பென்டகன் அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். ஆனால் திடீரென தமது ஆட்சியின் கடைசி நாட்களில் புதிய பாதுகாப்பு அமைச்சராக டிரம்ப் நியமித்துள்ள கிறிஸ்டோபர் மில்லர், மேற்கண்ட பென்டகன் அதிகாரிகளின் உத்தரவை திடீரெனரத்து செய்துள்ளார். ஈரானை முற்றுகையிட்டுள்ள படைகள் இன்னும் அதிகரிக்கப்படவேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.இது அப்பிரதேசத்தில் ஒரு புதிய போர்ச்சூழலை உருவாக்கி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டு மொத்தத்தில் அமெரிக்காவில் அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கியெறிந்துவிட்டு அதிகாரத்திலிருந்து வெளியேறாமல் ஒரு கலகத்தை நடத்தி சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து ஜனநாயகக் கட்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க மக்கள் தேர்தலில் தன்னை தேர்ந்தெடுத்தப் பிறகும் அதை நிராகரித்து மிகப் பெரும் பிரித்தாளும் சூழ்ச்சியை நடத்தி அரசியலமைப்புச் சட்டத்தை முடக்குவதற்கு டிரம்ப் மேற்கொண்டுள்ள முயற்சியை முறியடிப்போம் என்று ஜோ பைடன் கூறியுள்ளார். 

ஜனவரி 20 அன்று புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்க வேண்டும். ஆனால் அதற்குள் நாடாளுமன்றத்தையே முடக்கி விடலாம் என்று டிரம்ப் நினைப்பது நகைப்புக்குரியது என்று இடதுசாரி சிந்தனையாளர்களின் ஆதரவு பத்திரிகையான தி நேசன் எழுதியுள்ளது. அதிகாரத்தில் எஞ்சியிருக்கும்  சில நாட்களில் ஏதேனும் கலவரம்உள்ளிட்ட நாசகர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தூண்டிவிடுவதற்கும் டிரம்ப் தயங்க மாட்டார் என்ற கருத்து எழுந்துள்ளது என்ற போதிலும், கொரோனா பாதிப்பால் 3.5 லட்சத்திற்கும் அதிகமான உயிர்களை டிரம்ப்பின் உச்சகட்ட அலட்சியத்தால் பறி கொடுத்துள்ள அமெரிக்க மக்கள் அவரது முயற்சிகளை முறியடிப்பார்கள் என்றும் அமெரிக்க சமூக நோக்கர்கள் கூறுகின்றனர். 

;