world

img

சல்மான் ருஷ்டி தாக்குதல்: சீதாராம்யெச்சூரி கடும் கண்டனம்

எழுத்தாளரும், நாவலாசிரியருமான சல்மான் ருஷ்டி மீது  நடத்தப்பட்டுள்ள வன்முறைத் தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி மீது  கூட்டத்தில் இருந்த ஒருவர் வன்முறை தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அந்த  நிகழ்ச்சி நடந்த அரங்கில் இருந்த அசோசியேட்டட் பிரஸ் செய்தியாளர் ஒருவர் கூறுகையில்,  "நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது கருப்பு நிற ஆடையுடன் முகத்தில் கருப்பு மாஸ்க் அணிந்திருந்த நபர் ஒருவர் வேகமாக மேடையை நோக்கி ஓடினார். அவர் திடீரென சல்மான் மீது பாய்ந்தார். முதலில் இது சல்மானுக்கு இருக்கும் அச்சுறுத்தலை எடுத்துரைக்க நடத்தப்படும் ஸ்டன்ட் என்று நினைத்தோம். ஆனால் விநாடிகளில் விபரீதம் புரிந்தது. அந்த நபர் 20 விநாடிகளில் 10லிருந்து 15 முறை கத்தியால் குத்தியிருப்பார். சல்மான் ருஷ்டி சரிந்து விழுந்தார். அங்கிருந்த நபர்கள் உடனே சல்மானின் கால்களை உயர்த்திப் பிடித்தனர். இதன் மூலம் அவரின் இதயத்திற்கு கொஞ்சம் ரத்தம் அதிகமாகச் செல்லும் என்பதால் அவ்வாறு செய்தனர் என நினைக்கிறேன். சில நிமிடங்களில் அவர் ஏர் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டார்" என்று விவரித்தார்.
இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவருக்கு ஒரு கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னர் தற்போது வென்டிலேட்டர் எனப்படும் உயிர்காக்கும் கருவி பொருத்தப்பட்டுமருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.
சல்மான் ருஷ்டி மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதலுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சல்மான் ருஷ்டி தலைக்கு 6 லட்சம் டாலர்
இந்தியாவின் மும்பை நகரில் பிறந்தவர் அகமது சல்மான் ருஷ்டி. பின் அவரது குடும்பம் பிரிட்டனுக்கு புலம் பெயர்ந்தது. ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’ படைப்புக்காக புக்கர் பரிசை வென்றவர். 1988-ல் வெளிவந்த இவரது ‘தி சாட்டனிக் வெர்சஸ்’ படைப்பு, உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலகில்  இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தப் புத்தகம் இன்றளவும் தடை செய்யப்பட்டுள்ளது இந்தப் புத்தகத்திற்கு தடை விதிக்கப்பட்ட பின்னர் ஈரானின் அப்போதைய தலைவர் அயோதுல்லா ருஹல்லா கொமேனி, சல்மான் ருஷ்டி மற்றும் அவரின் தி சாட்டனிக் வெர்சஸ் புத்தகத்தை பிரசுரம் செய்ய உதவிய அனைவரையும் படுகொலை செய்ய வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்தார். இந்த அறிவிப்புக்குப் பின்னர் சல்மான் ருஷ்டி 10 ஆண்டுகளுக்கும் மேல் தலைமறைவாகவே வாழ்ந்தார். 1991ல் இந்தப் புத்தகத்தை மொழிபெயர்த்த ஜப்பானிய எழுத்தாளர் ஹிட்டோஷி இகராஷி படுகொலை செய்யப்பட்டார். ஈரானின் பல்வேறு மத அமைப்புகளும் இன்றளவும் சல்மான் ருஷ்டியின் தலைக்கு பெரும் விலை நிர்ணயித்துள்ளன. கடைசியாக ஈரான் 2019ல் சல்மானுக்கு எதிரான தடை உத்தரவை புதுப்பித்தது. அதோடு சல்மான் மீதான தடையும் அவரது தலைக்கான விலையும் நிரந்தரமானது என்று கூறியது. தற்போதைய நிலவரப்படி அவரது தலைக்கு 6 லட்சம் அமெரிக்க டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

;