world

img

நியூஜெர்சியில் ஹிந்து கோவிலைக் கட்டுவதில் நடந்திருக்கின்ற அதிர்ச்சியளிக்கின்ற மீறல்கள்

இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தொழிலாளர்களுக்கு மாதத்திற்கு 450 டாலர் அல்லது ஒரு மணி நேரத்திற்கு 1.20 டாலர் சம்பளம் மட்டுமே வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. நியூஜெர்சியின் குறைந்தபட்ச ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு பன்னிரண்டு டாலர் ஆகும்.

நியூஜெர்சியில் பிரமாண்டமான ஹிந்து கோவிலைக் கட்டியெழுப்புவதற்காக இந்தியாவில் இருந்து நூற்றுக்கணக்கான விளிம்புநிலைத் தொழிலாளர்கள் பணியிலமர்த்தப்பட்டனர். அமெரிக்க தொழிலாளர் மற்றும் குடிவரவு சட்டங்களை மீறி குறைந்த ஊதியத்திற்கு நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் அந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்டிருப்பதாக கடந்த செவ்வாயன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

அந்தக் கோவிலில் நியமிக்கப்பட்டுள்ள இருநூறுக்கும் மேற்பட்ட இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் சார்பாக நெவார்க்கில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகாரில் கட்டாய உழைப்பைத் தடுக்கின்ற  சட்டங்கள் உட்பட நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்குப் பொருந்துவதாக இருக்கின்ற மிக அடிப்படையான சட்டங்கள் மிகவும் அதிர்ச்சியூட்டும் வகையில் மீறப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  

ஐந்து தொழிலாளர்களால் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வழக்கில் அவர்களைப் பணியிலமர்த்திய போச்சசான்வாசி ஸ்ரீ அக்சர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா அல்லது பாப்ஸ் (BAPS) அமைப்பு மற்றும் இந்தியாவில் அவர்களை ஆட்சேர்ப்பு செய்து அமெரிக்காவிற்கு அழைத்து வந்து அந்தக் கோவிலில்  மாதத்திற்கு 450 டாலர் அல்லது ஒரு மணி நேரத்திற்கு சுமார் 1.20 டாலர் ஊதியத்தில் வாரத்திற்கு 87 மணிநேரம் வேலை செய்யக் கட்டாயப்படுத்திய தொடர்புடைய நிறுவனங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நியூஜெர்சியின் குறைந்தபட்ச ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு பன்னிரண்டு டாலர்கள் ஆகும். அமெரிக்க சட்டத்தின்படி மணிநேர ஊதியத்தில் வாரத்திற்கு நாற்பது மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஒன்றரை மடங்கு ஊதியம் தர வேண்டும்.

அந்த வழக்கில் தொழிலாளர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், வெளியில் யாருடனாவது பேசினால் ஊதியக் குறைப்பு, கைது, இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவது என்று அவர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. செவ்வாயன்று பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்.பி.ஐ) அதிகாரிகள் ட்ரெண்டனுக்கு கிழக்கே கிராமப்புற ராபின்ஸ்வில்லில் உள்ள பரந்து விரிந்துள்ள அந்த கோவிலுக்கு விசாரணைக்காக சென்றிருந்தனர்.   

‘நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சட்ட அமலாக்க நடவடிக்கைகளுக்காக நாங்கள் அங்கே சென்றிருந்தோம்’ என்று நெவார்க்கில் உள்ள எஃப்.பி.ஐ கள அலுவலகச் செய்தித் தொடர்பாளரான டோரீன் ஹோல்டர் தொலைபேசி மூலம் உறுதிப்படுத்தினார். எத்தனை அதிகாரிகள் அந்த வளாகத்திற்குச் சென்றிருந்தார்கள் என்பதையோ அல்லது அவர்களுடைய பணி குறித்து விரிவாகக் கூறவோ ஹோல்டர் மறுத்து விட்டார்.

தன்னை சமூக-ஆன்மீக ஹிந்து அமைப்பு என்று அழைத்துக் கொள்ளும் பாப்ஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘குற்றச்சாட்டுகள் குறித்து எங்களுக்கு இன்று காலை தெரியப்படுத்தப்பட்டது, அவற்றை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். எழுப்பப்பட்டிருக்கும் பிரச்சனைகளை நாங்கள் முழுமையாகப் பரிசீலித்து வருகிறோம்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.   

கோவில் கட்டப்பட்டிருக்கும் நிலத்தை தங்களுக்கென்று சொந்தமாகக் கொண்டுள்ள பாப்ஸ் நிறுவனங்களே அதன் கட்டுமானத்திற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளன. இந்தக் கோவில் திறக்கப்பட்டு பல ஆண்டுகளாகியுள்ளது. இப்போது அதை விரிவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கல் தச்சர்களாக, பிற கட்டுமானத் தொழிலாளர்களாக 2012ஆம் ஆண்டிலிருந்து இந்த கோவிலில் தாங்கள் பணியாற்றி வருவதாக அந்த வழக்கைத் தொடுத்துள்ள வாதிகள் கூறுகின்றனர். இந்தியாவில் சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்கள் என்று கருதப்பட்ட ‘தீண்டத்தகாதவர்கள்’ என்று முன்பு அழைக்கப்பட்ட பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களாக தாங்கள் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.   

கட்டுமானப் பணிகளின்போது வேலியமைத்து பாதுகாக்கப்பட்ட வளாகத்திற்குள் வசிக்கவும், வேலை செய்யவும் தங்களைக் கட்டாயப்படுத்தியதாகவும், பாப்ஸ் அமைப்பைச் சார்ந்த மேற்பார்வையாளர்களின் துணையின்றி அங்கிருந்து வெளியேறுவதற்கு தங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.   

இந்தியாவிலிருந்து அந்த நாட்டிற்குள் நுழைந்தபோது இந்த தொழிலாளர்கள் மதம் சார்ந்த தொழிலாளர்கள், தன்னார்வலர்கள் என்று பொய்யாக வகைப்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மூலம் தொழிலாளர்களுடைய சேவைகளுக்கான முழு மதிப்புடன் இன்னதென்று குறிப்பிடப்படாத சேதங்கள் மற்றும் அவற்றிற்கான இழப்பீடுகளையும் வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://thewire.in/caste/dalit-workers-allege-shocking-violations-in-building-hindu-temple-in-new-jersey

நன்றி: தி வயர் இணைய இதழ்

தமிழில்: தா.சந்திரகுரு

 

;