world

img

ஆபத்தான கம்யூனிஸ்ட் – ஆத்திரமுற்ற அமெரிக்கா

 

வாஷிங்டன், நவ.17-

நிகரகுவா நாட்டின் ஜனாதிபதி டேனியல் ஓர்ட்டேகா, அமெரிக்க நாட்டிற்குள் நுழையவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.  

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான நிகரகுவா ஜனாதிபதி தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் ஆளும் சாண்டினிஸ்டா முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான டேனியல் ஓர்ட்டே 75 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று மகத்தான வெற்றி பெற்றனர்.  இவரை எதிர்த்து போட்டியிட்ட லிபரல் பழமைவாதக் கட்சியின் வேட்பாளர் 14.15 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றார். இதன்மூலம் டேனியல் ஓர்ட்டே நான்காவது முறையாக ஜனாதிபதியாக அந்நாட்டு மக்களால் பெரும் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக,  ஓர்ட்டேகா ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் வறுமை கோட்டிற்கு கிழான நிகரகுவா மக்களின் எண்ணிக்கை 20.3 சதவீதத்திலிருந்து 6.3 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. இதேபோல் அடிப்படை கட்டமைப்புகள் அனைத்தும் பெருமளவிற்கு மேம்படுத்தப்பட்டது. குறிப்பாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் 23 மிகப்பெரும் மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. இதேபோல், நாடு முழுவதும் மையப்படுத்தப்பட்ட மின் விநியோக தொகுப்பு மேம்படுத்தப்பட்டது.

அதேநேரம், “இவர் ஒரு ஆபத்தான கம்யூனிஸ்ட்” என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ரொனால்டு ரீகனால் வசை பாடப்பட்ட ஓர்ட்டேகா அரசை கவிழ்ப்பதற்காக கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்க அரசு பல்வேறு நாசகர நடவடிக்கைகளை ஏவிவிட்டது. இருப்பினும் அதனை அவர் அந்நாட்டு மக்களின் பெரும் ஆதரவுடன் எளிதாக எதிர்கொண்டு தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார். தற்போது மீண்டும் அந்நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் அமெரிக்க அரசு கடுமையான ஆத்திரத்திற்குள்ளாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து நிகரகுவா நாட்டின் ஜனாதிபதி டேனியல் ஓர்ட்டேகா, தங்களது நாட்டிற்குள் நுழைய தடை விதித்து அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதுமட்டுமின்றி, நிகரகுவா ஜனாதிபதி டேனியல் ஓர்ட்டேகாவின் மனைவி, துணை ஜனாதிபதி ரொசாரியோ முரில்லோ, அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள், நீதிபதிகள், மேயர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தார் உள்ளிட்ட யாரும் அமெரிக்க நாட்டிற்குள் நுழைய கூடாது அந்நாட்டு அரசு தடை விதித்து தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளது.

;