world

img

மோசமான நிலையில் அமெரிக்க பொருளாதாரம்

 

வாஷிங்டன், நவ.16-

அமெரிக்க நாட்டின் பொருளாதாரம் பெரும் மோசமான நிலையில் இருப்பதாக அந்நாட்டின் 70 சதவிகித மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் மற்றும் அமெரிக்கன் போர்காஸ்டிங் கம்பெனி (ஏபிசி) ஆகிய நிறுவனங்கள் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை அந்நாட்டு மக்களிடையே கருத்துக் கணிப்பை நடத்தியது. இதில் 70 சதவிகித மக்கள் அமெரிக்க நாடு மோசமான பொருளாதார நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அச்சம் தெரிவித்துள்ளனர்.  

மேலும், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்று 10 மாதங்கள் கடந்து விட்ட போதிலும் பொருளாதாரத்தை மேம்படுத்த உருப்படியான எவ்வித நடவடிக்கையு ம் எடுக்கவில்லை என கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 60 சதவிகித மக்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல், 53 சதவிகித மக்கள் ஜோ பைடன் நிர்வாக பணிகள் திருப்தியளிக்கவில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.  

மேலும், ஜோ பைடன் ஆட்சி அமைந்த பிறகு பணவீக்கத்தின் அளவும் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதேபோல், அந்நாட்டின் நுகர்வோர் விலை குறியீடும் பெருமளவு அதிகரித்துள்ளது. இதன்காரணமாக பொருட்களின் விலைகளில் ஏற்ற, இறக்கம் மற்றும் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாக பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு காலன் எரிவாயுவின் விலை 4.682 டாலர் என்ற புதிய வரலாற்று உச்சத்தை தொட்டிருப்பதையும் அந்நாட்டு மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  

அதேநேரம், இத்தகைய பொருளாதார பின்னடைவுகளுக்கு கோவிட் 19 பெருந்தொற்றின் பாதிப்பே காரணம் என அந்நாட்டு அரசின் முதன்மை செயல் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

;