world

img

தீக்கதிர் உலகச் செய்திகள்...

அத்வானி, மன்மோகனை அனுப்பி வையுங்கள்...

“மத்திய அரசுடன் பேசுவதற்கு நாங்கள் தயாராகஇருக்கிறோம். ஆனால் வெறுமனே அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதால் எங்களுக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. அவர்கள் ஒருவித அழுத்தத்துக்கு மத்தியிலேயே எங்களோடு பேசுகின்றனர். எனவே அமைச்சர்களுக்குப் பதிலாக, அத்வானி, ராஜ்நாத்சிங் போன்றவர்களை அனுப்பி வைக்க வேண்டும். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் அனுப்பி வைக்கலாம். அவர் பிரச்சனைக்கு தீர்வு காண்பார்” என்று கிஷான் சங்கத் தலைவர் நரேஷ் திகாயத் கூறியுள்ளார்.

                                                          *******************

சட்டங்களை அவசர கதியில் நிறைவேற்றி இருக்கக் கூடாது!

“புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு அவசரகதியில் நிறைவேற்றி இருக்கக் கூடாது” என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார். “விவசாயிகளின் போராட்டத்திற்கு காலிஸ்தான், வெளிநாட்டுப் பணம் வந்துள்ளதாக கூறப்படும் தகவல்கள் குறித்து நான் கருத்துக்கூற மாட்டேன். தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் கவுரவப் பிரச்சனையாக மாறக் கூடாது. இதனை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

                                                          *******************

வேளாண் சட்டங்களை குப்பையில் வீசுவோம்..!

“போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை பிரதமர் மோடியும் - பாஜக தலைவர்களும் அவமதித்து வருகின்றனர். 3 வேளாண் சட்டங்களும் சாத்தான் போன்றவை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்த சட்டங்களை கிழித்து குப்பையில் வீசுவோம்” என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். “போராட்டம் நடத்தும் விவசாயிகளை ‘தேச விரோதி’ என மத்திய அரசு கூறுகிறது. ஆனால், மத்திய அரசுதான் தேசத்திற்கு எதிராக செயல்படுகிறது” “ என்று குற்றம் சாட்டியுள்ள பிரியங்கா காந்தி, “பாகிஸ்தான், சீனா செல்வதற்கு எல்லாம் நேரமிருந்த பிரதமர் மோடிக்கு, போராடி வரும் விவசாயிகளை சந்திக்க மட்டும் நேரம் இல்லையா?” என்று கேட்டுள்ளார்.

                                                          *******************

மண்ணெண்ணெய் விலை  இங்கு குறைவுதானே..

சீதை பிறந்த நேபாளத்திலும், இராவணனின் இலங்கையிலும் பெட்ரோல் - டீசல்விலை குறைவாக இருக்கிறது. இதேபோல ராமர் பிறந்த இந்தியாவிலும் விலை குறைக்கப்படுமா? என்று சமாஜ்வாதி எம்.பி. விஷாம்பர் பிரசாத் நிஷாத் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “இந்தியாவில் மண்ணெண்ணெய் 32 ரூபாய்க்குத்தானே விற்கப்படுகிறது” என்று பதிலளித்துள்ளார். ‘நுகர்வு அதிகரிக்கும் போது விலையும் அதிகரிக்கத்தான் செய்யும்’ என்று புதிய கண்டுபிடிப்பையும் வெளியிட்டுஉள்ளார்.

                                                          *******************

இந்தியக் குடியுரிமையை கைவிட்ட 6.70 லட்சம் பேர்! 

கடந்த 5 ஆண்டுகளில் 6 லட்சத்து 70 ஆயிரம் பேர் இந்தியக் குடியுரிமையை வேண்டாம் என்று கைவிட்டுஉள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துஉள்ளது. மேலும் கடந்த 2015-இல் ஒரு லட்சத்து 41ஆயிரத்து 656 பேர், 2016-இல் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 942 பேர், 2017-இல் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 905 பேர், 2018-இல் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 130 பேர், 2019-இல் ஒரு லட்சத்து 36ஆயிரத்து 441 பேர் இந்தியக் குடியுரிமையைக் கைவிட்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் ஒரு கோடியே 24 லட்சத்து 99 ஆயிரத்து 395 இந்தியர்கள் வசித்து வருவதாகவும் வெளியுறவுத்துறை கூறியுள்ளது

;