தென் கொரியாவின் விண்வெளி இராணுவமயமாக்கல்
தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் இயோல் துவங்கியுள்ள புதிய விண்வெளித் திட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இராணுவ மற்றும் பொருளாதார ரீதியில் பெரும் செலவினத்தை ஏற்படுத்தும் இத்திட்டம் சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை விளைவிக்கிறது. இதன் எதிர்ப்பாளர்கள் அக்டோபர் 19-இல் முதல் முறையாக ஒன்று கூடி தேசிய அளவிலான விவாதத்தை நடத்தினர். அமெரிக்கா தனது விண்வெளி ஆதிக்கத்தை விரிவுபடுத்த தென் கொரியாவை பயன்படுத்துகிறது. LEO (Low Earth Orbit) செயற்கைக்கோள்கள் மூலம் தகவல் தொடர்பு, இராணுவ கண்காணிப்பு மற்றும் உளவு பார்த்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2016-இல் அமெரிக்கா-தென் கொரியா இடையே கையெழுத்தான விண்வெளி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் பின், 2024 ஜூனில் அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சிகளும் நடத்தப்பட்டன.
ஆஸ்திரேலியாவின் நிலை
1788-இல் பிரிட்டிஷ் கப்பல்கள் ஆஸ்திரேலியா வின் கிழக்குக் கடற்கரையை அடைந்ததி லிருந்து, அந்நாடு பிரிட்டிஷ் ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வரப்பட்டது. தற்போது மன்னர் சார்லஸ் III, 56 காமன்வெல்த் நாடுகளின் தலைவராகஉள்ளார். உலகின் மொத்த நிலப்பரப்பில் 21% முன்னாள் பிரிட்டிஷ் காலனி நாடுகளைக்கொண்ட காமன்வெல்த் பகுதியாகும். சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்த சார்லஸ் மன்னர் III-யிடம், பழங்குடி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் “நீங்கள் எனது மன்னர் அல்ல; இது உங்கள் நிலமும் அல்ல” என்று கூறினார். பிரிட்டிஷா ரால் கொண்டுவரப்பட்ட அம்மை நோய், பழங்குடி மக்களில் 53% பேரை கொன்றது என்பதும், மக்களின் அனுமதியின்றி யூனியன் ஜாக் கொடி நாட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.ஆஸ்திரேலியாவின் மத்தியப் பகுதியில் உள்ள பாலைவனப் பகுதியில் 19.9 லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள கனிம வளங்கள் உள்ளன. உலகின் லித்தியம் இருப்பில் 52% இங்குள்ளது. 2023-இல் ஆஸ்திரேலியாவும் பிரிட்டனும் கைகோர்த்து முக்கிய கனிமங்களைப் பாதுகாக்கும் ஒப்பந்தம் செய்துள்ளன, இது சீனாவுக்கு எதிரான மறைமுக பனிப்போராகப் பார்க்கப்படுகிறது.
கொலம்பியாவில் விவசாய உரிமைகள் முன்னேற்றம்
2018-ல் ஐ.நா. அவை விவசாயிகளின் உரிமைகளை மனித உரிமைகளாக அங்கீகரித்த போதிலும், தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் குஷ்தவோ பெட்ரோ தலைமையிலான முற்போக்கு அரசு அமைந்த பிறகே 2022-இல் இது நடைமுறைக்கு வந்தது. வரலாற்று ரீதியாக புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பூர்வீக குடிமக்கள் மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியினரின் உரிமைகள் மீட்கப்பட்டு வருகின்றன. கடந்த அக்டோபரில் 50,000 ஹெக்டேர் நிலம் விவசாயிகள் மற்றும் பூர்வகுடி மக்களுக்கு வழங்கப்பட்டது. விவசாயிகளின் உழைப்பின் மூலமே மக்கள் உயிர்வாழ முடியும் என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி குஷ்தவோ பெட்ரோ, விவசாய மேம்பாட்டுக்கு அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் நிதி ஒதுக்க வேண்டும் என அறிவித்தார். 1993-இல் நிறுவப்பட்ட லா வயா கேம்பெசீனா என்ற சர்வதேச விவசாயிகள் அமைப்பு, தலைநகர் பொகாட்டாவிலிருந்து மூன்று மணி நேர தூரத்தில் 16 ஹெக்டேர் நிலத்தை கொண்டுள்ளது. இங்கு காபி, கரும்பு, பழங்கள், மலர்கள், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த நிலம் விரைவில் பயிற்சி பெற்ற இளம் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது. ஆனால் சவால்களும் உள்ளன. சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களால் அயர்லாந்திலிருந்து உருளைக்கிழங்கும், ஈக்குவடாரிலிருந்து வாழைப்பழமும் மலிவாக இறக்குமதியாகி, உள்நாட்டு விவசாயிகள் கடும் போட்டியை எதிர்கொள்கிறார்கள். உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிமுறைகளால் உணவு ஒரு மனித உரிமையாக அல்லாமல் வெறும் வணிகப் பொருளாகவே பார்க்கப்படுகிறது. 1995 முதல் விவசாயக் கொள்கைகள் உட்டோவின் கட்டுப்பாடுகளுக்குள்ளேயே வகுக்கப்பட வேண்டிய நிலை உள்ளது.
நார்மன் பெத்தூன் – மக்களுக்காக போராடிய மருத்துவர்
1890-ல் பிறந்து 1939 நவம்பர் 12-ல் மறைந்த நார்மன் பெத்தூன் ஒரு அர்ப்பணிப்பு மிக்க கம்யூனிஸ்ட் மற்றும் சர்வதேச மருத்துவர். சுகாதாரம் அனைவரின் அடிப்படை உரிமை என்ற கொள்கையுடன் செயல்பட்டவர். உலகப் பொருளாதார மந்தநிலையின் போது, கனடாவில் ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவம் பார்த்தார். சோவியத் யூனியனின் மக்கள் நல மருத்துவ முறையிலிருந்து பாடங்களை கற்றுக் கொண் டார். ஸ்பானிய உள்நாட்டுப் போரில் பாசிசத்துக்கு எதிராகவும், பின்னர் சீன-ஜப்பானிய போரில் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாகவும் பணியாற்றினார். “மருத்துவத்துறையில் இருந்து தனியார் லாபத்தை அகற்றி, நோயாளிகளிடம் ‘நீங்கள் எவ்வளவு வைத்துள்ளீர்கள்?’ என்று கேட்பதற்கு பதிலாக ‘நாங்கள் எப்படி உங்களுக்கு சிறந்த சேவை செய்ய முடியும்?’ என்று கேட்க வேண்டும்” என்ற அவரது வார்த்தைகள் இன்றும்பொருத்தமானவை.
இஸ்ரேலின் ரஃபேல் ஆயுத ஆலைக்கு எதிரான போராட்டம்
பிரிட்டனின் நியூ கேசில் நகரில் உள்ள இஸ்ரேலின் ரஃபேல் ஆயுத தொழிற்சாலையை மூடக்கோரி நவம்பர் 9-ல் பெரும் போராட்டம் நடைபெற்றது. 1948 முதல் செயல்படும் இந்த ஆலை, எஃப் 35 போர் விமானப் பாகங்களை உற்பத்தி செய்கிறது. பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். அரசின் செவிசாய்க்காத போக்கால், தினசரி நுழைவாயில் முற்றுகைப் போராட்டம் தொடர்கிறது.
நைஜர் நாட்டின் பேரவலம்
ஆப்பிரிக்காவின் மிக ஏழை நாடுகளில் ஒன்றான நைஜரில், ஜூன் முதல் அக்டோபர் வரை பெய்த பெருமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 339 பேர் உயிரிழப்பு, 11 லட்சம் மக்கள் இடப்பெயர்வு, 1.9 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிப்பு என பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பொருளாதாரத் தடைகளால் சிக்கித் தவிக்கும் நாட்டில், பருவநிலை மாற்றத்தின் தாக்கம் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் ராணுவ ஆதிக்கம் அதிகரிப்பு
நவம்பர் 4-இல் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆறு முக்கிய மசோதாக்கள் விரைவாக நிறைவேற்றப்பட்டன. எவ்வித விவாதமும் இன்றி, கீழவையில் 24 நிமிடங்களிலும், மேலவையில் 16 நிமிடங்களிலும் இவை நிறைவேற்றப்பட்டது ஜனநாயகத்திற்கு ஆபத்து என எதிர்க்கட்சிகள் எச்சரிக்கின்றன. முப்படைத் தளபதிகளின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகளிலிருந்து பத்து ஆண்டுகளாக உயர்த்தப் பட்டுள்ளது. ஓய்வு பெறும் வயது வரம்பு நீக்கப் பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 9-லிருந்து 12 ஆகவும், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆகவும் உயர்த்தப் பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சாதகமான நீதிபதி நியமனங்களைத் தடுக்கவே இந்த மாற்றங்கள் என அவரது கட்சி குற்றம்சாட்டு கிறது.
உபேர்/லிப்ட் ஓட்டுநர்களின் போராட்டம்
அமெரிக்காவின் டென்னஸ்ஸி மாநிலத்தில் உபேர் மற்றும் லிப்ட் வாடகை வாகன ஓட்டுநர்கள் டென்னஸ்ஸி டிரைவர்ஸ் யூனியனில் இணைந்து போராட்டம் நடத்துகின்றனர். நவம்பர் 20-இல் நடந்த இசைப் போட்டி நாளன்று வேலை நிறுத்தம் செய்தனர். ஒவ்வொரு பயணத்திலும் 60-80% தொகையை நிர்வாகம் எடுத்துக்கொள்வதாகவும், ஓட்டுநர்கள் வறுமை ஊதியத்தில் 12 மணி நேரம் பணிபுரிய வேண்டியுள்ளதாகவும் குற்றம்சாட்டு கின்றனர். வெளிமாநில ஓட்டுநர்களை அனுமதிப்ப தால் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.