world

img

தீக்கதிர் உலக செய்திகள்

உணவின்றி பட்டினியால் பலியாகும் அபாயத்தில் பாலஸ்தீனர்கள் 

காசாவில் பாலஸ்தீனர்கள் உணவின்றி பட்டினியால் பலியாகும் அபாயம் உருவாகி யுள்ளது. இஸ்ரேல் நாடாளு மன்றம்  பாலஸ்தீன அகதி களுக்கான ஐ.நா  நிவாரணம் மற்றும் பணி நிறு வனத்தை  அந்நாட்டில் இயங்க தடைவிதித்துள்ளது. இது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்று  கமிஷனர் ஜெனரல் பிலிப் லாசரினி எச்சரித்துள்ளார். கடந்த காலத்தில் பாலஸ்தீனப் பகுதிக்குள் தினமும் 500 லாரிகள் ஐ.நா. உதவிப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. தற்போது அது 37 லாரிகளாக குறைந்துவிட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை அரசுக்கு  நிதி ஐஎம்எப் ஒப்புதல் 

சர்வதேச நிதி நிறுவனம் (IMF) மற்றும் இலங்கை அரசுக்கு இடையே கடன் ஒதுக்கீடு குறித்து உடன்பாடு ஏற்பட்டுள்ளது. சர்வதேச நிதி நிறுவனத்தின் உயர் மட்ட குழுவுடனான ஆலோசனை நிறைவு செய்யப்பட்டவுடன் இலங்கைக்கு சுமார் 2,700 கோடி ரூபாய் (333 மில்லியன் டாலர் ) நிதி கொடுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு நம்பிக்கையை மேம்படுத்தியுள்ளது மற்றும் கொள்கை தொடர்ச்சியை உறுதிப்படுத்துகிறது என ஐஎம்எப் தெரிவித்துள்ளது.

ஆட்சிக்கவிழ்ப்பு சதி போல்சானரோ மீது வழக்கு

பிரேசில் முன்னாள் ஜனாதிபதி போல்சான ரோ ஆட்சிக்கவிழ்ப்பு சதி செய்ததற்காகவும், குற்றவாளிக் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்த தற்காகவும்  அந்நாட்டு காவல்துறையால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டில் போல்சானரோ உள்ளிட்ட 36 பேரின் பெயர் பட்டியலில் இருப்பதாகவும் அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. 2022 ஜனாதிபதித் தேர்தலில் போல்சானரோ தோல்வியடைந்ததைத் தொடர்ந்து வன்முறையை தூண்டி லூலா டி சில்வாவின் ஆட்சியை கலைக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத் தாக்குதல் குட்டரெஸ்  கண்டனம்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செய லாளர் அந்தோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரி வித்துள்ளார். மேலும் பொது மக்களுக்கு எதிரான இதுபோன்ற தாக்குதல்களை  ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கொல்லப்பட்டவர்களுக்கு இரங்க லையும் தெரிவித்துள்ளார். வியாழக்கிழமையன்று பயணிகள் பயணித்த 3 வாகனங்களை குறிவைத்து  நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 42 பேர் படுகொலையானார்கள், 20 பேர் படுகாயமடைந்தனர்.    

மனநல பிரச்சனையால் இஸ்ரேல் வீரர்கள் தற்கொலை 

காசா, லெபனானில் போருக்கு பின் வரும் போஸ்ட்-ட்ரௌமாட்டிக் ஸ்ட்ரெஸ் டிஸார்டரால் (PTSD)  வீரர்கள் கடுமையான மன அழுத்தத்தை சந்திப்பதாகவும் அதனால் தற்கொலை செய்து கொள்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் மட்டும்  1,700 வீரர்கள் மனநல சிகிச்சை எடுத்ததாக இஸ்ரேல் ராணுவ மனநல மருத்துவ தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார். போரில் காயம் அடைந்தவர்களை விட மனநல பாதிப்புக்குள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.