தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் சட்டத்திருத்தம் : போர்ச்சுக்கலில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம்
லிஸ்பன்,நவ.11- போர்ச்சுக்கலில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலான சட்டத் திருத்தத்தை அந்நாட்டு அரசு முன்மொழியத் திட்டமிட்டுள்ளது. இதனை கண்டித்தும் அடிப்படை ஊதியத்தை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியும் அந்நாட்டின் தலைநகரில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். போர்ச்சுக்கல் பிரதமர் லூயிஸ் மாண்டினீக்ரோ தீவிர வலதுசாரியாக உள்ளார். இவரது சிறுபான்மை அரசாங்கம் தொழிலாளர்களின் உரிமைகளை பறித்து அதிகம் சுரண்டும் வகையில் சில சட்டத் திருத்தங்களை முன்மொழியத் திட்டமிட்டுள்ளது. அவ்வாறு முன்மொழியப்பட்டால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் தீவிர வலதுசாரி ‘சீகா’ கட்சியின் ஆதரவுடன் அது நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கண்டித்து அந்நாட்டின் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தன. இப்போராட்டத்தில் தொழிலாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டு “புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்பு வேண்டாம்” என்றும் அடிப்படை ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். அரசு முன்மொழிய உள்ள சட்டத் திருத்தத்தில் தொழிலாளர்களின் பணிப்பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தொழிலாளர்களுக்கு எந்த ஒரு எதிர்காலப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உறுதி செய்யாமல் அவர்களை மிக எளிதாகவும் உடனடியாகவும் வேலையில் இருந்து நீக்க வழிவகை செய்கிறது. பணிநேரத்தில் குழந்தைக்குப் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வந்த நேரத்தைக் குறைக்கிறது. கருச்சிதைவுக்கு ஆளான பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மருத்துவ விடுமுறை நாட்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படுகிறது. தற்போது போர்ச்சுக்கலில் குறைந்தபட்ச மாத ஊதியம் 870 யூரோ (78,000 ரூபாய்) ஆக உள்ளது. இந்த ஊதிய அளவை 1,050 யூரோ (94,000 ரூபாய்) ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
