ஹைபோதெர்மியாவால் காசாவில் 15 குழந்தைகள் பலி
காசா பகுதியில் ஹைபோதெர்மியா காரணமாக 15 குழந்தைகள் பலியாகி யுள்ளன. பாதுகாப்பான தங்குமிடம் இல்லாத இந்த சூழல் பாலஸ்தீன குடும்பங்களுக்கு “குளிர்காலத்தை ஒரு கொடிய அச்சுறுத்தல் மிகுந்த காலமாக மாற்றியுள்ளது”. பால ஸ்தீனர்களுக்கு போர்வைகள் மற்றும் வெப்ப மூட்டும் ஹீட்டர்கள் அவசரத் தேவையாகி யுள்ளது. ஆனால் இஸ்ரேல் ராணுவம் அத்தியா வசியப் பொருட்களை பாலஸ்தீனர்களுக்கு கொடுக்க விடாமல் தடுத்து வருகிறது.
‘பன்முக வளர்ச்சிக்கு உந்துதலாக பிரிக்ஸ் கூட்டமைப்பு இருக்கும்
வளரும் நாடுகளின் உரிமைகளை உள்ளடக்கிய பன்முகத் தன்மையுடன் கூடிய உலக வளர்ச்சிக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு உந்து விசையாக இருக்கும் என பிரேசில் ஜனாதிபதி லூலா தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு பிரேசிலில் நடைபெற உள்ள நிலையில் சர்வதேச அமைப்புகள், சுகாதாரம், காலநிலை மாற்ற நடவடிக்கை, வர்த்தகம், செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி உள்ளிட்டவற்றை குறித்து இம்மாநாடு தீவிரமாக விவாதிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூடானில் 2.46 கோடி மக்கள் பட்டினியில் தள்ளப்பட்டுள்ளனர்
சூடானில் மோசமான பஞ்சம் உருவாகியுள்ளது குறித்து ஐ.நா கடுமையாக எச்சரித்துள்ளது. போர்களால் லட்சக்கணக்கான சூடான் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுடானில் சுமார் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்ற உள்நாட்டுப் போரால் லட்சக்கணக்கான சூடான் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். இப்போர் நாட்டின் பல பகுதிகளை மக்க ளுக்கு நரகமாக மாற்றியுள்ளது என்று மனிதாபி மான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவல கத்தை சேர்ந்த ஏடிம் ஒஸோர்னு குறிப்பிட்டுள்ளார். தற்போது 2.46 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான பட்டினியில் தள்ளப்பட்டுள்ளனர்.
கனிமவள பகுதிகளை கைப்பற்றி வரும் எம்23 படை
காங்கோ ஜனநாயகக் குடியரசில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் மேலும் தீவிர நிலைக்கு சென்றுள்ளது. போரை நிறுத்துவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ருவாண்டா ஆதரவு எம்23 படைகளால் நிராகரிக்கப்பட்டது. இப்படை காங்கோவின் கோமா, புகாவு, கிவுஸ், உவிரா, கமன்யோலா என பல நகரங்களை கைப்பற்றி யுள்ளது. குறிப்பாக கனிமவளங்கள் நிறைந்த 1,24,000 கிமீ பகுதிகளை இப்படை கைப்பற்றி யுள்ளது. இப்போரால் ஒட்டுமொத்த நாட்டின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.
‘சீன கப்பல்களுக்கு வரி அமெரிக்காவுக்கே பாதிப்பு’
சீனக் கப்பல்களுக்கு வரி வசூலித்தால் அது அமெரிக்க நலனையே பாதிக்கும் என சீன வர்த்தக அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹீ யாடோங் எச்சரித்துள்ளார். இந்த வரி கப்பல் வர்த்தகச் செலவை அதிகரித்து உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் உறுதித்தன்மையை சீர்குலைக்கும். அதனுடன் அமெரிக்காவின் பணவீக்கத்தையே அதிகரிக்கும். இது அமெரிக்க வர்த்தக நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்க பொருளாதாரம் மற்றும்
வேலைவாய்ப்பில் பல மோசமான விளைவு களை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
விரிசல் அடைகிறதா அமெரிக்கா-ஐரோப்பா கூட்டணி ? ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது 25 சதவீத வரி விதிக்கும் அமெரிக்கா
ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது 25 சதவீத வரி விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். மேலும் அமெரிக்காவிற்கு குடைச்சல் கொடுப்பதற்காக தான் ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டது என்று கடுமையாக விமர்சித்துள்ளார். டிரம்ப் பதவியேற்புக்கு பிறகு நடைபெற்ற முதல் அமைச்ச ரவை கூட்டத்திற்கு பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இதோ பாருங்கள், நான் நேரடியாகவே பேசுகின்றேன், அமெரிக்காவைத் திருடுவதற்காக தான் ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டது. அதன் நோக்கமே நம்மை குடைந்து திருடுவது தான்.
அவர்கள் அதை நன்றாகவே செய்திருக்கிறார் கள். ஆனால் இப்போது நான் ஜனாதிபதியாகி விட்டேன் என தெரிவித்தார். தனது அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய போது ஐரோப்பிய ஒன்றியம் உண்மையில் அமெரிக்காவை நன்றாக பயன்படுத்திக் கொண்டது. ஐரோப்பாவின் நோக்கம் நியாயமற்ற முறையில் இருக்கிறது என்ற தொனியில் பேசிய அவர் சீனா, கனடா, மெக்சிகோ மீது வரி விதித்தது போல ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். டிரம்ப்பின் இந்த பேச்சுக்கு ஐரோப்பிய நாட்டின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஐரோப்பிய ஒன்றியம் உலகின் மிகப்பெரிய தடையற்ற சந்தையாகும். இந்த சந்தை அமெரிக்காவிற்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது என்று ஐரோப் பிய ஆணையத்தின் சில முக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஐரோப்பிய ஒன்றியம் மீது வரி விதிக்கப்பட்டால் “உறுதியாகவும் உடனடியாகவும்” பதிலடி நடவடிக்கைகளை எடுப் போம் என ஐரோப்பிய ஒன்றிய ஆணைய அதிகாரிகள் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கள் மக்களுக்கும் வணிகங்களுக்கும் இந்த சுதந்திரமான தடையற்ற சந்தை வாய்ப்புகளைப் பாதுகாக்க நாங்கள் ஒன்றாக வேலை செய்ய வேண்டுமே தவிர ஒருவருக்கொருவர் எதிராக இருக்கக் கூடாது என ஐரோப்பிய ஆணையத்தின் முக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை துவங்கியதில் இருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான மோதல் போக்கு அதிகரித்து வருகின்றது. தற்போது டிரம்ப்பின் இந்த பேச்சு முரண்பாடுகளை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. டிரம்ப்பின் இந்த பேச்சுக்கு பின் அமெரிக்காவின் பொருளாதார நலன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது 2024 இல் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே உள்ள 27 நாடுகளுடனான வர்த்தகப் பற்றாக்குறை சுமார் 235.6 பில்லியன் டாலர்களாக இருந்துள்ளது. அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை விட அந்நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்வது தான் மிக அதிகமாகும்.