திங்கள், செப்டம்பர் 27, 2021

world

img

முதலுதவி உருவான வரலாறு

பாதிக்கப்பட்டவர்களின் உயிரை பாதுகாத்தல், நிலைமை மோசமாவதை தடுத்தல், குணமடைய வகை செய்தல் என்பதை நோக்கமாகக் கொண்ட முதலுதவியின் வரலாறு என்ன என்று கொஞ்சம் பார்க்கலாமா
முதலுதவியின் பழக்கம் முதன்முதலில் 11ம்நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதன் பழக்கம் இடைக்காலங்களில்  கைவிடப்பட்டது. பின்னர் 1859இல் ஜீன் ஹென்ரி டுனன்ட் ,சல்பிரினோ போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய கிராமவாசிகளை திரட்டினார் . அவர்கள் போர்களில் பாதிப்படைந்தவர்களுக்கு  முதலுதவியையும் செய்தனர். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், நான்கு நாடுகள் ஜெனீவாவில் சந்தித்து ,போரால் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு உதவும் நோக்கில் ஒரு சங்கத்தை உருவாக்கின .அதுவே பின்னாளில் செஞ்சிலுவை சங்கமாக வளர்ந்தது. முதலுதவியை கற்பிப்பதற்கென  புனித ஜான் அவசர ஊர்தி 1877 இல் தொடங்கப்பட்டது. அதோடு நிறைய சங்கங்கள் இணைந்தன. இது போன்ற செயல்களால் முதலுதவி என்னும் சொல் 1878இல் முதன்முதலில் வழங்கப்பெற்றது. அன்றைய காலத்தில்  பல தொடர்வண்டி மையங்களிலும் சுரங்கங்களிலும் அவசர ஊர்தி சேவைகள் முதல் சிகிச்சை என்ற பெயரிலும் தேசிய சேவை  என்ற பெயரிலும் செய்யப்பட்டன. 1878இல் அறுவை சிகிச்சை நிபுணர் பீட்டர் ஷெபர்ட் பொதுமக்களுக்கு முதல் உதவி திறன்கள் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிக்கொண்டு வந்தார் . மருத்துவர் கோல்மனுடன் இணைந்து ஷெப்பர்ட், அவர் உருவாக்கிய பாடத்திட்டத்தை கொண்டு வுல்விச்சில் உள்ள பிரஸ்பைடிரியன் பள்ளியில் பாடம் நடத்தினார் . ஷெபர்ட்தான் முதன்முதலில் காயப்பட்டோருக்கான முதலுதவி என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இச்செயல்களுக்குப் பிறகு முதலுதவியின் பயிற்சி வகுப்புகள் வெகுவாக நடத்தப்பட்டன. பின்னர் முதலுதவியின் படிப்படியான வளர்ச்சிகள் போர்களால் உருவாகி உள்ளது எனலாம்
இந்நிலையில் முதலுதவின் அவசியத்தை சுட்டும் பொருட்டு இரண்டாயிரத்தில் சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு,மற்றும் செம்பிறை சங்கங்களினால் செப்டம்பர் மாதம் இரண்டாம் சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில்  நெருக்கடி நிலைமையில் உயிரை காப்பாற்றுவதன் அவசியத்தை மக்களிடையே ஏற்படுத்துவதே  பொருட்டு இன்று சர்வதேச முதலுதவி தினம் முன்னெடுக்கப்படுகிறது. 
 

;