what-they-told

img

இந்நாள் ஆகஸ்ட் 30 இதற்கு முன்னால்

1945  இரண்டாம் உலகப்போரின் முடிவில் சரணடைந்த ஜெர்மனியை நிர்வகிக்க, சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தலைமைத் தளபதிகளைக்கொண்ட, நேசநாடுகளின் ‘கூட்டுக் கட்டுப்பாட்டுக் குழு’ அமைக்கப்பட்டது. அன்றைய முப்பெரும் சக்திகளான சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவை 1945இல் நடைபெற்ற யால்டா மாநாட்டில், ஜெர்மனியை எவ்வாறு நிர்வகிப்பது என்று முடிவு செய்தபடி, அவரவர் கைப்பற்றியிருந்த பகுதிகளை அவரவர் நிர்வகிப்பதென்றும், முழு ஜெர்மனிக்கும் பொதுவான முடிவுகளை மேற்கொள்ள இந்தக் கட்டுப்பாட்டுக்குழுவை அமைப்பதென்றும் முடிவெடுக்கப்பட்டிருந்தது. மாநாட்டிற்கு அழைக்கப்படாத பிரான்சிற்கும் ஒரு பகுதி வழங்கப்பட்டு, ஜெர்மனி நான்காகப் பிரிக்கப்பட்டதுடன், நிர்வாக அமைப்புகளை நடத்துவதற்காக பெர்லினும் நான்காகப் பிரிக்கப்பட்டது. முதல் உலகப்போருக்குப்பின் வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தில் இழந்த பகுதிகள், பிற நாடுகளில் ஜெர்மன் மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகள் என்று ஏராளமானவற்றை ஹிட்லர் கைப்பற்றியிருந்ததால், 31.12.1937க்குப்பின் கைப்பற்றப்பட்ட பகுதிகளனைத்தும் அந்தந்த நாடுகளுக்குத் திருப்பியளிக்கப்பட்டன. ஜெர்மனியின் எல்லைகள், மறுசீரமைப்பு உள்ளிட்டவை குறித்த பாட்ஸ்டம் ஒப்பந்தம் ஏற்பட்ட கூட்டத்திற்கு அழைக்கப்படாததால், அதன் முடிவுகளை ஏற்க பிரான்ஸ் மறுத்தது. தனித்தனிப் பகுதிகளாக இருந்தது வளர்ச்சிக்கு இடையூறாக இருந்ததால், அமெரிக்காவும், இங்கிலாந்தும் தங்கள் பகுதிகளை, 1947 ஜனவரி 1இல் பைஸோனியா என்ற பெயரில் ஒன்றாக இணைத்துக்கொண்டன. தன் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் 1945 ஜூலையிலேயே, ஊட்டச்சத்து, போக்குவரத்து,  நீதி, நிதி உள்ளிட்ட அனைத்து நிர்வாக அமைப்புகளையும் சோவியத் உருவாக்கி, சிறப்பாக செயல்படுத்தியிருந்தது. ஒருங்கிணைந்து மீண்டும் பெரிய நாடாக ஜெர்மனி உருவாவதை விரும்பாத பிரான்ஸ், தன் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளின் மாநிலங்களுக்கு அதிகத் தன்னாட்சி வழங்கியதுடன், மாநிலங்களுக்கிடையே பயணிப்பதைக்கூடக் கட்டுப்படுத்தியது.  ஆனாலும், அதைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த முடியாமல், 1948 ஆகஸ்ட் 1இல் பைஸோனியாவுடன் இணைத்ததைத் தொடர்ந்து அது ட்ரைஸோனியா ஆனது. இதுதான், 1949 மே 23இல் ஃபெடரல் ரிபப்ளிக் ஆஃப் ஜெர்மனி என்ற மேற்கு  ஜெர்மனியாக உருவாக்கப்பட்டது. சோவியத்தின் பொதுவுடை மைத் தன்மைகொண்ட நிர்வாகத்திற்கு, கட்டுப்பாட்டுக்குழுவின் முடிவுகள் ஏற்புடையதாக இல்லாத நிலையில், 1948இல் அதிலிருந்து சோவியத் வெளிநடப்புச் செய்ததைத்தொடர்ந்து செயலிழந்துவிட்ட கட்டுப்பாட்டுக்குழு, 1990இல் ஏற்பட்ட ஜெர்மனி ஒருங்கிணைப்பால் தானாக முடிவுக்கு வந்தது.