what-they-told

img

நாட்டு நடப்பு-ஒன்னு, போயிடும்...! இல்லாட்டி ஓடிடும்...!

நோயாளி மயக்க நிலையில் இருந்தார். அவர் வாயையும் மூக்கையும் மூடியவாறு ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டிருந்தது. கைகளில் டியூப் பொருத்தப்பட்டு அதன்வழியாக ரத்தமும் மருந்தும் ஏறிக் கொண்டிருந்தன. அவருடைய படுக்கையை சுற்றி தலைமை டாக்டர் அரவிந்த், ஹோமியோபதி வைத்தியநாதன், நேச்சுரோபதி ரக்சன், சித்தா டாக்டர் சிவநேசன், ஆயுர்வேதா மருத்துவர் ஆதிகேசவலு நின்றிருந்தனர். டாக்டர் அரவிந்த் பேச ஆரம்பித்தார், ‘‘டாக்டர்ஸ், இந்த கேஸ் நமக்கெல்லாம் ஒரு சேலஞ்ச். அதனாலதான் உங்க எல்லாரையும் கூப்பிட்டு இருக்கேன். இவர் மும்பை ஆஸ்பத்திரியில இருந்து பிளைட் மூலமா நம்ம ஆஸ்பத்திரிக்கு வந்து அட்மிட் ஆகியிருக்கார். இவரோட மகன் முந்த்ரா நம்ப ஆஸ்பத்திரியை பத்தி நாம கொடுத்திருக்கிற விளம்பரத்தைப் பார்த்துட்டு இவரை இங்கே கொண்டாந்து சேர்த்திருக்கார்.’’ ‘‘எது டாக்டர் ‘ஒன்னு போயிடும்... இல்லாட்டி ஓடிடும்...’னு போடறோமே அந்த விளம்பரமா?’’ கேட்டார் நேச்சுரோபதி ரக்சன்.  ‘‘அது அப்படியில்லீங்க, ‘ஒன்னு நோய் போயிடும்... இல்லாட்டி வியாதி ஓடிடும்...’ இதுதான் நாம விளம்பரத்துல போட்டிருக்கறது ஆனா ஜனங்க எல்லாரும் நீங்க சொல்றமாதிரிதான் சொல்றாங்க. அது கிடக்கட்டும், இந்த பேஷன்டோட மகனுக்கு ஒரே ஒரு ஆசைதான். அவங்க அப்பாவை படுக்கையில இருந்து எழுந்து நடக்க வச்சிடணுமாம். அதுதான் இப்ப நமக்கு சேலஞ்ச். நாமெல்லாம் ஒன்னுசேர்ந்து கொடுக்கற சிறப்பு சிகிச்சையில, படுத்துகிட்டிருக்கறவர் எழுந்து நடக்க ஆரம்பிச்சிடணும். என்ன செலவானாலும் பரவாயில்லைன்னு இவரோட பையன் முந்த்ரா சொல்லியிருக்காரு. இதெல்லாம் சொல்லிட்டு ஒரே ஒரு நிபந்தனை போட்டிருக்காரு. இவர் உடம்புல கத்தி படக்கூடாதாம். அதனாலதான் உங்க நாலுபேரையும் கூப்பிட்டிருக்கேன்.’’ ‘‘கண்டிப்பா பண்ணிடலாம் டாக்டர். இவருக்கு உடம்புல என்ன என்ன பிரச்சனை இருக்காம்?’’ கேட்டார் ரக்சன், நேச்சுரோபதி. ‘‘என்ன பிராப்ளம் இல்லைன்னு வேணா கேக்கலாம். அந்தளவுக்கு பிபி, சுகர், கைநடுக்கம், நரம்பு தளர்ச்சி, காக்கா வலிப்பு, ஹார்ட் வீக்னு பல கம்ப்ளெய்ண்ட்கள் இருக்கு. இதுதவிர வேற என்ன இருக்குன்னு கண்டுபிடிக்க 18 விதமான டெஸ்ட் எடுத்திருக்கோம், ரிப்போர்ட் வந்ததும் மீதியிருக்கிற வியாதிகள் விபரம் தெரிஞ்சுடும்.’’ ‘‘டாக்டர் நோயாளி கண்ணைத் தொறந்துட்டார். அவருக்கு எதிர்ல நாம டிஸ்கஸ் பண்ண வேணாம். வாங்க அப்படி போய் பேசலாம்’’ என்றார் ஹோமியோபதி  வைத்தியநாதன்.  ‘‘நோ, நோ, நோ ப்ராப்ளம். பேஷண்டுக்குத் தமிழ்தெரியாது. அதனால நாம தாராளமா பேசலாம். இதோ இந்த பெட்டுக்கு மேல கேமரா பொருந்தியிருக்கு பாருங்க. இதன்மூலமாக இவருக்கு நாம டிரீட்மெண்ட் கொடுக்கறதை இவரோட மகன் முந்த்ரா அவரோட செல்போன்ல பார்த்துகிட்டிருப்பாரு. அதனால நாம எதுவுமே செய்யலேன்னாலும் பேஷண்ட் முன்னாடி வந்து நின்னுக்கணும். என்ன நான் சொல்றது புரியுதா உங்க எல்லோருக்கும்?’’ என்றார் அரவிந்த். ‘‘புரியது... புரியுது’’ என்று எல்லோரும் தலையாட்டினர். ‘‘டாக்டர், நோயாளியைப் பார்த்தால் வயசானவரா தெரியறாரு. முதல்ல இவருக்கு சிகிச்சை கொடுத்து சரிபடுத்த முடியுமான்னு தெரிஞ்சுக்கணும். சித்த மருத்துவத்துல ஒரு செய்முறை இருக்கு. காலையில நோயாளியோட சிறுநீரை ஒரு கண்ணாடி பாத்திரத்துல எடுத்துக்கிட்டு அதுல 2 சொட்டு நல்லெண்ணை விட்டுட்டு அது என்ன ஆகுதுன்னு பார்க்கணும். நல்லெண்ணை பாம்புமாதிரி வளைஞ்சுதுன்னா அவர் உடம்புல வாதம் அதிகம் இருக்கு. மோதிரம்போல வட்டமா நின்னுதுன்னா பித்தம் அதிகம் இருக்கு. எண்ணெய் முத்துப்போல நின்னா கபம் அதிகம் இருக்குன்னு அர்த்தம். எண்ணெய்த்துளி வேகமா தண்ணியில பரவினா நோய் சீக்கிரம் குணமாயிடும் மெதுவா பரவினா நோய் சரியாக அதிகநாள் ஆகும். தண்ணிக்குள்ள அமிழ்ந்து போயிட்டா நோயை குணப்படுத்த முடியாது.’’ என்றார் சித்த வைத்தியர் சிவநேசன். ‘‘நேசன் சார், அதை தெரிஞ்சுகிட்டு என்ன பண்ணப்போறோம்? நோயாளியை நாம சாக விட்டுடக்கூடாது. அதுக்கு அவருக்கு என்னென்ன சிகிச்சை அளிக்க முடியுமோ அத்தனையும் கொடுத்து அவரை உயிரோட பிடிச்சு வைக்கணும். அதுக்காகத்தான் நான் உங்களையெல்லாம் சிறப்பு மருத்துவர்கள்னு இங்கே வச்சிருக்கேன்.’’ என்றார் அரவிந்த். ‘‘டாக்டர் நான் ஒரு வழி சொல்றேன். நோயாளியை என்கூட அனுப்பிடுங்க. மேற்குத்தொடர்ச்சி மலையில இருக்கற என்னோட நேச்சுரோபதி கிளினிக்கு கூட்டிட்டு போயி ஒரு வாரம் மண்குளியல் குளிக்க வச்சு, ஒரு வாரம் வாழைஇழையில கட்டி காயப்போட்டுட்டு அங்கே இயற்கையா கிடைக்கிற கனிகளையும் காய்களையும் உணவா கொடுத்து அங்கே அருவியில இருந்து விழற இயற்கை நீரை குடிக்கவச்சா இவருக்கு இருக்கற மொத்த வியாதியும் ஓடிப்போயிடும் ஆளு ஜம்முன்னு ஆயிடுவார்.’’ என்றார் நேச்சுரோபதி ரக்சன். ‘‘ரக்சன் சார். நீங்க சொல்றதைப் பார்த்தால் நோயாளி மேற்குத்தொடர்ச்சி மலையில இருந்து அப்படியே மும்பைக்கு ஓடிடுவார் போலருக்கே. அப்புறம் இவ்வளவு பெரிய ஆஸ்பத்திரியை கட்டியிருக்கறது எதுக்கு? நாம ஈயடிச்சுகிட்டு உட்கார்ந்துகிட்டிருக்கறதுக்கா? நாம நோயாளியை ஒரேயடியா வாழவும் விட்டுடக்கூடாது. கொஞ்சம் கொஞ்சமா சரி பண்ணணும். அப்போதான் நோயாளி நம்ம கண்ட்ரோல்ல இருப்பாரு.’’ ‘‘டாக்டர் நீங்க சொல்றபடி இருக்கணும்னா அதுக்கு ஒரே வழி ஆயுர்வேதம்தான். ஜோதிடமும் மருத்துவமும் கலந்ததுதான் ஆயுர்வேதம். இப்போ இவருக்கு இவரோட ராசிபடி கிரகங்கள் சரியில்லைன்னு சொல்லிட்டு 15 நாள் கழிச்சு சிகிச்சை கொடுக்கலாம். அதுவரைக்கும் இப்படியே தொடரட்டும். அப்புறம் 15 நாள் எண்ணெய்குளியல் பண்ணலாம் அதுக்கப்புறம் ஒவ்வொரு 15 நாளா வாயுக்குளியல், அக்னிக்குளியல்னு செஞ்கிட்டே இருப்போம். அஞ்சாறு மாசம் ஓடிடும்’’ என்றார் ஆயுர்வேத மருத்துவர் ஆதிகேசவலு. இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த நோயாளி கையை கொஞ்சம் தூக்கி டாக்டர் அர்விந்தை சைகையால் அழைத்து ஏதோ கூற டாக்டருக்கு என்னவென்று புரியவில்லை. அவர் வாயிலிருந்த மாஸ்க்கை கொஞ்சம் தூக்கி ‘‘வாட் சார்?’’ என்று கேட்டார். ‘‘ஹங்ரி. ஐ ஆம் ஹங்ரி பிரம் எஸ்டர்டே.’’ என்றார். ‘‘ஓ...ஐ ஆம் சாரி. ஐ வில் அரேஞ்ச் ஸம் புட்  இமீடியட்லி.’’  என்றவர் டயட்டீசியனைக் கூப்பிட்டார். டயட்டீசியன் ஓடி வந்தார். ‘‘நேத்து மதியத்தில இருந்து இவருக்கு  ஏன் எதுவும் கொடுக்காம இருக்கீங்க?’’ ‘‘நீங்கதான் டாக்டர் டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றேன்னு சொன்னீங்க.’’ என்றார் டயட்டீசியன். ‘‘ஓ... ஐ ஆம் சாரி. முதல்ல இவருக்கு எதுனா சாப்பிடக் கொடுங்க. இட்லி கொடுக்கலாமா?’’ என்றார் அரவிந்த். ‘‘என்னது. இட்லியா. பேஷண்டுக்கு அதெல்லாம் கொடுக்கக்கூடாது. இப்ப வர்ற அரிசியெல்லாம் யூரியாவுலதான் பயிராகுது. இதையெல்லாம் சாப்பிட்டா பேஷண்ட் சீக்கிரமா போய் சேர்ந்துடுவார்.’’ என்றார் ஆயுர்வேதா ஆதிகேசவலு. ‘‘அப்படின்னா ஆர்கானிக் ரைஸ் வாங்கி கஞ்சி வெச்சு கொடுக்கச் சொல்லலாம்.’’ ‘‘டாக்டர் இன்னிக்கு ஆர்கானிக் அரிசிங்கற பேர்ல எல்லாரும் ஏமாத்தறானுங்க. போனவாரம் கூட போலீஸ்காரங்க, சாதாரண அரிசியை ஆர்கானிக் அரிசி, பருப்புன்னு வித்தவரை கைது பண்ணியிருக்காங்களே பேப்பர்ல பாக்கலியா? இப்ப எந்த நிலம் இயற்கையா இருக்கு? எல்லாத்தையும் யூரியா போட்டு விஷமாக்கி வெச்சாச்சு.’’ என்றார் சித்தா சிவநேசன் ‘‘அதுவும் வேணாம்னா நெக்ஸ்ட் ஆப்ஷன் பழங்கள்தான்.’’ என்றார் டாக்டர் அரவிந்த். ‘‘அய்யோ டாக்டர், அந்த தப்பை மட்டும் செஞ்சுடக்கூடாது நாம. இன்னிக்கு மார்க்கெட்ல விக்கிற  பழங்கள் எல்லாம் இயற்கையா பழுக்க வைக்கப்பட றது இல்லை. எல்லாம் கல்லு வெச்சி பழுக்க வைக்க றது. செயற்கையா பழுக்க வைக்கிற பழங்களில் இருக்கற விஷம் இதுமாதிரி நோயாளிகளை உடனடியா கொன்னுடும்.’’ என்றார் நேச்சுரோ ரக்சன். ‘‘சரி அப்படின்னா. இப்போதைக்கு பாலைக் கொடுத்துட்டு அவருக்கு என்ன புட் கொடுக்கலாம்னு மெதுவா யோசிப்போம்.’’ என்றார் ஹோமியோ வைத்தியநாதன். அப்போது டயட்டீசியன் ‘‘சார் மன்னிக்கணும். நம்ம ஆஸ்பத்திரியில பேஷன்டுகளுக்கு பால் கொடுக்கறதை நிறுத்திட்டோம். பால்ல அப்லோடாக்சின் என்ற நச்சு இருக்கறதா அறிக்கைகள் வந்ததையும். அதை அரசாங்கம் ஒத்துகிட்டு நச்சுத்தன்மை கட்டுக்குள் இருக்குன்னு சமாளிச்சதையும் பார்த்தபிறகு நம்ம டயட்டீசியன் குழு பேஷண்டுகளை மேலும் நோயாளிகளாக்க வேணாம்னு பால் கொடுக்கறதை நிறுத்திட்டோம் டாக்டர்.’’ அந்த சமயத்தில் நோயாளி கையையும் காலையும் ஆட்டி ஏதோ சொல்ல வர... டாக்டர் அரவிந்த் அவருடைய அருகில் சென்று அவர் வாயிலிருந்த மாஸ்க்கைத் தூக்கி, ‘‘வாட் சார்?’’ என்று கேட்க,  ‘‘டேய் பாவிங்களா முதல்ல குடிக்கறது தண்ணி யாச்சும் கொடுங்கடா?’’ என்று கத்தினார் பேஷண்ட். ‘‘டயட்டீசியன் உடனே ஒரு டம்ளர் வாட்டர் கொண்டு வா.’’ என்று டயட்டீசியனிடம் சொல்லிவிட்டு நோயாளியின் பக்கம் திரும்பி, ‘‘இட் வில் கம் இமீடியட்லி சார்.’’ என்று சொல்லி நிமிர்ந்தவர் அதிர்ச்சியில் உறைந்தார். கூட இருந்த மற்ற டாக்டர்கள் ‘‘என்ன டாக்டர் பேஷன்ட் இப்படி கன்னாபின்னான்னு திட்டறாரு?’’ என்றனர். ‘‘கன்னாபின்னான்னு திட்டினாக்கூட பரவாயில்ல. ஆனா தமிழ்ல திட்டராரு. அப்படியே கொஞ்சம் பெட்டை விட்டு வெளியே வாங்க எல்லாரும். நேற்றைக்கு முந்த்ரா தனக்கு தமிழ் தெரியாதுன்னுதானே சொன்னார்.’’ என்றார் அரவிந்த். ‘‘டாக்டர் அவருக்கு தெரியாதுன்னு சொல்லி இருக்க லாம். அவரோட அப்பாவான இந்த பேஷண்டுக்கு தெரியுமா தெரியாதான்னு நீங்க விசாரிச்சு இருக்க வேணாமா?’’ என்றார் ஆதிகேசவலு. அந்த நேரம் டயட்டீசியன் தண்ணீரைக் எடுத்துக் கொண்டு ஓடிவர, ‘‘டயட்டீசியன் நில்லுங்க’’ என்றார் நேச்சுரோபதி.  ‘‘இது என்ன ஆர்.ஓ. வாட்டரா?’’ ‘‘இல்ல டாக்டர் கேன் வாட்டர்.’’ என்றார் டயட்டீசியன். ‘‘ஆர்.ஓ.வாட்டர், கேன் வாட்டர் இதுல எதுலயும் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. இதை குடிச்சா பேஷன்டோட உடம்புதான் இன்னும் வீக்காகும்.’’ என்றார். அதற்கு டாக்டர் அரவிந்த் ‘‘டாக்டர் இந்த சமயத்துல இதையெல்லாம் பாக்க வேணாம். முதல்ல இருக்கற தண்ணியை கொடுத்து பேஷண்டை சமாதானப்படுத்துவோம்.’’ ‘‘நோ டாக்டர். என் கண் முன்னால ஒரு அநியாயம்  நடக்கறதை நான் ஒத்துக்க மாட்டேன். இதுக்கு கார்ப்ப ஷேன் தண்ணியே எவ்வளவோ மேல்.’’ என்றார். ‘‘டாக்டர் நாம விவாதம் பண்றதுக்கு இது நேரமில்லை. பேஷன்ட் நேத்துல இருந்து எதுவும் சாப்பிடாம இருக்காரு. கொடுங்க இப்போதைக்கு இந்த ஒரு டம்ளர் தண்ணியையாவது குடிக்கட்டும் அவரு.’’ என்று சொல்லி டயட்டீசியன் கையில் டம்ளரை கொடுக்க டயட்டீசியன், ‘‘டாக்டர்...... பெட்ல பேஷண்டை காணோம். வாயில முக்குல சொருகி இருந்த எல்லாத்தையும் கழற்றி போட்டுட்டு எஸ்கேப் ஆயிட்டிருக்காரு.’’ என்றார் டயட்டீசியன். பேஷன்ட் பெட்டில் காணாததைக் கண்டு அதிர்ச்சி யடைந்த டாக்டர் அரவிந்த், வார்டுபாய்களை கூப்பிட்டு  கத்தினார். ‘‘என்ன வேலை பாக்கறீங்க? இந்த பெட்ல இருந்த பேஷன்ட் எங்கே?’’ என்று கேட்க    ‘‘தலைவலிக்கிற மாதிரி இருக்கு கீழே போய் ஒரு டீ சாப்பிட்டு வந்துடறேன்னு சொல்லிட்டு போயிருக்காரு டாக்டர்.’’ என்றனர். ‘‘அய்யோ ராமா...ராமா.... போங்கய்யா போய் அந்த பேஷண்டை பிடிச்சுக்கிட்டு வாங்க. அப்பத்தான் அடுத்த மாசம் எல்லாத்துக்கும் நான் சம்பளம் போட முடியும்’’ என்ற டாக்டர் தன் பாக்கட்டிலிருந்து ஒரு மாத்திரையை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு டயட்டீசியன் கையில் வைத்திருந்த தண்ணீரைப் பிடுங்கிக் குடித்தார்.  அப்போது நேச்சுரோபதி, ‘‘டாக்டர் டோண்ட் டென்ஷன். இட் இஸ் ரியலி எ மெடிக்கல் மிராக்கிள். நடக்கவே முடியாதவரை ஓட வெச்சிருக்கோம். இதுவும் ஒருவகை மல்டி ஸ்பெஷாலிட்டி டிரீட்மெண்ட்தான். ‘ஒன்னு போயிடும்... இல்லாட்டி ஓடிடும்...’னு ஜனங்க நம்ம ஆஸ்பத்திரியை சொல்றது நிருபணமாயிருக்கு.’’ என்றார்.

;