what-they-told

img

கடும் விளைவுகளை சந்திப்பீர்கள்! அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

பெய்ஜிங்,ஆக.03- சீனாவுக்கு எதிராக திட்டமிட்ட போர்ப்பதற்றத்தை தூண்டும் நோக்கத்துடன், தைவானுக்கு தனது நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியை  அனுப்பிவைத்து ஆழம் பார்த்துள்ளது ஏகாதிபத்திய அமெரிக்கா.  சீனாவின் ஒருபகுதி என்று தொடர்ந்து சீனா கூறிவரும் தைவானுக்கு செவ்வாயன்று இரவு வந்திறங்கினார் நான்சி. இப்பயணம் முற்றிலும் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது. இதனால் அமெரிக்கா பல தளங்களில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற சீனாவின் கடும் எச்சரிக்கையையும் மீறி, ஆசிய பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியே தீர வேண்டும் என்ற இழிநோக்கத்துடன் சர்வதேச நேரப்படி இரவு 10.44 மணியளவில் தைவான் தலைநகர் தைபே விமானநிலையத்தை வந்தடைந்தார் நான்சி. 

பிபிசி தகவலின்படி, நான்சியின் தைவான் பயணத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளிக்கவில்லை என்று, நான்சி தைவானில் தரையிறங்கிய பிறகு ஊடகங்களில் செய்தி பரப்பப்பட்டது. ஆனால் உண்மையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் வழியாக வந்த நான்சியை, கோலாலம்பூர் விமானநிலையத்திலிருந்து தைவானுக்கு சுமந்துசென்றதே அமெரிக்க விமானப்படையின் ஸ்பார்19 எனும் விமானம்தான்.  அதுமட்டுமல்ல, சீனா கடும் எச்சரிக்கை விடுத்த பின்னணியில், தைவானை நோக்கி நான்சி விமானத்தில் பறக்க, அவருக்கு பாதுகாவலாக சீனாவைச் சுற்றியுள்ள அனைத்து கடல் எல்லைகளிலும் அமெரிக்க போர்க்கப்பல்களும் அணிவகுத்தன. யுஎஸ்எஸ் ரொனால்டு ரீகன், யுஎஸ்எஸ் ஆன்ட்டி டாம், யுஎஸ்எஸ் ஹிக்கின்ஸ் மற்றும் யுஎஸ்எஸ் திரிபோலி ஆகிய நான்கு போர்க்கப்பல்களும் வெவ்வேறு இடங்களிலிருந்து கிழக்கு தைவான் கடல் பகுதி, பிலிப்பைன்ஸ் கடல்பகுதி, ஜப்பான் தெற்கு கடல் பகுதி ஆகிய இடங்களுக்கு விரைந்து வந்து, பெரும்பதற்றத்தை உருவாக்கின. எனவே நான்சி பெலோசி அமெரிக்க அரசின் ஒப்புதல் இல்லாமல் வந்தார் என்ற தகவல் முற்றிலும் பொய்யானது என்பது அம்பலமானது.

சீனா கடும் எச்சரிக்கை

நான்சியின் தைவான் பயணம் முற்றிலும் ஆத்திரமூட்டுவது ;மிகவும் ஆபத்தானது ;இது சீனா -அமெரிக்க உறவுகளையே தகர்க்கும் அளவிற்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்று சீனா எச்சரித்துள்ளது.  செவ்வாயன்று மாலை நான்சி தைவானை நோக்கி புறப்பட்ட நிலையில் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ , அமெரிக்காவின் சில அரசியல்வாதிகள் மிகுந்த சுயநலத்துடன் தைவான் விவகாரத்தில் மூக்கை நுழைக்கிறார்கள். இது நெருப்புடன் விளையாடுவது.ஒரே நேரத்தில் சீனாவின் ஒட்டுமொத்த 140 கோடி மக்களுக்கும் எதிரியாக மாறியிருக்கிறது அமெரிக்கா. நெருப்பு வளையத்திற்கு வந்து விழ வேண்டாம் என்று அமெரிக்க அரசாங்கத்திற்கு இறுதி எச்சரிக்கை விடுக்கிறோம் என்று கூறினார்.

இதனிடையே அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்க்கன், சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு செல்வது என எடுத்த முடிவு அவரது சொந்த விருப்பம்.அமெரிக்க நாடாளுமன்றம் சுயேட்சையானது;அரசாங்கத்திற்கு இணையான அந்தஸ்து கொண்டது. எனவே இந்த முடிவு முற்றிலும் அவருடைய தனிப்பட்ட முடிவே என்று மழுப்பலாக குறிப்பிட்டார். ஆனால் அவரது கூற்றை வாங் யீ முற்றாக நிராகரித்தார்.  நான்சி பெலோசியின் அத்துமீறிய தைவான் பயணம் சீனா -அமெரிக்கா இடையே நிரந்தரமான பகைமையை தீவிரப்படுத்தியுள்ளது என்பது மட்டுமல்ல,  ஒட்டுமொத்த உலகத்தையே பதற்றத்திற்குள்ளாக்கியுள்ளது என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக சர்வதேச அரசியல் துறை பேராசிரியர் மார்ட்டின் ஜேக்கஸ் உட்பட உலகம் முழுவதுமிருந்து கடும் கண்டனக்குரல் எழுந்துள்ளது. 

இதனால் எழும் அனைத்து பின்விளைவுகளுக்கும் அமெரிக்காவே பொறுப்பு என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

‘நான்சி வெளியேறு’

இதனிடையே தைவானிலேயே நான்சி வருகைக்கு எதிராக செவ்வாயன்று பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன.பொதுமக்கள் அமைப்புகள், அரசியல் தலைவர்கள், தொழில் வர்த்தக துறையினர் உள்ளிட்ட பல தரப்பினரும் தலைநகரம் தைபேயில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தைபே நகரில் நான்சி தங்குவதற்கு திட்டமிட்டிருந்த கிராண்ட் கியாட் ஹோட்டல் முன்பு பல்லாயிரக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டனர். செவ்வாயன்று இரவு தைபேயை வந்து அடைந்த தருணத்திலும் போராட்டங்கள் நடந்தவாறு இருந்தது.  இதனிடையே, இப்பிரதேசத்தில் வியாழன் முதல் ஞாயிறு வரை சீன மக்கள் விடுதலை ராணுவம் கடற்படை பயிற்சியை நடத்த திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

;