what-they-told

img

விடுதலை பவளவிழாவுக்கு வீதி சமைத்தவர்கள்... - l எஸ்.ஏ.பெருமாள்

மாவீரன்  திப்பு  சுல்தான்

தென்னாட்டு வேங்கை என்று வரலாற்றாசிரியர்களால் வர்ணிக்கப்படும் திப்புசுல்தான் 1763ஆம் ஆண்டு ஹைதர் அலிக்கும் பாத்திமா பீவிக்கும் மகனாகப் பிறந்தார். ‘மந்த ஆடாய் இருநூறு வருடங்கள் வாழ்வதைவிடச் சிங்கமென இரண்டு நாள் வாழ்ந்தால் போதும்’ என்ற இந்த மாவீரன் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இறுதிவரை சமரசமின்றிப் போராடியவர். இந்துக்களையும் முஸ்லிம்களையும் பேதமின்றித் தனது இருகண்களைப் போல் போற்றியவர். 1782ஆம் ஆண்டு ஹைதர் அலியின் மரணத்தைத் தொடர்ந்து தனது 19ஆவது வயதில் அதிகாரத்திற்கு வந்தார். தந்தை துவக்கிய போரைத் தென்னிந்தியா முழுவதும் பிரிட்டிஷாருக்கெதிராகத் தொடர்ந்து நடத்தினார். பல போர்முனைகளில் திப்புவிடம் வெள்ளைப் படைகள் புறமுதுகிட்டு ஓடின. 1790இல் திப்புவின் படைகள் தெற்கே திருவாங்கூர் வரை சென்று தாக்கியது. இந்தியாவின் கவர்னர் ஜெனரலாயிருந்த காரன் வாலிஸ் நேரடியாய் தலையிட்டுத் திப்புவின் கதையை முடிக்கத் திட்டமிட்டான். ஹைதராபாத் நிஜாமும், மராத்திய மன்னரும் வெள்ளையருக்குத் துணையாய் தமது படைகளை அனுப்பினர்.

1798-99 இல் இறுதிப்போர் துவங்கியது. நாலா திசைகளிலும் சுற்றி வளைத்து திப்புவை வளைத்தனர். ஸ்ரீரங்கப்பட்டினம் முற்றுகையிடப்பட்டது. போரில் திப்பு சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது குழந்தைகள் சிறைப்பிடிக்கப்பட்டு வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். கர்னல்பிரவுன் தலைமையில் தமிழ்நாட்டில் கரூர், திண்டுக்கல், ஈரோடு, அரவக்குறிச்சி ஆகிய திப்புவின் கோட்டைகளைக் கைப்பற்றினர். பரந்த நிலப்பரப்பு பிரிட்டிஷார் வசமானது. 9.6.1799இல் டபிள்யூ எம்.கார்டன் என்ற பிரிட்டிஷ் அதிகாரியின் குறிப்பின்படி சீரங்கப்பட்டினத்திலிருந்து 45,58,350 வராகன் தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த பொருட்கள், 20க்கும் மேற்பட்ட நகைகள், தங்கச் சிம்மாசனம், வெள்ளி அம்பாரி, 2000 க்கும் மேற்பட்ட பயனுள்ள நூல்கள் ஆகமொத்தம் மூன்று கோடி வராகன் மதிப்புள்ள பொருட்களை வெள்ளையர்கள் கொள்ளையடித்து அள்ளிச்சென்றனர். ‘வீரர்களின் சரித்திரம் வீழ்ந்து கிடக்கும் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு தரும் ஒரு சக்தியாகும். வகைகெட்டுத் தடுமாறும் நாட்டிற்கு வாழவழிகாட்டும் சின்னமாகும். தீரர்களின் - தியாகிகளின் சேவைகளும் செயல்களும் மக்களுக்கு நெஞ்சுரத்தையும் நம்பிக்கையையும் ஊட்டும்.

வேலூர் சிப்பாய் புரட்சி

இந்தியாவின் முதல் சிப்பாய் கலகம் வேலூரில் தமிழக சிப்பாய்களால் 1806ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம்நாள் நடந்தது. பிரிட்டிஷ் ராணுவத்தைச் சேர்ந்த தளபதிகள் சிலர் சிறைக்குள் அன்றிரவு தூங்கினர். சிறைக்காவலில் இந்தியர் சிப்பாய்களில் தமிழ்ச் சிப்பாய்கள் அதிகம் இருந்தனர். வெள்ளைச் சிப்பாய்களும் இருந்தனர். நள்ளிரவு தாண்டி 3 மணியளவில் நமது சிப்பாய்கள் போர்த்தளவாடங்கள்  இருந்த அறையை கைப்பற்றினார்கள். வெள்ளை ராணுவத்தின் லெப்டினன்ட் கர்னல்கள் தூங்கிக்கொண்டிருந்த இடத்தையும் நமது சிப்பாய்கள் முற்றுகையிட்டனர். வெள்ளை ராணுவத்தின் தளபதிகளும், சிப்பாய்களும் நமது சிப்பாய் புரட்சி வீரர்களால் கொல்லப்பட்டனர். லெப்டினன்ட் கர்னல்களில் சிலர் மட்டும் தப்பிவிட்டனர். வேலூர் கோட்டையிலிருந்த 400 வெள்ளைச் சிப்பாய்களில் 200 பேர் கொல்லப்பட்டனர்.

கேப்டன் மாக்லாசலன் என்ற பிரிட்டிஷ் தளபதி உள்பட பலர் படுகாயங்களுட ன் உயிர் பிழைத்தனர். வேலூர்க் கோட்டையிலிருந்த துப்பாக்கி வேட்டுச் சத்தமும்,பீரங்கி சுடும் ஓசையும் இரவு துவங்கியது. விடிந்த பின்னாலும் கேட்டது. மொத்தம் எட்டுமணி நேரம் இந்தக் கலகம் நடந்தது. இந்தப் புரட்சியில் வேலூர் நகரப் பொதுமக்களும் இந்தியச் சிப்பாய்களுக்கு ஆதரவாகத் திரண்டனர். ஆனால் 10.7.1806 இல் முற்பகலில் வெள்ளையர்களின் பெரும்படை கேப்டன் யங், லெப்டினன்ட் உட்ஹவுஸ், கர்னல் கென்னடி ஆகியோர் தலைமையில் வந்து வேலூர் கோட்டையை முற்றுகையிட்டுத் தாக்கியது. பெரும்படையின் முன்னால் இந்தியச் சிப்பாய்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இந்தியச் சிப்பாய்கள் 800க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பலருக்கு மரணதண்டனையும், ஜென்ம தண்டனையும் வழங்கப்பட்டன. வேலூர்ச் சிப்பாய்களின் புரட்சிக்குக் காரணங்களாக வரலாற்றாசிரியர்கள் கூறுவது: 1. மைசூர் போரில் பிரிட்டிஷாரிடம் தோற்றுமடிந்த மாவீரன் திப்புசுல்தானின் 12 மகன்களும் 6 மகள்களும் வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இந்தியச் சிப்பாய்களுக்குப் புரட்சி உணர்வைத் தூண்டியிருக்க வேண்டும்.

2. வேலூர் நகரில் வாழ்ந்த சுதந்திர உணர்வுள்ள தமிழ் மக்களுக்கும் சிப்பாய்களுக்கும் ரகசியத் தொடர்பு இருந்துள்ளது. 3. இந்தியச் சிப்பாய்கள் காதில் கடுக்கன் அணிந்திருந்தனர். அதை அணியக்கூடாது என்று வெள்ளை அதிகாரிகள் உத்தரவிட்டனர். வழக்கமாய் அணியும் துணிகுல்லாவை மாற்றி  தோலால் செய்ததை அணிய உத்தரவிட்டனர். இந்த மாறுதல்கனை எதிர்த்த சிப்பாய்களை கைது செய்து சென்னைக்கு அனுப்பி கசையடி தண்டனை வழங்கப்பட்டது. இது இந்திய சிப்பாய்களின் மத உணர்வுகளையும், மன உணர்வுகளையும் புண்படுத்தி ஆத்திரமூட்டியது. எனவே சிப்பாய்களின் புரட்சி வெடித்தது. வேலூர் சிப்பாய்களின் புரட்சி எட்டுமணி நேரம் மட்டுமே நடந்து முடிந்துவிட்டது. ஆனால் இந்திய விடுதலைப் போரில் தமிழகம் துவங்கிவைத்த இந்தப் புரட்சி ஐம்பதாண்டுகளுக்குப்பின் நிகழ்ந்த சிப்பாய் கலகத்தின் ஒத்திகையாகவும் திகழ்ந்தது. இந்து, முஸ்லிம், சிப்பாய்களின் ஒற்றுமையின் சின்னமாகவும் திகழ்ந்தது.

முதல் இந்திய சுதந்திரப் போர் என்று வர்கணிக்கப்படும் சிப்பாய் புரட்சி 1857இல்   தொடங்கி 1858இல் தோல்வியுற்று ஓராண்டுக்காலம் நடந்த இப்புரட்சிக் போர் வடஇந்தியாவில் மட்டுமே நடந்தது. இதில் தென்னிந்தியாவும் கலந்திருந்தால் இந்தியா அப்போதே சுதந்திரம் பெற்றிருக்கும் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். ஆனால் வடக்கே சிப்பாய் புரட்சி தோன்றுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே தென்னிந்தியாவில் புரட்சிகள் நடந்து பிரிட்டிஷாரால் நிர்மூலமாக்கப்பட்டுவிட்டன. முழுமையாக 1857 காலத்தில் தென்னிந்தியா ஒடுக்கப்பட்டு ஓய்ந்து போயிருந்தது. எனவே தான் தென்னிந்தியா பங்குபெற முடியவில்லை.   விடுதலைப் போரினைத் தமிழகம் பெருமையோடு துவக்கிவைத்தது. கட்டபொம்மன் முதல் மருதுபாண்டியர் வரை, வேலூர் சிப்பாய்கள் வரை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கெதிராகப் போராடி வரலாற்றில் முத்திரை பதித்தனர். இவர்கள் போராடிய காலத்தில் வடஇந்தியாவில் அமைதி தவழ்ந்தது. எனவே இந்திய சுதந்திரப் போரில் தமிழகத்தின் முதல் முழக்கம் செய்ததையும், வீரர்கள் போராடி மடிந்ததையும் வரலாறு மறவாது. தமிழக மக்களும் மறக்கமாட்டார்கள். பாரம்பரியமான அந்த தேசபக்திக் கனலை மீண்டும் தமிழக மக்களிடம் ஊட்டுவதற்கு விடுதலைப்போரின் பொன்விழா ஆண்டில் சபதமேற்போம்.
 

 

;