what-they-told

img

இந்நாள் ஜன. 11 இதற்கு முன்னால்

1898 - செய்தித்தாள் வரலாற்றிலேயே மகத்தான கட்டுரை என்று வருணிக்கப்படும் ‘நான் குற்றம்சாட்டுகிறேன்(ஃப்ரெஞ்சில் ஸாக்யூஸ் அல்லது ஜே-அக்யூஸ், ஆங்கிலத்தில் ஐ அக்யூஸ்)’ என்ற, ஃப்ரெஞ்சு (ஆண்)எழுத்தாளர் எமிலி ஸோலா-வால் ஃப்ரான்ஸ் குடியரசுத் தலைவருக்கு எழுதப்பட்ட திறந்த மடல் வெளியானது. யூதர் என்பதாலேயே தவறாகத் தண்டனையளிக்கப்பட்ட ‘ட்ரேஃபுஸ் விவகாரம்’ இத்தொடரில் 2019 டிசம்பர் 22இல் விளக்கப்பட்டிருப்பதால், இப்போது விளக்கப்படவில்லை. ட்ரேஃபுசுக்கெதிராக பெரும்பான்மையான ஃப்ரான்ஸ் மக்கள் மாறியிருந்த நிலையில், ட்ரேஃபுசுக்கு அளிக்கப்பட்ட தண்டனை நீதியற்றது என்றும், ஃப்ரெஞ்சு அரசு யூத எதிர்ப்பைக் கடைப்பிடிக்கிறது என்றும் குற்றம் சாட்டிய இந்தக் கட்டுரை, விடியல் (ஃப்ரெஞ்ச்சில் லோரார்) என்ற செய்தித்தாளின் முதற்பக்கத்தில் வெளியானது. ராணுவ ரகசியங்களை ஜெர்மெனிக்குத் தெரிவித்த கடிதத்திலிருந்த கையெழுத்து (ஒப்பமல்ல), ட்ரேஃபுசினுடையதைப் போலில்லையென்றாலும், அடையாளம் காணக்கூடாதென்பதற்காக அவர் வேறுமாதிரி எழுதினார் என்று கையெழுத்து நிபுணர்கள் கூறியதுட்பட, நீதித்துறையின் தவறுகளை ஸோலா சுட்டிக்காட்டியதே, பின்னர் ட்ரேஃபுசின் தண்டனை நீக்கப்பட முக்கியக் காரணமாகியது. ஆனாலும், ஸோலாமீது அவதூறு வழக்குத் தொடுக்கப்பட, விசாரணையைக் காண, உலகம் முழுவதிலிருந்தும் நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் குவிந்தனர். தன் தரப்பைத் தெரிவிக்க ஸோலாவுக்கு உரிய வாய்ப்புகள் அளிக்காமலேயே வழங்கப்பட்ட சிறைத்தண்டனையைத் தவிர்க்க, இங்கிலாந்துக்குத் தப்பிச்சென்ற ஸோலா, 1899இல் ட்ரேஃபுசின் தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தபின் ஃப்ரான்சுக்குத் திரும்பினார். 1902இல் அவரது வீட்டின் புகைபோக்கியில் ஏற்பட்ட அடைப்பால், கார்பன் மோனாக்சைடைச் சுவாசித்து ஸோலா இறந்தார். 1908இல் அவரது உடல், முக்கியமானவர்களை அடக்கம் செய்யும் பாந்தியன் தேவாலயத்துக்கு மாற்றப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டபோது, ட்ரேஃபுசைச் சுட்டுக்கொல்ல முயன்றவரும் விடுவிக்கப்பட்டது, யூத எதிர்ப்புணர்வு தொடர்வதை வெளிப்படுத்தியது. கூரையைப் பராமரிப்பவர் ஒருவர், 1953இல் இறக்கும் தறுவாயில், ஸோலாவின் வீட்டில் அடைப்பு ஏற்படுத்தி அவரைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். ‘உண்மை முன்னேறுவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது’ என்று ஸோலா குறிப்பிட்டிருந்த இந்தக் கட்டுரையின் விளைவு, புகழ் ஆகியவற்றால், உலகம் முழுவதிலும் சக்தி வாய்ந்தவர்களால் இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள், ‘ஜே’அக்யூஸ்’ என்ற ஃப்ரெஞ்சுச் சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கினர். கட்டுரைகள், நூல்கள், திரைப்படங்கள் என்று ஏராளமானவை இத்தலைப்புடன் வெளியாகியுள்ளன.

;