இளமரம் கரீம் பேச்சு
புதுதில்லி, ஜூலை 31- முத்தலாக் தடை சட்ட மசோதா அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலங்களவை உறுப்பினர் எளமரம் கரீம் கூறினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் செவ்வாய் அன்று முத்தலாக் சட்டமுன்வடிவு என்கிற 2019ஆம் ஆண்டு முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று எளமரம் கரீம் பேசியதாவது: இந்தச் சட்டமுன்வடிவை நான் எதிர்க்கிறேன். இது முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒன்று அல்ல. மாறாக, நாட்டிலுள்ள மிகப்பெரிய அளவிலான சிறுபான்மை இன த்தவர் மத்தியில் பாதுகாப்பின்மை உணர்வை உருவாக்கக்கூடிய ஒன்றாகும். எங்கள் கட்சி, ‘தலாக்’ கூறுவதை, குறிப்பாக ‘முத்தலாக்’ கூறுவதை எதிர்க்கிறது. இத்த கைய நடைமுறை இஸ்லாமிய நாடுகள் பலவற்றில் அனுமதிக்கப் படவில்லை. இந்தக் கோரிக்கையை ஏற்பது என்பது, இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணத்தைக் கொண்டுவரும். அதே சமயத்தில், பெரும்பான்மை இனத்தவர்க்கான ‘பர்சனல்’ சட்டங்களும், சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டியது தேவை என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
இந்தச் சட்டமுன்வடிவானது, இந்தச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதி ரானது மட்டுமல்ல, நன்கு நிறுவப்பட்ட அரசமைப்புச்சட்ட நடை முறைகளுக்கும் விதிமுறை களுக்கும் எதிரானதுமாகும். இந்தச் சட்டமுன்வடிவு, “அவசியத்தின் அடிப்படையில்” எனத் தொடங்கு கிறது. அவசரச்சட்டம் பிறப்பிக்கப் பட்டபோது, “அவசரத்தின் அடிப்படையில்” என்று தொடங்கி யது. இங்கே, இந்தச் சட்டமுன் வடிவைப் பொறுத்தவரை இது போன்று எவ்விதமான கோரிக்கை யும் எழவில்லை. ஏனெனில் உச்ச நீதிமன்றம், ஏற்கனவே முத்தலாக் கூறுவதை சட்டப்படி முற்றும் செல்லாது என்று அறிவித்துவிட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதித்தீர்ப்பு என்பது நம் அனைவருக்கும் நன்கு தெரியும். முத்தலாக் கூறுவது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப் பளித்திருக்கும்போது, நம் நாட்டில் இதுதொடர்பாக நடப்பில் உள்ள சட்டத்தின்படியும் இது சட்ட விரோதமாகும் என்றே கருதப் பட வேண்டும். பின், இதுபோன்ற தொரு சட்டமுன்வடிவு அறிமுகப் படுத்தப்பட வேண்டியதன் அவசியம் என்ன? இதற்குக் காரணம், நம் சமூகத்தில் ஒரேமாதிரியான ஒரே சீரான குடிமைச் சட்டத்தைத் திணித்திட வேண்டும் என்கிற இந்த அரசாங்கத்தின் ரகசிய நிகழ்ச்சிநிரலைத் தவிர வேறெந்தக் காரணமும் கிடையாது. இச்சட்டமுன்வடிவு இயற்கை யாகவே பாகுபாடுடன் கூடிய ஒன்று. இது, நாட்டிலுள்ள குற்றவியல் நடை முறைச் சட்டத்தின் கீழான வழக்கு களுடன் இதனைப் பிணைக்கிறது. நாட்டில் மற்ற மதங்களின் கீழான திருமணச் சட்டங்கள் அனைத்துமே குடிமை இயல் சட்டத்தின், கீழான வழக்குகளுடன் பிணைக்கப்பட்டுள் ளன. அவற்றின் கீழ் தொடுக்கப் படும் வழக்குகளில் தண்டனைப் பிரிவுகள் என்பவை மிகவும் எளிதானவைகளாகும்.
உச்சநீதிமன்றம், சாயா பானு (எதிர்) மத்திய அரசு மற்றும் ஒருவர் என்னும் வழக்கில், முத்தலாக் கூறும் நடைமுறையை, செல்லாது என்று கூறி, பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பின்மூலம் 2017 ஆகஸ்டில் முத்தலாக் என்று கூறுவதை செல்லாததாக்கி இருக்கிறது. அந்தத் தீர்ப்புரையில் முத்தலாக் என்று கூறுவது செல்லத்தக்கதல்ல, அரசமைப்புச்சட்டத்திற்கு எதி ரானது, பாகுபாடுடன் கூடியது, இஸ்லாமிய விரோதமானது என்று குறிப்பிட்டுள்ளது. காரணம், இந்த நடைமுறை இதனால் பாதிக்கப் படும் பெண்ணுக்கு எவ்வித மான வாய்ப்பையும் அளிக்காது மணமுறிவை ஏற்படுத்திக்கொள்ள ஆணுக்கு வகை செய்கிறது. இவ்வாறு கூறித்தான் உச்சநீதி மன்றம் அந்தத் தீர்ப்பினை கூறியது. ஆனால், இந்த அரசாங்கம், இந்தச் சட்டமுன்வடிவைக் கொண்டு வருவதற்கான நோக்கங்கள் மற்றும் காரணங்கள் என்பதன் கீழ், உச்சநீதிமன்றத்தின் கட்டளைக் கிணங்க, கொண்டு வருவதாகக் கூறியிருப்பதைப் பார்க்கையில் அதிர்ச்சியாக இருக்கிறது. உச்சநீதி மன்றம், தன்னுயை 300 பக்க தீர்ப்புரையில், எந்த இடத்திலும் முத்தலாக் கூறுவதை கிரிமினல் குற்றமாகக் கருதிட வேண்டும் என்று கூறவே இல்லை.
மோடி அரசாங்கம், முஸ்லிம் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்ச னைகள் குறித்து உண்மையிலேயே அக்கறை கொண்டிருக்கிறதா என நான் அறிய விரும்புகிறேன். எனக்குக் கிடைத்துள்ள தரவு களின்படி, முஸ்லிம் பெண்களின் வேலை வாய்ப்பு சதவீதம் என்பது நாட்டில் வெறும் 14.1 சதவீதமே யாகும். அதாவது, நாட்டிலுள்ள அனைத்து சமூக-மத இனங்களின் மத்தியில் மிகவும் குறைவான ஒன்றாக இது இருக்கிறது. முஸ்லிம் பெண்களின் கல்வியறிவு விகிதம் என்பது 50.1 சதவீதம். இதுவும் இதர பிரிவினரைவிட மிகவும் குறைவாகும். பள்ளி இறுதிவரை படிக்கும் முஸ்லிம் பெண்களின் விகிதம், தலித் மற்றும் பழங்குடி யினத்தவர்களைக் காட்டிலும் குறைவு. முஸ்லிம் பெண்களின் மீது உண்மையிலேயே இந்த அரசுக்கு அக்கறை இருக்குமானால் இப்பிரச்சனைகளைத் தீர்த்திட உரிய நடவடிக்கைகளை அது எடுத்திட வேண்டும். நாட்டிலுள்ள பர்சனல் சட்டங்கள் (Personal Law) அரசமைப்புச் சட்டத்தின் 25ஆவது பிரிவின்கீழ் பாதுகாப்பைப் பெற்றிருக்கிறது. அதாவது, மதம், திருமணம், மண முறிவு, பாரம்பரியச் சொத்து உரிமை மற்றும் குழந்தைகளைப் பாதுகாத்துப் பேணுதல் போன்றவற்றிற்கு சுதந்திரம் அளிக்கிறது. இவை ‘பர்சனல்’ சட்டத்தின் பிரிக்கமுடியாத பகுதி களாகும். இதில் தலையிடுவதற்கு அரசாங்கத்திற்கு உரிமை கிடையாது.
இந்தச் சட்டமுன்வடிவின் பின்னே இந்த அரசாங்கத்தின் மறைக்கப்பட்ட நிகழ்ச்சிநிரல் இருக்கிறது. இந்தச் சட்டமுன் வடிவானது, மக்களின் மதச் சுதந்திரம், ஒவ்வொரு மதத்தின ரும் மேற்கொள்ளும் நடைமுறை கள் மீதான சுதந்திரம் ஆகிய வற்றின்மீது ஆக்கிரமிப்பை மேற்கொள்வதற்கான வழியை ஏற்படுத்தக்கூடிய ஒன்று என்பது மட்டுமல்லாமல், இறுதியில் நாட்டில் அனைத்து மதத்தினருக்கும் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர வேண் டும் என்ற நோக்கமும் தவிர வேறல்ல. ஆளும் கட்சித் தரப்பினருக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்பு கிறேன். ஒரு தேர்தலில் ஒரு தோல்வி அல்லது ஒரு வெற்றி என்பதே வர லாற்றின் இறுதி என்பது கிடை யாது. மே 23 என்பதுடன் இந்திய வரலாறு முடிந்து விடாது. இவ்வாறு எளமரம் கரீம் கூறினார். (ந.நி.)