weather

img

10 மாவட்டங்களில் கோடை மழை அதிகம்....

சென்னை:
கோடை மழை காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் சராசரி அளவைவிட மழை அதிகம் பதிவாகியுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் இயல்பான அளவில் மழை பொழிந்துள்ளது.தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கோடை வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்தவண்ணம் இருந்தது. அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை வெயிலின் கோரத்தாண்டவத்தைக் காட்டும் கோடை வெப்பம் சுட்டெரித்தது.வழக்கமாக இந்த காலகட்டத்தில் ஒரு சில மாவட்டங்களில் வெயில் அதிகபட்சமாக 110 முதல் 115 டிகிரியை கடந்து பதிவாகும். அந்த அளவுக்கு வெயிலின் உக்கிரம் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் பெரியளவில் இல்லை என்றே கூறலாம்.

கோடை நாட்களில் வெயில் வாட்டி வதைத்தாலும், அவ்வப்போது வெப்பச்சலனம் காரணமாக கோடை மழை இருக்கும். அந்தவகையில் தமிழகத்தில் வெயில் காலம் தொடங்கியதில் இருந்தே கோடை மழை ஆங்காங்கே பெய்துகொண்டே இருக்கிறது.அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அரபிக்கடல் பகுதியில் உருவான ‘டவ்தே’ புயல் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் நல்ல மழை பெய்தது. குமரி மாவட் டத்தில் இந்த காலகட்டத்தில் மழை வெளுத்து வாங்கியது. அதன் தொடர்ச்சியாகவும் மழை பெய்கிறது.

இவ்வாறாக பெய்த கோடை மழை காரணமாக, தமிழகத்தில் கோவை, ஈரோடு, குமரி, நீலகிரி, ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, நெல்லை, விழுப்புரம், விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் கடந்த மார்ச் மாதம் முதல் தற்போதைய நிலவரப்படி, பெய்யக்கூடிய சராசரி அளவை விட அதிக மழை பதிவாகியுள்ளது.அதேபோல் கடலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சிவகங்கை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இயல்பான அளவை ஒட்டியே மழை பொழிந்து இருக்கிறது. ஒட்டுமொத்த சராசரி அளவை ஒப்பிட்டு பார்க்கையில் அதுவும் இயல்பை ஒட்டியே உள்ளது.இனி வரக்கூடிய நாட்களிலும் வெப்பச் சலனம் காரணமாக மழை இருக்கும் என்று ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி தொடங்கிய கோடை வெயில் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

;