technology

img

தகவல் தொழில்நுட்பத் துறையில் முற்றாக தோல்வியடைந்த எடப்பாடி அரசு...

தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் மூலம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ரூ.1லட்சத்து முப்பதாயிரம் கோடி பெறுமான மென்பொருள் ஏற்றுமதி நடைபெறுகிறது. ஒட்டுமொத்த இந்திய சந்தையில் 14 சதவீதம் தமிழ்நாட்டில் மட்டும் நடைபெறுகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் கடந்த பத்தாண்டுகளில்  மத்திய- மாநில அரசுகளின் தவறான கொள்கை முடிவுகளால் ஒரு மந்தநிலை நிலவுகிறது. அதனால் புதிய வேலைவாய்ப்புகள் குறைந்து விட்டது; இருக்கிற வேலைகளில் பாதுகாப்பற்ற தன்மையே நிலவுகிறது.

ஏமாற்றமளித்த மத்திய அரசு
சில மாதங்களுக்கு முன்பு தகவல் தொழில் நுட்பத்துறை முதலாளிகள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி இந்தியாவின் பெருமைக்குரிய விஷயமாக தகவல் தொழில்நுட்பத்துறை விளங்குகிறது என்றார். தொழி
லாளர் சட்டத் திருத்தங்கள் மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமான வேலை (Fixed Term Employment), காண்ட்ராக்ட், தற்காலிகம், ஜிஐஜி பணி போன்ற வேலை முறைகளுக்கு அரசு பல விதமான அங்கீகாரங்களையும் அளித்துள்ளது. இதன் மூலம் வருங்காலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் நிரந்தர ஊழியர்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கும். இதுதான் இந்தியாவின் பெருமைக்குரிய தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பிரதமர் செய்யும் நன்றி.
 ஏற்கனவே தகவல் தொழில்நுட்பத் துறையில் இருக்கும் இரு பிரதான பிரச்சனைகள்- ஒன்று, வேலை நேரம்; மற்றொன்று, வேலை பாதுகாப்பு. ஆனால் மத்திய அரசின் தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் மூலம் மேலும் இந்த பிரச்சனையை தீவிரப்படுத்துவதாகவும் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சாதகமாகவும் உள்ளன. 

‘வீட்டிலிருந்தே பணி செய்வது’ - பற்றிய எந்தக் கருத்து கேட்பும் தொழிலாளர்களிடமும் தொழிற்சங்கங்களிடமும் கேட்காமல் முதலாளிகளின் கூட்டமைப்பான நாஸ்காம் (Nasscom) மிடம் கோரிக்கை கேட்டுப் பெற்றுக் கொண்டு அதில் கூறப்பட்ட OSP விலக்கு உட்பட சில கோரிக்கையை நடைமுறைப்படுத்தி உள்ளது அரசு.  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி விலக்கு, கட்டற்ற வேலை நேரம் போன்ற முதலாளிகளின் இதர கோரிக்கையை நடைமுறைப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதும் இத்துறையின் தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கையாகும். இதே மோடி அரசு அமெரிக்காவில் H1B விசா சம்பந்தமான தடையை டொனால்டு டிரம்ப் கொண்டு வந்தபோது பல இந்திய தொழிலாளர் வாழ்க்கை கேள்விக்குறியானது. ஆனால் அந்த பிரச்சனையை தீர்க்க  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் இந்தியா, மேக் இன் இந்தியா என்கிறமுழக்கங்கள் எந்தவிதத்திலும் தகவல் தொழில்நுட்பத்துறைக்கான இந்திய சந்தையை உருவாக்கவில்லை. இன்றளவும் தகவல் தொழில்நுட்பத் துறை வெளிநாடுகளின் அவுட்சோர்சிங் சார்ந்தே உள்ளது. இது மேலும் புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதில் பிரச்சனையாக உள்ளது.

தமிழக அரசும்- புதிய வேலை உருவாக்கமும்
கடந்த 10 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சியில் உள்ள அதிமுக அரசு இத்துறையின் வளர்ச்சிக்கு பெரிய அளவுக்கு பங்காற்றவில்லை. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான சிறப்பு பொருளாதார மண்டலம் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 8 சிறப்பு பொருளாதார மண்டலம் அரசு நிறுவனமான எல்காட்  (Elcot) மூலம் நடைபெறுகிறது. சென்னையை தவிரபிற மாவட்டங்களில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலம்முழுமையாக செயல்படாமல் இருக்கிறது. குறிப்பாக திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடபழஞ்சி எல்காட்டில் ஒப்பந்தங்கள் போடப்பட்ட பிறகும் இன்னும் நிறுவனங்கள் தொடங்கப்படவில்லை. இதே போன்ற நிலை ஓசூர்,தூத்துக்குடி போன்ற நகரங்களில் உள்ள எல்காட்டிலும் ஒப்பந்தங்கள் போட்ட பிறகும் நிறுவனங்கள் தொடங்கப்படவில்லை. அதே போன்று நீண்ட நாள் கோரிக்கையான ஐடி எக்ஸ்பிரஸ்வே - சிறுசேரி முதல் மகாபலிபுரம் வரை விரிவாக்கப் பணிகள் பல ஆண்டுகளாக மெத்தனமாக நடைபெறுகிறது. கோவை டைடல் பார்க் நிறுவனம் மூலம் கட்டப்படும் இரண்டாம் கட்டுமானம் தாமதமாக நடைபெறுகிறது.

பல இடங்களில் ஒப்பந்தம் போடப்பட்டு நிறுவனங்களிடமும் அரசில் உள்ளவர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள். இதைப்பற்றி அண்மையில் அமெரிக்க நீதிமன்றத்தில் சிடிஎஸ் (CTS) நிறுவனம் சிறுசேரி சிப்காட்டில் கட்டடம் கட்டுவதற்கு தமிழக அரசு அதிகாரிகளிடம் 25 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதுபோன்ற பல காரணங்களால் தமிழ்நாடு புதிய தகவல் தொழிநுட்ப வேலை உருவாக்கத்தில் பின்தங்கியுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் சராசரியாக 4 சதவீதம் என்ற அளவிலேயே புதிய வேலைகள் தமிழ்நாட்டில் உருவாகி உள்ளன. இதுவே அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஹைதராபாத்தில் 10 சதவீதம் அளவுக்கு புதிய வேலைவாய்ப்பு தகவல் தொழில்நுட்பத் துறையில் உருவாகியுள்ளது.

அரசு நிறுவன வேலைகள் அவுட்சோர்சிங்
கடந்த பல ஆண்டுகளாக தமிழக அரசு தனது தகவல் தொழில்நுட்ப எதிர்கால நோக்கமாக E-Governed State என்று கூறி வருகிறது. அதற்கு பல திட்டங்களை அரசு நிறுவனங்கள் மூலம் உருவாக்கியது. ஆனால் அந்த வேலைகள் அவுட்சோர்சிங் மூலம் தேர்வு செய்யப்படுகின்றன. இதில் முக்கியமாக இ- சேவை, ஆதார் சென்டர்போன்ற இடங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கூட உறுதிசெய்யப்படவில்லை. பெரும்பாலும் காண்ட்ராக்ட் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். இவர்களுக்கான பணி நிரந்தரம்,ஊதிய உயர்வு கேட்டு தகவல் தொழில் நுட்ப தொழிற்சங்கங்கள் அரசிடம் பலமுறை முறையிட்டும் அரசு இந்த பிரச்சனையை தீர்க்கவில்லை.

முதல்வருக்கு கேள்விகள்
சில தினங்களுக்கு முன்பு சோழிங்கநல்லூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக முதல்வர் தகவல்தொழில்நுட்பத் துறையில் வேலை செய்யும் ஊழியர்களின் பணிச்சுமை அதிகமாக உள்ளதாகவும் அதை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தகவல் தொழில்நுட்பத் துறை தொழிற்சங்கங்கள் சார்பில் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறோம். கடந்த பத்தாண்டுகளாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் சட்டவிரோதமாக பணி நீக்கப்பட்ட, குறைந்த ஊதியம் அளிக்கும் நிறுவனங்கள் பற்றிய, அதீத பணிச் சுமை பற்றிய, பெண் ஊழியர் பிரச்சனை பற்றிய பல புகார்களைஉங்கள் அரசின் கீழ் உள்ள தொழிலாளர் துறையிடம், அமைச்சகத்திடம் பல முறை தந்துள்ளோம். ஆனால் அந்தபுகார்கள் மீது இதுவரையும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. பல புகார்கள் இன்னும் தொழிலாளர் துறை கீழ் விசாரணையில் தான் உள்ளது. இது உங்கள் கவனத்திற்கு வரவில்லையா? வேலை நேரம் உயர்வு பற்றி பேசுகிறார் முதல்வர்; மத்திய அரசு வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வழிவகை செய்யும் தொழிலாளர் விரோத சட்ட திருத்தங்களை கொண்டு வரும்போது, நீங்கள் ஏன் ஆதரித்தீர்கள்? அதன் மூலம் எங்கள் பணிச் சுமையை அதிகரிப்பதற்கு சட்ட அங்கீகாரம் கொடுத்ததில் உங்கள் பங்கும் உள்ளது.

அதேபோன்று உங்கள் அரசு பெண்களுக்கான அரசு என்று தொடர்ந்து கூறிக்கொண்டு உள்ளீர்கள். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்ப துறையில் பெண்கள் பாதுகாப்பில் பல பிரச்சனைகள் வந்துள்ளன உமாமகேஸ்வரி, ஸ்வாதி வழக்குகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். விசாகா கமிஷன்  கருத்துப்படி, பாலியல் சம்பந்தமான புகார்கள் அதிகமாக தகவல் தொழில்நுட்பத் துறையில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பான்மையான வழக்குகள் புகார்தாரருக்கு எதிராகவே முடிக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற அநீதிக்கு எதிராக ஒரு வழக்கை தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்யும்  ஒரு பெண் ஊழியர், பிரபலமான டிசிஎஸ் நிறுவனத்துக்கும் எதிராக இந்தியாவில் முதல் முறையாக கொடுத்துள்ளார். 

இதுபோன்று பெண்கள் பணியிடங்களில் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகளை எடப்பாடி அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

கொரோனா காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ‘வீட்டிலிருந்தே பணி’ (Work From Home) என்கிற முறையில் பணி செய்ய அரசு உத்தர விட்டது. ஆனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் இத்துறையில் உள்ளவர்கள் தொடர்ந்து வீட்டிலிருந்தே (work from home) வேலை செய்ய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதை அரசு எந்த தொழிற்சங்கத்திடம் கலந்துரையாடி முடிவெடுத்தது? தொழிற்சங்கங்கள் தொடர்ந்து தகவல் தொழில்நுட்பத்துறையில் எந்த முடிவாக இருந்தாலும் முத்தரப்பு கமிட்டி அமைத்து முடிவு எடுக்க வேண்டும் என்றுகோரிக்கை வைத்துள்ளோம், அதை ஏன் இந்த அரசு செயல்படுத்தவில்லை?

தேர்தல் கோரிக்கை
தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் புதிய வேலை வாய்ப்புகள் தொடர்பாககீழ்க்கண்ட கோரிக்கைகளை இத்தேர்தலில் முன்வைத்துள்ளோம்.

$  மதுரை வடபழஞ்சி எல்காட் உட்பட ஓசூர், தூத்துக்குடி, சேலம் எல்காட் நிறுவனங்களை முழு செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

$ விழுப்புரம், கடலூர், திருநெல்வேலி தகவல் தொழில்நுட்பப் பூங்கா தொடங்க வேண்டும்.

$ கோவை டைடல் விரிவாக்கப் பணிகள் விரைந்து முடிக்க வேண்டும்.

$ ‘வீட்டிலிருந்து பணி’ (Work From Home) முறையை ஒழுங்குபடுத்த செயல் திட்டம் கொண்டுவர வேண்டும்.

$ ‘வீட்டிலிருந்தே பணி’ (Work From Home) என்பதில், வேலை நேரத்திற்குப் பிறகு இணைப்பைத் துண்டிக்கும் உரிமைக்கான சட்டத்தை இயற்ற வேண்டும் (Right to Disconnect). 

$ ‘வீட்டிலிருந்து பணி’யில் (Work From Home) 6 மணிநேர வேலை நாள் மற்றும் 30 மணிநேர வார வேலை நேரமாக குறைக்க வேண்டும்.

$  நிலையாணைகளை கண்டிப்பாக செயல்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்.

$ கொள்கை உருவாக்கத்தில் பதிவுசெய்யப்பட்ட தொழிற்சங்கங்களை ஈடுபடுத்த வேண்டும்.

$ குறைந்தபட்ச ஊதியம் 26000 ரூபாயாக இருக்க வேண்டும்.

$ தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான தொழில்முறை வரி(Professional Tax) விலக்கு அளிக்கப்பட வேண்டும்.

$ அரசு வேலைகளை அவுட்சோர்சிங் செய்யும் ஆணையை திரும்பப் பெறவேண்டும். 

$ அனைத்து இ-சேவை ஊழியர்களின் வேலை நிரந்தரப்படுத்த வேண்டும்.

$ சென்னை ஓஎம்ஆர் டோல் பிளாசாவை அகற்ற வேண்டும்.

$ உழைக்கும் மக்கள் பி.ஜி. வாடகை தரப்படுத்தப்பட வேண்டும்.

$ நான்காம் தொழில்துறை புரட்சி தொழில்நுட்பத்திற்கான அரசு நிறுவனத்தை நிறுவ வேண்டும்.

$ ITes ஊழியர்களுக்கான நல வாரியம் அமைக்க வேண்டும்.

$ கிராமப்புறங்களுக்கு பாரத்நெட் இணைப்பை வேகப்படுத்த வேண்டும்.

$ அனைத்து சிப்காட், எல்காட்- மையங்களில் பணிபுரியும் பெண்களுக்கு குழந்தைகள் பகல்நேர பராமரிப்பு மையத்தை நிறுவ வேண்டும்.

$ தொழிலாளர் துறையை கணினி மற்றும் டிஜிட்டல்மயமாக்குதல் வேண்டும்.

$ பணியிடத்தில் மனநல ஆலோசகர் அமர்ந்திட வேண்டும்.

வருகின்ற தேர்தலில் தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்கள் தங்கள் வேலை பாதுகாப்பையும், வேலை நேரத்தையும், வேலைச் சூழலையும் உறுதி செய்யாத அதிமுக-பாஜக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும். இவர்களுக்கு மாற்றாக தகவல் தொழில்நுட்பத் துறை தொழிலாளர் பிரச்சனையை நாடாளுமன்ற,சட்ட மன்றத்துக்கு உள்ளும்-வெளியும் தொடர்ந்து நமக்கான குரல் எழுப்பிக் கொண்டு உள்ள இடதுசாரிகள் அங்கம் வகிக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை இத்தேர்தலில் ஆதரிக்க வேண்டும். அதுவே நமக்கான நம்பிக்கையான பயணமாக இருக்கும். 

கட்டுரையாளர்: டி.பரணிதரன், மாநிலத் தலைவர், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கம் (யுனைட்) 

;