technology

img

ஆசியாவின் முதல் பறக்கும் கார்களை தயாரிக்கும் சென்னை வினாட்டா நிறுவனம் 

இந்தியா : இந்தியாவின் முதல் பறக்கும் காரை சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் வினாட்டா  நிறுவனம் தயாரித்துள்ளது. 

வானில் பறக்க மனித சமூகம் பல முயற்சிகளை எடுத்துள்ளது . அதன் பலனாக 1903 ஆம் ஆண்டு ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தனர் . இந்நிலையில் மனிதனின் வான் வழிப் பயணத்தின் புதிய உச்சமாகச் சாலை, ஆகாயம் என இரு மார்க்கங்களிலும் இயங்கும் பறக்கும் கார் வடிவமைப்புகள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ராணுவ ரீதியிலான செயல் வடிவங்களில் உள்ளன. மேலும் , 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு ட்ரோன் தொழில்நுட்பம் அபரிவிதமான வளர்ச்சி கண்டுள்ள நிலையில் பறக்கும் கார்களின் தயாரிப்புகள் புதிய பரிமாணத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன. 

அந்த வகையில் ஆசியாவின் முதல் 'ஹைபிரிட் பறக்கும் காரை' சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும் "வினாட்டா" என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி யோகேஷ் ராம நாதன் தலைமையில், இஸ்ரோ விஞ்ஞானி முத்து நாயகம் உடன் பல பொறியாளர்கள் இணைந்து புனே ஆய்வகத்தில் இந்த பறக்கும் காரை உருவாக்கியுள்ளனர். உயிரி எரிபொருள் மற்றும் மின்சார ஆற்றல் மூலம் இயங்கும் வகையில் இந்த கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் கூடுதல் சிறப்பாகும் .

சாலையில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக் கூடிய இக்கார்கள், 60 நிமிடங்கள் வானில் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இரண்டு நபர்கள் அமர்ந்து பயணிக்கும் வகையிலான இந்த பறக்கும் கார்கள் ட்ரோன், நேவிகேசன் தொழில்நுட்பங்களை உள்ளடக்கியுள்ளன. இந்த பறக்கும் கார்களைச் சுற்றி எட்டு புரொபெல்லர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த பறக்கும் காரின் மாதிரியை  விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராத்திய சிந்தியா பார்வையிட்டார் . அதன் பின்னர் , இது குறித்துப் பேசிய அவர் , முழு செயல் திட்டம் முடிந்த பிறகு மருத்துவ அவசர பறக்கும் ஊர்தியாகவும், சரக்கு வாகனமாகவும் பயன்படும் எனக் கூறி குழுவினரை பாராட்டியுள்ளார். 

தமிழ்நாடு அரசும் ட்ரோன் தொழில்நுட்பத்திற்கான திட்டத்தினை தீட்டி வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து இக்கார்களின் உற்பத்தியைச் சென்னையில் தொடங்குவதற்கான திட்டங்களை எடுத்துரைக்கவுள்ளதாக வினாட்டா கூறியுள்ளது. அதன்படி , பறக்கும் கார்கள் 2023 இல் பயன்பாட்டிற்கு வரும் என வினாட்டா சி.இ.ஓ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

;