tamilnadu

தொடரும் நீட் அவலம்: காட்பாடியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை...

காட்பாடி:
காட்பாடி அருகே நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் இருந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.காட்பாடி அடுத்த தலையாரம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தம்பதி திருநாவுக்கரசு,  ருக்மணி.  இவர்களது மகள் சௌந்தர்யா(17).வேலூர் தோட்டப்பாளையத்திலுள்ள அரசினர் பெண்கள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்ற அம்மாணவி பொதுத் தேர்வில் 600க்கு 510 மதிப்பெண் பெற்றுள்ளார்.

கடந்த செப்டம்பர் 12 அன்று காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதினார். தேர்வு எழுதி மூன்று நாட்கள் ஆன நிலையில் தேர்வில் மதிப்பெண் குறைவாகப் பெற்று விடுவோமோ என்ற அச்சத்தில் இருந்துள்ளார். இதனை பல முறை தன்னுடைய தாயிடம் கூறியுள்ளார்.இந்நிலையில், சௌந்தர்யாவின் தந்தை மற்றும் தாய் இருவரும் வழக்கம் போல் புதனன்று(செப்.15) வேலைக்கு சென்றுள்ளனர். இச்சூழலில் வீட்டில் தனியாக இருந்த மாணவி சௌந்தர்யா வீட்டின் உள்ள அறையில் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து வந்த வேலூர் லத்தேரி காவல் துறையினர் சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்து மாணவியின் உடலை மீட்டு உடற் கூறாய்வுக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.முன்னதாக கடந்த 4 நாள்களில் சேலத்தை சேர்ந்த தனுஷ், அரியலூரை சேர்ந்த கனிமொழி ஆகியோர் நீட் பயத்தால் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

;