tamilnadu

திருச்சி முக்கிய செய்திகள்

தமிழ்நாடு காது கேளாதோர், வாய் பேசாதோர்  சங்கத்தின் மகளிர் தின விழா

உலக மகளிர் தினத்தையொட்டி, தமிழ்நாடு காது கேளாதோர் - வாய் பேசாதோர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில், மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.  சங்கத்தின் மகளிர் அமைப்பு மாவட்டத் தலைவர் வி. ஆழ்வார் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்புச் செயலாளர் எஸ். பரமேஸ்வரி வரவேற்றுப் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு, தமிழ்நாடு காது கேளாதோர் வாய் பேசாதோர் மாநிலச் செயலாளர் மா.சொர்ணவேல், மாநில பொருளாளர் பி.பவானி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கரூர் மாவட்ட தலைவர் அ. கவின், மாவட்டச் செயலாளர் ப. அரவிந்த், மாவட்டப் பொருளாளர் கு.பார்த்திபன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  வாய் பேசாதோர் காது கேளாத பெண்கள் கலந்து கொண்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கவிஞர் ஜீவிக்கு  ‘வரலாற்று நாயகர்’ விருது 

புதுக்கோட்டை புதுகை வரலாறு’ நாளிதழ் சார்பாக, ஏழாவது ஆண்டு விழா நடைபெற்றது. அதனையொட்டி, பல்வேறு சாதனை செய்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. கவிஞர் ஜீ வியின் கவிதை மற்றும் இலக்கிய பணிகளை பாராட்டும் வகையில், வரலாற்று நாயகர் விருதினை மேனாள் ஒன்றிய மாநில அமைச்சர் எஸ். திருநாவுக்கரசு வழங்கினார்.  விழாவில் மேனாள் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் சுப்பையா, தங்கம், மூர்த்தி, புதுகை வரலாறு ஆசிரியர் சிவசக்திவேல், துரை திவ்யநாதன், பேராசிரியர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கவிஞர் ஜீவிக்கு, தமிழ்ச்செம்மல் விருது, மக்கள் கவிஞர் விருது, கவிச்சிகரம் விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடு தீப்பிடித்து சேதம்: அரசு நிவாரணம் வழங்கல்

அய்யம்பேட்டையை அடுத்த சூலமங்கலம் இரண்டாம்சேத்தி பாக்குத்தோப்பு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அப்துல்லா, கொலுசம்பீவி வசித்த குடிசை வீடு தீப்பற்றி முழுவதும் எரிந்து சேதமானது. இதையடுத்து அரசு நிவாரணமாக ரூ 8,000, அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்டவற்றை பாபநாசம் தாசில்தார் பழனிவேல் வழங்கினார்.  இதில் அய்யம்பேட்டை பேரூர் திமுக செயலர் வழக்கறிஞர் துளசிஅய்யா,  அஞ்சுமன் பள்ளித் தாளாளர் இப்ராஹிம், அய்யம்பேட்டை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அழகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.