tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : தியாகி லீலாவதி நினைவு நாள்.....

மதுரையில், எளிமையான குடும்பத்தில் பிறந்த லீலாவதி, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக்கொண்டுசமூகப் பணியில் தன்னைக் கரைத்துக்கொண்டார். இடதுசாரி கருத்தியலைத் தெளிவாக உள்வாங்கிக்கொண்டதால், ஏழை எளிய மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரும் முயற்சிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். 

அர்ப்பணிப்பும் நேர்மையும் கண்களாக இருந்த லீலாவதியின் வாழ்க்கை முடிவு, கொடூரமாக அமைந்தது. மதுரையின் வில்லாபுரம் மாமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் லீலாவதி. அந்தப் பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனை பற்றி, யாருக்கும் அஞ்சாமல் உரக்கக் குரல் கொடுத்தார். இதனால், ஆத்திரமடைந்த சமூக விரோதிகள், அவரை தீர்த்துக்கட்டத் திட்டமிட்டனர். 1997 ஏப்ரல் 23-ஆம் தேதி, காலை ஏழுமணி. வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக வில்லாபுரத்தில் லீலாவதி வந்துகொண்டிருந்தார். அப்போது, பொதுக்கழிப்பறையில் ஒளிந்திருந்தரவுடிகள் பாய்ந்து வந்தனர். அரிவாளால் லீலாவதியைக் கொடூரமாக வெட்டினர். தடுக்கமுயன்ற அவரின் கையில் கடுமையான வெட்டு விழுந்து விரல்கள் துண்டாகின. இறுதியில், மக்களுக்காகவே துடித்துக்கொண்டிருந்த லீலாவதியின் உயிர் துடித்து அடங்கியது.  மதுரை மக்கள் அலை அலையாகத் திரண்டுவந்தனர். அந்த மக்கள் அலைகூட்டத்தின் மத்தியில் லீலாவதியின் உடல் இறுதி ஊர்வலமாகச் சென்றது. 

அதன்பின், இரண்டு, மூன்று மாதங்கள் வரைகூட மக்கள் அந்த இடத்தில் நீரூற்றி, பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்தினர். அது, மக்களின் மனதில் லீலாவதி நீங்கா இடம்பெற்றதற்கான அடையாளம். அவரின் மறைவுக்குப் பிறகு, அந்தப் பகுதிக்கான குடிநீர், ரேசன் பிரச்சனைகள் தீர்ந்தன.சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இருந்ததில்லை. உள்ளாட்சி அமைப்பில் சிறிய பொறுப்பில் இருந்தவர். ஆனால்,தனது பதவியின் வீச்சை இந்தச் சமூகத்துக்குக் காட்டியவர். அரசியலில் ஈடுபட வரும்பெண்களுக்குச் சிறந்த முன்மாதிரி தோழர் லீலாவதி.

பெரணமல்லூர் சேகரன்

;