tamilnadu

img

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேறும.... மு.க.ஸ்டாலின் உத்தரவாதம்...

மதுரை:
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அழைத்துப் பேசி கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்த-ஆயத்த மாநாடு மதுரையில் புதனன்று நடைபெற்றது.

இந்த மாநாட்டை வாழ்த்தி காணொலி காட்சி மூலமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதவாது:-

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் மட்டுமல்ல, போராடும் அனைவரின் உரிமைகளையும் தமிழக அரசு பறித்துவிட்டது. பறிப்பதற்கு இனி எதுவுமில்லை என்ற நிலையை நோக்கி எடப்பாடி பழனிச்சாமி அரசு செல்கிறது. அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் கோரிக்கைகளை நானறிவேன். கலைஞர் தலைமையிலான திமுக அரசு, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. இப்போது நீங்கள் வைத்துள்ள கோரிக்கைகளும் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பின் பரிசீலித்து நிறைவேற்றப்படும். ஒரு மாநிலத்தின் அடிநாதமாக இருப்பவர்கள் அரசு ஊழியர்கள். அரசை வழி நடத்துபவர்கள். இளைய சந்ததிகளை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். ஆனால் உங்களது கோரிக்கைகளை செவிமடுக்க அதிமுக அரசு தயாரில்லை. தான் ஒருவர் தான் அரசாங்கம் என்ற சிந்தனை எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ளது. இது ஒரு மோசமான சிந்தனை. இந்த அரசு லஞ்சம்-முறைகேட்டில் ஊறித் திளைக்கிறது. ஆசிரியர்களுக்கு எதற்கு இவ்வளவு சம்பளம் என கேலி பேசியவர் தமிழக முதல்வர். கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக போராட்டக்களம் காணுகிறீர்கள். திமுக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அழைத்துப் பேசி கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக அரசு இழிவுபடுத்துகிறது. அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கிறது. புதிதாக எதையும் அவர்கள் கேட்கவில்லை. பத்தாண்டு காலத்தில் பறிக்கப்பட்ட, இழந்த சலுகைகளை கேட்கிறார்கள். எடப்பாடி தலைமையிலான அமைச்சர்களால் ஒரு நாள், ஏன் ஒரு மணி நேரம் தமிழகத்தை வழிநடத்த முடியுமா? இந்த அரசை வழிநடத்துபவர்கள், தோளில் தூக்கிச் சுமப்பவர்கள் அரசு ஊழியர்கள். தமிழகத்தில் எதிர்கால சந்ததிகளை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீதான வழக்கை, குற்றக் குறிப்பாணைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். நான்கரை லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப மறுத்து, பணியிடங்களை அவுட் சோர்சிங் மூலமே நிரப்புவோம் என்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இது தமிழக அரசா? அல்லது அவுட்சோர்சிங் அரசா? அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் பிரச்சனைகள் மட்டுமல்ல தமிழக மக்களின் கோரிக்கைகளையும் கேட்க தமிழக அரசு மறுக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 350 ஆரம்பப்பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் இந்த நிலை என்றால், தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் இருக்கும்? 

மோடி-எடப்பாடி பிடிவாதம்
தில்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை நிகழ்ந்ததாக மத்திய அரசு கூறுகிறது. வன்முறையை தூண்டியது ஆர்எஸ்எஸ் அமைப்பினர் என விவசாயிகள் ஆதாரப்பூர்வமாக கூறுகின்றனர். ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையிலடைக்க மத்திய அரசு தயாரா?தில்லியில் 62 நாட்களாக போராடி வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு பிரதமர் மோடி தீர்வு காணாமல் பிடிவாதமாக உள்ளார். அவரைப் பின்பற்றி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அரசு ஊழியர்-ஆசிரியர் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் பிடிவாதமாக உள்ளார். 

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பாக அவர்களை அழைத்துப் பேச மறுத்த முதல்வர்களை வீட்டிற்கு அனுப்பிய பெருமை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்திற்கும் ஆசிரியர்களுக்கும் உண்டு. ஆட்சி முடிந்து போகிற காலத்திலாவது தமிழக முதல்வர் கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும். இந்தப் போராட்டம் ஆட்சி மாற்றத்திற்கான போராட்டமாகவும் அமையும். தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டக் களம் காண நாள் குறித்துள்ளார்கள். விரைவில் தொழிலாளி வர்க்கமும் போராட்டக் களம் காண தயாராகிவருகிறது.இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

தொல்.திருமாவளவன்

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., பேசுகையில்,

“அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை நிற்கும். உங்களில் நானும் ஒருவன். உங்களது கோரிக்கைகளை அறிந்தவன். உங்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான் புத்திசாலித்தனமானது. ஏற்க மறுத்தால் போராட்டக்களத்தின் மூலம் கோரிக்கைகளை வென்றெடுக்க நீங்கள் எடுத்துள்ள முடிவு வெற்றிபெறும் என்றார்.

;