tamilnadu

img

இன்று நடப்பது பாதி அதிமுக, மீதி பாஜக ஆட்சி..... நாகர்கோவிலில் மு.க.ஸ்டாலின் பேச்சு...

நாகர்கோவில்:
                                வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றிபெற்று திமுக ஆட்சி அமைய உள்ளது. இன்று நடப்பது பாதி அதிமுக,மீதி பாஜக ஆட்சி என்று நாகர்கோவிலில் நடந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின்நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கூறினார்.  

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரச்சார பயணத்தை நடத்தி வருகிறார். குமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதி மக்களின் குறைகளை கேட்க இன்று அவர் நாகர்கோவில் வந்தார். ஸ்காட் கிறித்தவ கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம், செங்கோட்டை, பீர்மேடு, தேவிகுளம் ஆகியவற்றில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும் என பல தியாகிகள் உயிரை பணயம் வைத்து போராடினார்கள். அந்த தியாகிகளுக்கும், அவர்களுடைய குடும்பங்களுக்கும் சலுகை வழங்கியது கருணாநிதி ஆட்சி. இந்திய விடுதலைப் போராட்ட தியாகிகள், மொழிப்போர் தியாகிகள், எல்லைப்போர் தியாகிகள் அனைவரையும் போற்றியது கருணாநிதி அரசு.

ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக வில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி திமுக ஆட்சி அமைக்கும் என்றார்கள். அதிமுகவில் இருந்தும் சிலர் தூது விட்டார்கள். அவர்களைப்பற்றிச் சொல்ல விரும்பவில்லை. அப்படி ஆட்சி அமைத்தால் அது திமுக அரசாக இருக்காது. கோடிக்கணக்கான மக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது என் விருப்பம். அது விரைவில் அமைய உள்ளது. 234 தொகுதிகளிலும் வெற்றிபெற்று திமுக ஆட்சி அமைய உள்ளது. இன்று நடப்பது பாதிஅதிமுக, மீதி பாஜக ஆட்சி. எல்லாவற்றையும் அரைகுறையாக செய்துகொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வு ரத்து என தீர்மானம் போடுவார்கள், ஆனால் நீட் தேர்வு இருக்கும். ஏழுபேர் விடுதலைக்கு ஆதரவாக தீர்மானம் போடுவார்கள், ஆனால் அவர்கள் ஜெயிலில் இருப்பார்கள். இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் போடுவார்கள், ஆனால் இந்தி திணிப்பு நடந்துகொண்டே இருக்கும். மாநில உரிமை, மாநில நிதி கேட்டு மனு கொடுப்பார்கள் எதுவும் கிடைக்காது. எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டுவார்கள் ஆனால் ஒரு செங்கல்கூட வைக்கமாட்டார்கள். பழனிச்சாமி தன்னை முதல்வர் என்பார் ஆனால்அமைச்சர்கள் யாரும் மதிக்கமாட்டார்கள்.

பழனிச்சாமி தனது கட்டுப்பாட்டுக்குள் அதிமுக இருப்பதாக காட்டிக்கொள்வார். ஆனால் பழனிச்சாமியை பன்னீர் செல்வம் கூட முன்மொழிய மாட்டார். அதிமுக அரசு நாட்டை கெடுத்து வருகிறது. இந்த ஆட்சிக்கு முடிவுகட்ட திமுகவிற்கு முழுமையான வெற்றியை தாருங்கள். குமரி மாவட்டம் கடந்த முறை தேர்தலில் முழுமையான வெற்றியை கொடுத்தீர்கள். இந்த முறையும் அதுபோன்ற வெற்றியை கொடுங்கள். இன்று உங்கள் எழுச்சியை பார்க்கும்போது முழுமையான வெற்றியை தருவீர்கள் என நம்புகிறேன். நீங்கள் அளித்தது உங்கள் கோரிக்கை அல்ல என்னுடைய கோரிக்கை. உங்கள் இதயங்களை நான் கொண்டு செல்கிறேன்.

;