tamilnadu

img

அனைத்துலக சிறந்த படைப்பாக ‘வேள்பாரி’ நாவல் தேர்வு....

 மதுரை/கோலாலம்பூர்:
மலேசியாவின் தேசிய நில நிதிகூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் அனைத்துலக சிறந்த படைப்புக்கான நூலாக சு.வெங்கடேசன் எழுதிய “வீரயுக நாயகன் வேள்பாரி” தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தரப்படும் இவ்விருது பத்தாயிரம் அமெரிக்க டாலர்களை பரிசுத்தொகையாக கொண்டது. (இந்திய மதிப்பில் சுமார் 7 லட்சம் ரூபாய்) இவ்விருது பற்றிய அறிவிப்பினை சங்கத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ பா. சகாதேவன் வெளியிட்டுள்ளார்.சு.வெங்கடேசன் எழுதிய முதல் நாவலானகாவல்கோட்டம் 2011 ஆம் ஆண்டு சாகித்யஅகாடமி விருதினைப் பெற்றது. மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், மதுரை மக்களவை உறுப்பினருமான எழுத்தாளர் சு.வெங்கடேசனின் “வீரயுக நாயகன் வேள்பாரி” நாவலுக்கு மலேசியாவில் பெரும் வாசகர் வட்டம் இருப்பதும், மலேசியபல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிப் புலனத்தின் பாடநூலாக வேள்பாரி நாவல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.மலேசிய நாட்டின் சிறந்த படைப்பாக சை. பீர்முகம்மது எழுதிய “அகினி வளையங்கள்” என்ற நாவல் தேர்வு பெற்றுள்ளது.பெருந்தொற்று காலமாக இது இருப்பதால் விருது விழா நடத்த முடியாத சூழல் உள்ளது.

எனவே விருது தொகை ஆசிரியருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மலேசிய வாசகர் மன்றத் தலைவர் இராஜேந்திரன் அண்ணாமலை கூறுகையில், ‘மலேசியாவில் இயங்கும் தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தின் டான்ஶ்ரீ சோமா  மொழி இலக்கிய வாரியம் நடத்திய ஐந்தாம் ஆண்டு அனைத்துலகப் புத்தகப் போட்டிக்கு, “தமிழகம், ஶ்ரீலங்கா, சிங்கப்பூர் உட்பட உலகம் முழுதும் இருந்து சுமார் 49 இலக்கியப் படைப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. 2018/2019 ம் ஆண்டுக்கான பன்னாட்டுப்புத்தகப் பிரிவில்  தமிழக எழுத்தாளர் சு. வெங்கடேசன் எழுதிய “வீரயுக நாயகன் வேள்பாரி” எனும் நாவல் சிறந்த தமிழ் நாவலாக தெரிவு செய்யப்பட்டுள்ளது என்று புத்தகப்போட்டியின் ஏற்பாட்டுக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் எழுத்தாளர்கள் உலக அளவில் உற்சாகம் பெறும் வண்ணம் மலேசியாவில் இயங்கும்டான்ஶ்ரீ சோமா இலக்கிய வாரியம் பன்னாட்டுப் புத்தகப் பரிசை நடத்தி, பத்தாயிரம் டாலர் பணப்பரிசை ஈராண்டுகளுக்கு ஒரு முறை வழங்கி வருகிறது.ஆனந்த விகடன் வார இதழில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் நான்காண்டுகளுக்கு முன்பு எழுதி வந்த “வீரயுக நாயகன் வேள் பாரி” எனும் நாவல்  உலகம் முழுதும் உள்ள தமிழ்வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி எனும்ஒன்றே முக்கால் குறளடியைக் கொண்டும் கபிலரின் சங்கப் பாடல்களில் காணும் வரலாற்று நிகழ்வுகளை மையமாகக் கொண்டும் எழுதப்பட்ட இந்நாவல் உலகத்  தமிழ் வாசகர் பரப்பில்  தொடர்ந்து சூப்பர் ஹிட்டாக வாசிக்கப்பட்டு வருகிறது.
வேள்பாரி என்பது வெறும் புராணக்கதை அல்ல; வெறும் குறியீடும் அல்ல .2000 க்கும்அதிகமான குறிஞ்சிப் பாடல்களில் காணும் மக்களின் கதைகளையே வரலாற்று உண்மைகளையே வேள்பாரியில் புனைவுக் கதைகளின் பின்னணியில் அடுத்தத் தலைமுறைகளுக்கு வெற்றிகரமாகக் கடத்தியிருக்கிறார் சு.வெங்கடேசன்.தமிழின் சிறந்த படைப்புகளுக்கு நல்லவெளிச்சத்தை ஏற்படுத்தித் தரும் கூட்டுறவு சங்கத்தின் இலக்கிய முயற்சிகளை வெகுவாகப் பாராட்டுகிறோம். சிறந்த படைப்புகளை மட்டுமே கூட்டுறவு சங்கம் அங்கீகரிக்கும் எனும்நம்பிக்கையை இப்போட்டி முடிவுகள் மேலும் வலுப்படுத்தி இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.மலேசியப் படைப்புகள் குறித்து விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் சிறந்த நாவல் எந்த நாட்டில் இருந்து வந்தாலும் அதை மலேசிய மண் அங்கீகரிக்கும் என்பதுநிலைநாட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், வேள்பாரி நாவல் அனைத்துலக சிறந்த நாவலாக அங்கீகரிக்கப்பட்டு இருப்பதால் வேள்பாரியின் வானம் மலேசியாவில் மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

“மலேசிய இளைஞர்கள் மத்தியில் வேள்பாரி நாவலுக்கு நல்ல வரவேற்புண்டு. மலேசிய மண்ணில் மிகப் பெரிய வாசகர் பரப்பைவேள்பாரி நாவல் கொண்டுள்ளது. இப்பெருந்தொற்றுக் காலக் கட்டத்தில் அதிகமான வாசகர்களால் தினமும் தேடி படிக்கப்பட்ட நாவலாக வேள்பாரி இருக்கிறது இந்நூல்  பலரது நம்பிக்கைகளை மட்டும் அல்ல பல தொன்மங்களையும் கட்டுடைத்து விடுகிறது. மனிதன் மாண்பு கெடாமல் உலகில் வாழ வேண்டும் எனில் சில இயற்கை விதிகளை மீறிடக் கூடாது.நாம் வாழும் இந்த வாழ்வு முறை மிகவும் போலியானது. நிஜத்தில் நாம் வாழ்வது எப்போது? எனக் கேட்க வைக்கிறது இந்நாவல். நிஜ வாழ்க்கையின் கதவுகளைத் திறப்பதற்கான சாவியை வேள்பாரி நம் கைகளில் கொடுத்து விடுகிறது. அதனால் தான் நாவலை வாசித்தப் பின்னர் தினமும் பாரியாகவே வாழ்ந்து விடத்துடிக்கிறோம்” என்றும்இராஜேந்திரன் அண்ணாமலை கூறினார்.

மலாயா பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழிப்புலனத்தின் மேற்கோள் பாட நூலாகவும் வேள்பாரி   நாவல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது எனசெர்டாங் இலக்கிய வட்டத்தின் தலைவருமான இராஜேந்திரன் அண்ணாமலை தெரிவித்தார்.மலேசிய மண்ணில் வேள்பாரி நாவலுக்கு இலக்கியத் தரமிக்க  ஒரு நாவல் கலந்துரையாடலை செர்டாங் இலக்கிய வட்டம்  கோலாலம்பூரில் நடத்திச் சிறப்பித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

;