tamilnadu

img

கூட்டுறவு சங்கங்களை ஒன்றிய அரசு பறிப்பது கூட்டாட்சிக்கு எதிரானது -சு.வெங்கடேசன் எம்.பி பேட்டி

தமிழக விவசாயிகளின் இரத்தநாளங்களாக விளங்கும் கூட்டுறவு சங்கங்களை ஒன்றிய அரசு பறிப்பது விவசாயிகளின் இரத்த நாளங்களை வெட்டுவதற்கு சமம் என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறினார்.

மதுரையில் வியாழனன்று அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகளின் கோரிக்கை மாநாடு நடைபெற்றது இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சு. வெங்கடேசன் 2021-2022 ஆம் ஆண்டிற்கான அரைவையை உடனே துவங்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகரை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் என். பழனிச்சாமி மற்றும் விவசாயிகள் ஆகியோருடன் சென்று சந்தித்தேன் அப்போது அலங்காநல்லூர் ஆலையை இந்த ஆண்டு அரவையை துவக்க வேண்டுமென வலியுறுத்தினோம் அவரும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளார். அரைவையைத் துவக்கும் வரை விவசாயிகளுக்கு துணையாக மக்களவை உறுப்பினர்  என்ற முறையில் துணை நிற்பேன் என்றார். மேலும் அவர் பேசுகையில்,

அலங்காநல்லூர் ஆலையில் 1,800 ஏக்கர் கரும்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரைவை தொடங்கும் போது சுமார் 500 ஏக்கர் கரும்பை தருவதாக விவசாயிகள் உறுதியளித்துள்ளனர். மேலும்   தரணி சர்க்கரை ஆலை பிரச்சனை தேசிய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் உள்ளதால், இந்தாண்டு அங்கு அரைவை நடைபெறாது. அந்த ஆலையின் கரும்புகளையும் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலைக்கு கொண்டுவரவேண்டும் என்றார்.  

ரத்தநாளங்களை வெட்டாதீர்  

தமிழகத்தில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களை ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல உள்ளது குறித்து செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்,  "இது மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளில் ஒன்று கூட்டுறவு சங்கங்களை ஒன்றிய அரசு பறிப்பது மட்டுமல்ல. ஆயிரக்கணக்கான விவசாயிகளின் ரத்த நாளங்களை வெட்டுவதற்கு ஒப்பானது. இதை தமிழக விவசாயிகள் அனுமதிக்க மாட்டார்கள் என்றார்.

தமிழகத்தில் போலி நகைகள் மூலம் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்றுள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதே எனக்கேட்டதற்கு, "இந்த முறைகேடு குறித்து தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்தி தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

பூண்டு விவசாயிகளும்-மோடியும்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைச் செயலாளர விஜூகிருஷ்ணன், "மோடி அரசு தேர்தல் காலத்தில் கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியாது அது தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் தான்.  நிறைவேற்றுவதற்காக அல்ல எனக் கூறிவிட்டார்.  

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தில்லியில் பதினோரு மாத காலமாக விவசாயிகள் போராடி வருகிறார்கள்.  650 விவசாயிகள் உயிரிழந்த நிலையில் கோரிக்கைகளை ஏற்க மோடி அரசு மறுத்து வருகிறது விவசாயிகள் விரோதச் சட்டங்களை திரும்பப்பெறும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "மோடி அரசு கார்ப்பரேட்டுகளின் அரசு என்பதற்கு மத்தியப்பிரதேதச மாநில பூண்டு விவசாயிகளே உதாரணம் 5,200 கிலோ பூண்டு உற்பத்தி செய்வதற்கு கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் விவசாயிகள் செலவிட்டுள்ளனர். ஆனால் சந்தையில் ஒரு கிலோ பூண்டு ஒரு ரூபாய்க்கு பெற்றனர். 5,200 கிலோவுக்கு ரூ.5,200 மட்டுமே கிடைத்துள்ளது அதே நேரத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு கிலோ பூண்டை ரூ.147- க்கு விற்றது இது எவ்வளவு கொடுமையான விஷயம் என்பதை விவசாயிகள் உணர வேண்டும் மத்தியப் பிரதேச விவசாயிகளைப் போல் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான தாக்குதல் விவசாயிகளின் மீது தொடுக்கப்பட்டு வருகிறது விவசாயிகளுக்கு விரோதமாகச் செயல்படும் ஒன்றிய அரசிற்கு எதிரான போராட்டத்தை நாம் தொடர்ந்து நடத்த வேண்டும்.

அதே நேரத்தில் தமிழக அரசு அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை திறந்து ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் இரண்டு ஆண்டு காலமாக ஆளை செயல்படாத நிலையில் ஆலையை புனரமைக்க தமிழக அரசு ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்றார்.

சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் பேசுகையில், "மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  கந்துவட்டிக்கு கடன் வாங்கிய விவசாயிகள் எதிர்காலத்தை நினைத்து ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். இருப்பதையும் இழந்து  கொண்டிருக்கிறார்கள். 130 ஏக்கர் விவசாயம் செய்யும் ஒருவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.25 லட்சம் நஷ்டம் அடைந்து உள்ளார். கடந்த ஆண்டு ரூ.18 லட்சம் நஷ்டம் அடைந்து உள்ளார். இந்த ஆண்டு நஷ்டமடையவில்லை.  அதற்குக் காரணம் அவர் விவசாயமே செய்யாததுதான் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "2010-ஆம் ஆண்டு தமிழக அரசு தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உப மின் நிலையம் அமைக்க ரூபாய் 110 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள்  நிறைவடையாமல் உள்ளது. இந்த உப மின் நிலையத்தை திறக்க வேண்டும் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை  உடனடியாக இயக்க வேண்டும்.  தமிழக முதல்வர் மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் நடைபெறும் கிராமசபைக்கூட்டத்திற்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் அலங்காநல்லூர் ஆலை இந்தாண்டு அரவையைத் தொடங்கும் என்ற நல்ல செய்தியைச் சொல்வார் என நம்புகிறோம் என்றார்.

 கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கரு.கதிரேசன் தேவசேரி ராமராஜ். ஸ்டாலின்குமார், அடக்கிவீரணன், கர்நாடக மாநில கரும்பு விவசாயிகள் சங்கச் செயலாளர் பரத் ராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பி.எஸ்.ராஜாமணி நன்றி கூறினார்.

;