tamilnadu

img

அண்ணலைப் போற்றுவோம்!

குஜராத்தியர்கள் மற்றும் மேற்கத்தியர்களின் ஆடைமுறையை தனது பழக்கமாக கொண்டிருந்த அண்ணல் காந்தியார் மதுரை வந்து உழவர்களின் அரை ஆடைக்கு மாறிய நிகழ்வின் நூற்றாண்டு இன்று. விடுதலைப் போராட்ட நடவடிக்கைகளில் விவசாய அரசியலை உள்ளிழுத்துக் கொண்ட மிகநுட்பமான செயல் இது. அதுவரை படித்த, அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்களின் செயல்பாடாக இருந்த பிரிட்டிஷ் எதிர்ப்பு நடவடிக்கைகளில் பெருந்திரள் மக்கள் சமூகத்தை ஈடுபட வைப்பதன் வாசலாக அமைந்த நிகழ்வெனவும் இதனை மதிப்பிடலாம். இந்திய அரசியல் செயல்பாட்டின் மையக்குறியீடாக உழவும், உழவனும் இடம்பெற செய்த இந்நிகழ்வின் நூற்றாண்டை செப்டம்பர் 22 புதனன்று கொண்டாடியது மதுரை.  அறம்சார் அரசியல், மதவெறிக்கு எதிரான மக்கள் ஒற்றுமை அரசியல், சுயசார்பு அரசியல் என காந்தியார் முன்னெடுத்த அரசியலை நெஞ்சில் ஏந்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் - பாலர் சங்கத்தின் சார்பில் காந்தியாக மாறிய இளைய தலைமுறை யினர், மதுரை மேலமாசி வீதியில் உள்ள அண்ணல் அரை ஆடை அணிந்த  இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சிபிஎம் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். (செய்தி : 4)

;