tamilnadu

img

தமிழறிஞர் இளங்குமரனார் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம்...

மதுரை:
மூத்த தமிழறிஞரான முதுமுனை வர் இரா.இளங்குமரனார் வயது முதுமை காரணமாக ஞாயிறன்று காலமானார். அவருக்கு வயது (94)

மறைந்த தமிழறிஞர் இரா.இளங்குமரனாருக்கு இரண்டு மகன்களும், இரு மகள்களும் உள்ளனர். இவரது பேத்தி முத்தரசி ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றிவருகிறார்.முதுமுனைவர் இரா. இளங்குமரனார் 30.1.1927-இல் திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் கிராமத்தில் பிறந்தவர். தந்தை படிக்கராமு, தாயார் வாழவந்த அம்மை. இளம் வயதிலேயே சொந்தமாகப் பாடல் இயற்றும் அளவுக்கு தமிழ் ஆர்வமும், புலமைத்திறனும் பெற்ற இவருக்கு 19-ஆவது வயதில் (4.8.1946) சங்கரன்கோவில் அருகில் உள்ள கரிவலம் வந்தநல்லூர் பள்ளியில் தமிழாசிரியர் பணி கிடைத்தது. பிறகு முறைப்படி புலவர் படிப்புக்கான தேர்வு எழுதி, 1951-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

முழுமையாக கிடைக்கப்பெறா மல், காலத்தால் செல்லரித்துப்போன குண்டலகேசி காப்பியத்தை தன்னுடைய கற்பனைத் திறனாலும், கவிதை இயற்றும் ஆர்வத்தாலும் முழுமை செய்தவர். அந்த நூலை 1958 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார்.1963 ஆம் ஆண்டு இவர் எழுதிய திருக்குறள் கட்டுரைத் தொகுப்பு நூலை, அன்றைய பிரதமர் நேரு வெளியிட்டார். தேவநேயப் பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், தொல்காப்பியர் ஆகியோரின் முழு படைப்புகளையும் தொகுக்கும் பணியையும் அவர் செய்தார். 

காரைக்குடி அருகே உள்ள திருக்கோவிலூர் மடம் சார்பில், சங்க இலக்கிய வரிசை நூல்களைத் தொகுக்கும் பணி நடைபெற்றபோது அதில் புறநானூற்றை எளிய தமிழில் எழுதியவர் இவர். இந்தத் தொகுப்பு நூலை 2003 ஆம் ஆண்டு அன்றையகுடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வெளியிட்டார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிய தமிழண்ணல்,பள்ளி ஆசிரியராக இருந்த இளங்குமரனாரை பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பிக்கும் பணிக்கும் பயன்படுத்திக் கொண்டார்.

தமிழ் முறைத் திருமணங்கள்
தமிழர்கள் நீண்டகாலமாகக் கடைபிடித்து வந்ததும், பழந்தமிழ் இலக்கியங்களில் சொல்லப்பட்ட முறையில் திருமணங்களை நடத்தி வைப்பதில் ஆர்வம் காட்டினார். 1951-ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் பணியை,தனது 92 வயது வரை தொடர்ந்தார். மொத்தம் 4,865 தமிழ் முறைத் திருமணங்களை நடத்தி வைத்துள்ளார். திருச்சிராப்பள்ளியில் திருவள்ளுவர் தவச்சாலை என்ற பெயரில் தமிழ்ப்பணி ஆற்றிவந்த இவர், அங்கே 45,000 நூல்கள் கொண்ட நூலகத்தையும் நடத்தினார். அதில் 40 ஆயிரம் நூல்களை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்துக்கு நன்கொடையாக வழங்கினார்.வயது முதிர்வு காரணமாக மதுரை திருநகருக்கு திரும்பிய அவர்  தமிழ்ப் பணியைத் நிறுத்தாமல் தொடர்ந்தார். மதுரை வடக்குமாசி வீதியில் உள்ள மணியம்மை பள்ளியில் மாதந்தோ றும் நடைபெறும் கருத்தரங்குகளில் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தின் மிக மூத்த ஆட்சி மன்றக் குழு உறுப்பினரும் இவர். மதுரை தமிழ்ச் சங்கம் குறித்த வரலாற்று நூலையும் இவர் எழுதியிருக்கிறார். மொத்தம் இவர் எழுதிய நூல்கள் 550. திரு.வி.க. போல இறுதிக்காலத்தில் கண்பார்வை குறைபாடு ஏற்பட்ட நிலையிலும், தன்னுடைய எழுத்துப் பணி பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். கண்களை மூடியே எழுதும் திறமையை வளர்த்துக்கொண்டார்.

1978 ஆம் ஆண்டில்  நல்லாசிரியர் விருது பெற்ற இவர், அதன் பிறகு பல விருதுகளை பெற்றிருக்கிறார். 1994 ஆம் ஆண்டு தமிழக அரசு திருவிக விருது கொடுத்து கௌரவித்தது.வடஅமெரிக்க தமிழ்ச்சங்க கூட்டமைப்பு வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது, கனடா இலக்கியத் தோட்ட விருது போன்றவை அவர் பெற்ற விருதுகளில் குறிப்பிடத்தக்க வை. பெற்ற விருதுகளுக்கான பரிசுத் தொகையை தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்கே செலவிட்டவர் இரா.இளங்குமரனார்.மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, மு.பூமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், திருப்பூர்மாவட்டச் செயலாளர செ.முத்துக் கண்ணன், வாலிபர் சங்க மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் செல்வா மற்றும் தமிழ் ஆர்வலர்கள் இளங்குமரனார் உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் உலக ளாவிய தமிழறிஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறுதி நிகழ்வு மதுரை திருநகர் இராமன் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் திங்களன்று  மாலை 4 மணிக்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது.

 

;