tamilnadu

img

காவல்துறை சித்ரவதையால் துப்புரவுப் பணியாளர் தற்கொலை.... மதுரையில் 3வது நாளாக துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம்.....

மதுரை:
விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட திருப்பரங்குன்றத் தைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளி கண்ணனை குற்றப்பிரிவு உதவி ஆணையர் சக்கரவர்த்தி, காவல் ஆய்வாளர் தென்னரசு உள்ளிட்ட காவல்துறையினர் கடுமையாகத் தாக்கி சித்ரவதை செய்துள்ளனர். கண்ணன் மகன் கருப்பசாமி(19)-யையும் கண்ணைக் கட்டி கால்களை விரிக்கச் செய்து இரண்டுகால்களையும் மிதித்து கொடுமைப் படுத்தியுள்ளனர். இந்த நிலையில் கடந்த வியாழன் இரவு வீட்டிற்குச் சென்ற தூய்மைக் காவலர் கண்ணன்வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த நிலையில் கண்ணன் மரணத்திற்குக் காரணமான காவல்துறை உதவி ஆணையர் சக்கரவர்த்தி, காவல் ஆய்வாளர் தென்னரசுஉள்ளிட்ட காவலர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்; தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றவேண்டும்;  நிவாரணமாக ரூ.50 லட்சம் வழங்கவேண்டும்; கண்ணன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டுமென வலியுறுத்தி, கண்ணன் உடலை வாங்க மறுத்து அவரது மனைவி, உறவினர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.திங்களன்று 500-க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்தும், பல தொழிலாளர்கள் காலைப் பணியை முடித்துவிட்டும் மதுரை அரசு மருத்துவமனை அருகே காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு மாநகராட்சி தொழிலாளர் சங்க (சிஐடியு)பொதுச் செயலாளர் ம.பாலசுப்பிரமணியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் கதிரவன்,தொமுச தலைவர் மேலூர் அல்போன்ஸ் ஆகியோர் தலைமையேற்றனர்.

போராட்டத்திற்கு தலைமையேற்றுள்ள தலைவர்களுடன் காவல்துறை உதவி ஆணையர் சிவபிரசாத் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கண்ணனின் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றவேண்டும்; காவல்துறையினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டு மென பாலசுப்பிரமணியன் வலி யுறுத்தினார்.அதற்கு பதிலளித்த காவல்துறை உதவி ஆணையர் சிவபிரசாத், உயிரிழந்த கண்ணன் மனைவிக்கு அரசு வேலை வழங்குவதற்கு மதுரைஆட்சியரிடம் பேசுவதாக மட்டும்உறுதியளித்தார். சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென தொழிலாளர்கள் வலியுறுத்தினர். அதற்கு அவர், இது குறித்து மாநகர் காவல்ஆணையர், காவல்துறைத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும்என்றார்.  ஆனால், வழக்குப் பதிவு செய்தால் மட்டுமே உடலைப்பெற்றுக் கொள்வோம் என பாலசுப்பிர மணியன் உறுதியாகத் தெரிவித்தார்.விடுதலைச்சிறுத்தைகள் சார்பில்பேசிய நிர்வாகி ஒருவர், சாத்தான்குளம் சம்பவத்திற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தனது தந்தையும், தானும் எவ்விதம் சித்ர வதைப்படுத்தப்பட்டனர் என்பதை கண்ணனின் மகன் கருப்பசாமி தெளிவாகக் கூறியுள்ளார். எனவே வன்கொடுமை, கொலை வழக்குப் பதிவுசெய்ய வேண்டுமென உதவி ஆணையர் சிவபிரசாத்தை வலியுறுத்தினர்.இதற்கிடையில் துப்புரவுத் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மா.கணேசன்உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

                                    ****************  

மற்றொரு சித்ரவதை சம்பவம்  : வாலிபர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் தலித் சமூகத்தைச் சேர்ந்த திருப்பதி என்ற வாலிபரை அழைத்துச் சென்று சாதிய வன்மத்துடன் தாக்குதல் நடத்தியுள்ளனர் தாக்குதல் நடத்திய சார்பு ஆய்வாளர்  செல்வக்குமார் மற்றும் நான்கு காவலர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும். அவர்களை  கைது செய்ய வேண்டும். திருப்பதிக்கு உரிய சிகிச்சை, இழப்பீடு வழங்கவேண்டுமென வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர்சங்கத்தினர் ஜெய்ஹிந்த்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சோலையழகுபுரம் பகுதிகுழுச் செயலாளர் குரோனி செந்தில், மாவட்டத் தலைவர் பி. கோபிநாத், பொருளாளர் அ.பாவெல் சிந்தன், சரண் சிபிஐ (எம்எல்) மாவட்டச் செயலாளர் மதிவாணன், மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி.செல்வா, ஆர்ஓய்எப்ஐ மாவட்டச் செயலாளர் பகத்சிங்,   சந்துரு  உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

;