tamilnadu

img

சட்டவிதிகளை மீறி, நீதிமன்றத்தில் தந்த வாக்குறுதியை மீறி மீண்டும் ஹிந்தியில் கடிதம் எழுதிய அமைச்சருக்கே திருப்பி அனுப்புவதாக சு. வெங்கடேன் எம்.பி அறிக்கை 

மத்திய கலாச்சார அமைச்சகம் சு. வெங்கடேசன் எம்.பிக்கு இந்தியில் கடிதம் எழுதியிருப்பதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட மீறல்களை செய்தால் களைத்துப் போய் எதிர்ப்பைக் கைவிட்டு விடுவோமென்று நினைக்காதீர்கள் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் (சி.பி.எம்) கூறியுள்ளார்.

மதுரை நாடாளுமன்ற எம்.பி சு. வெங்கடேன் வெளியிட்டுள்ள அறிக்கையில் 

"நான் 19 - 3/ 2020 எண்ணிட்ட கடிதம் ஒன்றை உங்கள் அமைச்சகத்தில் இருந்து வரப்பெற்றுள்ளேன். அது இந்தியில் உள்ளது 

நான் "நல் வாய்ப்பு" பெற்றவன். அக் கடித எண்ணை மட்டுமாவது தெரிந்து கொள்ள முடிந்தது. அக் கடிதத்தின் உள்ளடக்கம் என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அக் கடிதத்தோடு இணைக்கப்பட்டுள்ள ஒரு படிவம் ஆங்கிலத்தில் உள்ளது. அதில் இருந்து அக் கடிதம் "காந்தி சமாதான விருதுக்கு" பரிந்துரைகளை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து கேட்கிற கடிதம் என்று அனுமானிக்க முடிகிறது.

தமிழ்நாட்டைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தொடர்புகள் இந்தியில் அமையக் கூடாது, அவ்வாறு அமைவது அலுவல் மொழிச் சட்டத்திற்கும், அரசு பல் வேறு தேதிகளில் வெளியிட்டுள்ள ஆணைகளுக்கும் புறம்பானது என்பதை மீண்டும் மீண்டும் பதிவு செய்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளேன். நான் இப் பிரச்சினையில் உயர் நீதி மன்றத்தின் மதுரைக் கிளையைக் கூட அணுகினேன். அவ் வழக்கில் மத்திய அரசு வருத்தத்தை தெரிவித்து, இனி தகவல் தொடர்புகள் ஆங்கிலத்தில் அமையும் என்ற உறுதி மொழியையும் அளித்தது. 

இதுவா கலாச்சாரம்

கடந்த காலங்களில் நான் இந்தி கடிதங்களை மற்ற அமைச்சகங்களில் இருந்து வரப் பெற்றேன். இது கலாச்சார அமைச்சகத்தின் முறை போல. கலாச்சார அமைச்சகத்தின் அதிகாரிகளாவது இம் மாபெரும் தேசத்தின் பன்மைத்துவ கலாச்சார, பன்மொழி மரபு வழியினை உள் வாங்கியவர்களாக இருந்திருக்க வேண்டும். 

எனக்கு ஒரு ஐயம் எழுகிறது. மத்திய அரசின் இத்தகைய அணுகுமுறை திட்டமிடப்பட்டதோ என்று. சமசுகிருதத்தையும், இந்தியையும் இந்தி பேசாத மாநிலங்கள் குறிப்பாக தமிழக மக்கள் மீது திணிப்பதற்கான விரிந்த திட்டத்தின் பகுதியோ என்று. இப்படியே தொடர்ந்து செய்தால் இந்தி பேசாத மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் களைத்துப் போய் எதிர்க்கும் ஆற்றலை இழந்து விடுவார்கள் என்று மத்திய அரசு நினைக்கக் கூடும். 

எங்கள் வரலாறு

ஆனால் நான் அழுத்தமாக ஒன்றைப் பதிவு செய்ய விரும்புகிறேன். எங்கள் தமிழ்நாடு இந்தித் திணிப்பு முயற்சிகளுக்கு எதிராக உறுதியாகப் போராடிய, பல தியாகங்களையும் புரிந்த தனித்துவம் மிக்க வரலாற்றைக் கொண்டது. ஆகவே நாங்கள் களைத்துப் போய் விட மாட்டோம். எங்கள் அடையாளத்தை பெருமை மிகு கலாச்சாரத்தை பலவீனமுறச் செய்யும் நடவடிக்கைகளை உறுதியாக எதிர்த்து முறியடிப்போம். 

உங்கள் அமைச்சக அதிகாரிகள் இந் நாட்டின் சட்டத்தை மீறியிருக்கிறார்கள். உங்கள் அரசாங்கம் நீதி மன்றத்தின் முன்பு அளித்த உறுதி மொழியை மீறியிருக்கிறார்கள். இது நீதி மன்ற அவமதிப்பு ஆகும். 

ஆகவே உங்கள் இந்திக் கடிதத்தை உங்களுக்கே திருப்பி அனுப்புகிறேன். உங்கள் அமைச்சகம் இப்படி ஆத்திரமூட்டுகிற நடவடிக்கைகளில் எதிர் காலத்தில் ஈடுபடக் கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுரை கூறுமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன் என்று சு. வெங்கடேசன் எம்.பி அக் கடிதத்தில் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

;