tamilnadu

img

கீழடி அகழாய்வில் மகத பேரரசு கால வெள்ளிக் காசு...

மதுரை:
சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி அகழாய்வுத் தளத்தில் தற்போது ஏழாவது கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதில் சில நாட்களுக்கு முன்பாக, வெள்ளியினால் ஆன முத்திரையிடப்பட்ட காசு ஒன்று கிடைத்துள்ளது.

146 செ.மீ ஆழத்தில் கிடைத்த இந்தக் காசில் முன்புறம் சூரிய சந்திரர்கள், காளை, எருது, நாய் போன்ற குறியீடுகளும் பின்புறம் அரைவட்டம் மற்றும் ‘ட’ வடிவக் குறியீடுகளும் காணப்படுகின்றன.இந்தக் காசு குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாநில தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “2.20 கிராம் எடையுள்ள இந்த வெள்ளிக் காசு, வட புலத்தாருடன் நம் பழந்தமிழர் கொண்டிருந்த வணிகத் தொடர்புகளுக்கான மற்றுமொறு சான்று” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் முதன் முதலாக அச்சடிக்கப்பட்ட சிறப்பு இந்த முத்திரைக் காசுகளுக்கு உண்டு. இவை கி.மு. 6 ஆம் நூற்றாண்டிலிருந்து 3ஆம் நூற்றாண்டுவரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை” என்று சென்னையைச் சேர்ந்த நாணய ஆய்வாளரான மன்னர் மன்னன் கூறியுள்ளார்.இந்த காசில் உள்ள சூரிய - சந்திரன் உருவம், நாயின் உருவம், சக்கர உருவம் ஆகியவற்றைப் பார்க்கும்போது இந்தக் காசு மதகப் பேரரைச் சேர்ந்த ஜனபாதா (janapatha) என்ற வகையைச் சேர்ந்த முத்திரைக்காசாக இருக்கலாம் என்றும் இவை கி.மு. 300க்கும் 500க்கும் முன்பாக வெளியிடப்பட்டவை என்றும்  மன்னர் மன்னன் தெரிவித்துள்ளார்.இந்த காலகட்டத்தைச் சேர்ந்த காசுகள், கீழடியில் மட்டுமல்லாமல், இதற்கு முன்பு தமிழ்நாட்டில் நடந்த பல அகழாய்வுகளில் கிடைத்துள்ளன என்றும் மகத பேரரசுடன் நடந்த வணிகத்திற்கு இவை சான்றாக இருக்கின்றன என்றும் மன்னர் மன்னன் குறிப்பிட்டுள்ளார்.கீழடியில் நடந்த அகழாய்வில் இதற்கு முன்பாக சில நூற்றாண்டுகளே பழமையான வீரராயன் தங்க பணம்,ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிரிய நாணயம், ரோமானிய நாணயங்கள் போன்றவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

;