tamilnadu

img

சிபிஎம் நெல்லை மாவட்ட மூத்த தலைவர் தோழர் எஸ்.கே.பழனிச்சாமி மறைவு

நெல்லை,ஆக.18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட மூத்த தலைவர்,  தோழர்களால் எஸ்.கே.பி. என்று அன்போடு அழைக்கப்படும் எஸ்.கே.  பழனிச்சாமி அவர்கள் ஆகஸ்ட் 18 வியாழனன்று மாலை  கால மானார்.  அவருக்கு வயது 77.   தோழர் எஸ்.கே.பழனிசாமி 20.11.1945 அன்று வீரவநல்லூரில் பிறந்தார்.  வீரவநல்லூரில் உள்ள டிடிடிஏ  பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரை பயின்றவர்.   சிறு வயதில் சைக்கிள் கடையிலும், தையல் கடையிலும் தொழிலாளியாக வாழ்க்கையை துவக்கினார்.  பின்னர் வீரவநல்லூர் கோமதி மில்லில் தொழி லாளியாக வேலைக்கு சேர்ந்தார்.  வீரவநல்லூர் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக தேர்வாகி செயல்பட்டார்.  

இச்சங்கத்தின் ஆலோசக ராக தோழர் ஏ.நல்லசிவன் செயல்பட்டார். பின்னர் உரு வான நெல்லை மாவட்ட பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும் நீண்ட காலம் செயல்பட்டார்.  1970  இல் நெல்லை மாவட்டத்தில் சிஐடியு அமைப்பு உருவாக்கப்பட்டபோது அதன் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டார்.   1962 ஆம் ஆண்டில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக சேர்ந்தார்.  1964 இல் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உருவானபோது மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண் டார்.  கோமதி மில் நிர்வாகம் இவரை டிஸ்மிஸ் செய்த  பிறகு 1970 இல் கட்சியின் முழுநேர ஊழியராகி தன் இறுதிக் காலம் வரையிலும், கட்சிஊழியராக செயல்பட்டார்.  பல போராட்டங்களில் கலந்து கொண்டு  6 மாதங்கள் சிறையில் இருந்தார்.  1986 மற்றும் 2011 இருமுறை வீரவநல்லூர் பேரூராட்சிதலைவராக  சிறப்பான முறையில் செயல்பட்டார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அம்பை தாலுகா செயலாளராக, மாவட்ட செயற்குழு உறுப்பினராக நீண்ட காலம் செயல்பட்டார்.   அம்பை வட்டார கைத்தறி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்களை தலைமையேற்று நடத்தியவர்.  அம்பை வட்டார பொது மக்களின் நன்மதிப்பை பெற்றவர்.  அவருடைய மறைவுக்கு கட்சியின் நெல்லை மாவட்டக் குழு அஞ்சலி செலுத்துகிறது என மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் கூறியுள்ளார்.  

கே.பாலகிருஷ்ணன் இரங்கல்

தோழர் எஸ்.கே.பழனிசாமி மறைவுக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு  உறுப்பினர் ஆர். கருமலையான், மாநில செயற்குழு உறுப்பினர்  கே. கனகராஜ், மாநிலக் குழு உறுப்பினர்கள் கே.ஜி. பாஸ்கரன், பி.கற்பகம், மாவட்டச் செயலாளர் கே. ஸ்ரீராம் மற்றும் மூத்த தலைவர் வீ. பழனி உள்ளிட் டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 

 

;